சரும பராமரிப்பு

சருமம் காப்பது சிரமம் அல்ல!

வெள்ளைத் தோலோ, கறுப்புத் தோலோ, அது அழகுக்கான விஷயம் மட்டுமா, அதுதான் ஆரோக்கியத்துக்கான காவல் அரணும் கூட. உடலின் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருப்பது, தொடுதலை உணரவைப்பது, வெயில், கிருமித் தொற்றில் இருந்து காப்பது, வைட்டமின் டி உற்பத்தி என தோலின் பயன்களும் பணிகளும் ஏராளம்!

p60b

ஊட்டச்சத்து மிக்க உணவை எடுத்துக்கொள்ளாதது, போதிய அளவு தண்ணீர் அருந்தாதது, பராமரிப்பு இன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சருமம் சீக்கிரத்தில் பாதிப்புக்கு உள்ளாகிறது. தினமும் எளிதில் கிடைக்கக்கூடிய சில காய்கறி, பழங்களைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வதன் மூலம் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். இதுபற்றி சரும ஆராய்ச்சியாளர் மற்றும் பொது நல மருத்துவர் ஜெயக்குமாரிடம் கேட்டோம்.

தண்ணீர்

நம் சருமத்தை ஆரோக்கியமாக வைக்க அதிக அளவில் தண்ணீர் அருந்த வேண்டும். தினமும் ஒன்றரை லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்கும்போது சருமத்துக்குத் தேவையான ஈரப்பதம் கிடைக்கிறது. இதனால், நம் தோலில் உள்ள சுருக்கங்கள் மறைந்து தோல் பளபளப்புடன் அழகாக இருக்கும்.

குட மிளகாய்

தோலை அழகாக்குவதில் குட மிளகாய்க்கு முக்கிய பங்கு உண்டு. இதில் வைட்டமின்கள் ஏ, சி, கே மற்றும் நார்ச்சத்து உள்ளன. இதை, உணவில் தொடர்ந்து பயன்படுத்திவந்தால் தோலில் உள்ள சுருக்கங்கள், நிறக் குறைவு மற்றும் தோல் பிளவுகள் மறையும். முக்கியமாக, இதில் கலோரி மிகக் குறைவாகவே இருப்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் கூட இதை எடுத்துக்கொள்ளலாம். குடல் புண்ணை ஆற்றும் வலிமையும் இதற்கு உண்டு.

டார்க் சாக்லெட்

இரும்பு, கால்சியம், ஏ, பி, சி, டி, ஈ ஆகிய வைட்டமின்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைவாக உள்ளன. இதில், ஃபிளவனாய்ட்ஸ் உள்ளிட்ட ஆன்டி ஆக்சிடெண்ட்களும் உள்ளன. 70 சதவிகிதத்துக்கும் மேலாக கோக்கோ பவுடரைப் பயன்படுத்தி செய்யப்படும் இந்த வகையான சாக்லெட்டுகள் சருமத்தை மினுமினுப்பாக, மென்மையாக, அழகாகக் காட்டுவதற்கும், உலர்ந்துபோகும் பிரச்னையை சரிசெய்யவும் உதவுகின்றன. புறஊதாக் கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்கும் தன்மை இதில் உள்ளது. ஆனால் சர்க்கரை நோய், இதய நோய் உள்ளவர்கள் தங்கள் மருத்துவரிடம் ஆலோசித்த பிறகே சாப்பிட வேண்டும்.

கிரீன் டீ

இயற்கையின் சிறந்த வரம் கிரீன் டீ. இதனைத் தொடர்ந்து குடித்து வந்தால், சூரியனில் இருந்து வரும் வெப்பத்தாக்கங்களைத் தடுக்கின்றன. கிரீன் டீ-யில் கொழுப்புச்சத்து இல்லை. எனவே, ஒரு நாளைக்கு எவ்வுளவு வேண்டுமானாலும் பருகலாம். இதில் உள்ள ஆன்டிஆக்சிடெண்ட் தோலைப் பளபளப்பாகவும், மிருதுவாகவும் வைக்க உதவுகின்றன. இதய நோய் உள்ளவர்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.

p60a

விதைகள்

சூரியகாந்தி, பூசணிக்காய் மற்றும் ஆளி (Flax) செடிகளின் விதைகளில் ஒமேகா 3 கொழுப்புச் சத்து உள்ளது. இவை நம் சருமத்தின் ஈரப்பதத்தை சமன்படுத்தத் தேவையான வைட்டமின் ஈ, புரதச்சத்து கிடைக்க உதவுகிறது. சூரியகாந்தி விதைகள் தோல் பாதுகாப்புக்கு உதவுவதுடன், உடல் பருமனையும் குறைக்கும். மேலும், தைராய்டு உள்ள பெண்களுக்கு கழுத்தில் ஏற்படும் சுருக்கத்தை குறைக்க உதவும்.

பப்பாளி

உணவாகவும் சாப்பிடலாம். அரைத்து முகத்தில் தடவினாலும் கண்டிப்பாகப் பலன் உண்டு. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் இ, சி மற்றும் நார்ச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. தோல் பொலிவு தரும். பெண்களின் முறையான மாதவிலக்குக்கு உதவும். தோல் வெடிப்புக்கு இது சிறந்த மருந்து . ஆனால், குறிப்பிட்ட அளவுதான் உண்ண வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button