மருத்துவ குறிப்பு

இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி – 7

இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி – 7

14

ருத்துவக் காப்பீடு வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றிப் பார்த்துவருகிறோம். நிறுவனத்தின் பின்னணி, க்ளெய்ம் செட்டில்மென்ட், கட்டணம்… போன்ற சில முக்கியமான விஷயங்களைப் பார்த்தோம். இந்த இதழில், இதர ஆறு முக்கியமான விஷயங்களைப் பார்க்கலாம்.
இணைக் கட்டணம்
ஒரு சில நோய்களுக்கு இணைக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இது, அந்த பாலிசி ஆவணத்தில் தெளிவாக விளக்கப்பட்டு இருக்கும். அதாவது, சில நோய்களுக்கு சிகிச்சை பெறும்போது, அதில் குறிப்பிட்ட சதவிகிதத்தை நாம் செலுத்த வேண்டியிருக்கும். இது, சுமார் 20 முதல் 40 சதவிகிதம் வரை இருக்கும். ஆகையால், எந்தெந்த நோய்களுக்கு இணைக் கட்டணம் இருக்கிறது என்பதை அறிந்துகொள்வது அவசியம்.

15

குறிப்பு: ஒரு மருத்துவக் காப்பீடு எடுப்பதற்கு முன்னர் இணைக் கட்டணம் பற்றி தீர விசாரித்துவிட்டு, பிறகு எடுப்பது மிகவும் அவசியம்.
புதுப்பித்தல் வயது
பல பொதுத்துறைக் காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் சில தனியார் காப்பீட்டு நிறுவனங்களில் பாலிசி புதுப்பித்தல் வயது 70 முதல் 80 வயது வரை மட்டுமே இருக்கிறது. ஆனால், மருத்துவக் காப்பீடு எடுப்பதின் முக்கியக் காரணமே, வயதாகும்போது நோய்களும் அதிகமாகும். அதனால், வரும் மருத்துவச் செலவுகளும் அதிகமாகும். இதைக் கட்டுப்படுத்தவே நாம் மருத்துவக் காப்பீடு எடுக்கிறோம். எனவே, எந்த நிறுவனம் எந்த வயது வரை புதுப்பித்தலை அனுமதிக்கிறது எனத் தெரிந்துகொண்டு பாலிசி எடுப்பது நல்லது.

16

குறிப்பு: ஒரு சில தனியார் மற்றும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள், ஆயுள் முழுவதும் புதுப்பிக்குமாறு பாலிசிகளை வழங்குகின்றன. அவற்றைப் பார்த்து வாங்குவது நல்லது.
மூத்த குடிமக்கள் பாலிசி
சில நிறுவனங்கள் நுழைவு வயதை 60 என்று வைத்து, மூத்த குடிமக்களுக்கான பாலிசிகளை வழங்கிவருகின்றன. மேலும், இந்த பாலிசியை வாழ்நாள் புதுப்பித்துக்கொள்ளும் வசதியையும் அளிக்கின்றனர்.

17

குறிப்பு: 60 வயதுக்கு மேற்பட்டவரானால், மூத்த குடிமக்களுக்கான பிரத்யேக பாலிசி வாங்குவது நல்லது.
கவரேஜ்
திருமணமாகாதவராக இருந்தால், தனி நபர் பாலிசி எடுத்துக்கொள்வது நல்லது. ‘திருமணமான பின்பு உங்கள் மனைவியை இதே பாலிசியில் சேர்க்கவும் முடியும்.’
திருமணமாகி, குழந்தைகளுடன் இருந்தால், உங்களுக்கு, மனைவிக்கு, குழந்தைகளுக்கு என அனைவருக்குமான ஒரு குடும்ப பாலிசியைத் தேர்வுசெய்வது நல்லது.  தனி நபராக இருந்தால், குறைந்தபட்ச கவரேஜாக இரண்டு லட்ச ரூபாய் முதல் அதிகபட்சமாக ஐந்து லட்ச ரூபாய் வரை எடுத்துக்கொள்வது நல்லது. குடும்பத்தலைவராக இருந்தால், குறைந்தபட்சமாக ஐந்து லட்ச ரூபாய் முதல் அதிகபட்சமாக 10 லட்ச ரூபாய் வரை எடுத்துக்கொள்வது நல்லது.

18

குறிப்பு: ஓர் ஆண்டில் எந்தவிதமான மருத்துவச்செலவும் இல்லாதபோது போனஸ் வழங்குகிறது. இந்த போனஸை இரண்டு வெவ்வேறு வழிகளில் காப்பீட்டு நிறுவனங்கள்  வழங்குகின்றனர்.சில நிறுவனங்கள், கட்டவேண்டிய ப்ரீமியம் தொகையில் தள்ளுபடி அளிக்கின்றனர். சில நிறுவனங்கள், காப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்குகின்றனர்.
சிறப்பு பாலிசிகள்
சில நிறுவனங்கள், சிறப்பு பாலிசிகளை வழங்குகின்றனர். உதாரணத்துக்கு, சர்க்கரை நோய் உள்ளவர்கள், பாலிசி எடுக்க முடியாத நிலை முன்னர் இருந்தது. ஆனால், இப்போது, சில நிறுவனங்கள், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு எனப் பிரத்யேக பாலிசியை வடிவமைத்து, அவர்களின் குறையைப் போக்கி உள்ளன. சில நிறுவனங்கள், பெண்களுக்கு வரும் நோய்களான கர்ப்பப்பை, மார்பகப் புற்றுநோய்களுக்கான சிறப்பு பாலிசிகளை வழங்குகின்றன.
குறிப்பு : `ரிஸ்க் ஃபேக்டர்’ எனப்படும், நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ள தன்மையை அறிந்து, அதற்குத் தகுந்தாற்போல் பாலிசி எடுப்பது மிகவும் அவசியம்.
பாலிசி மதிப்பு
காப்பீடு எடுப்பவர்களில் பலரும் செய்யும் தவறு, ப்ரீமியம் எவ்வளவு என்பதில் கவனம் செலுத்துவதுதான். மருத்துவக் காப்பீடு வாங்கும் போது, வெறுமனே ப்ரீமியத்தின் விலையை மட்டும் பார்க்காமல், பாலிசியின் அனைத்து நன்மைகளையும் அறிந்துகொண்டு அதற்கு முக்கியத்துவம் கொடுத்து முடிவு செய்ய வேண்டும். ப்ரீமியம் அதிகமாக இருந்தாலும் நமக்கு கிடைக்கக்கூடிய பலன்களைப் பார்த்து வாங்க வேண்டும். அப்படி இல்லை எனில், எதிர்காலத்தில் க்ளெய்ம் பெறும்போது சிக்கல் ஏற்படக்கூடும்.

19

குறிப்பு: ப்ரீமியம் சற்று அதிகமாக இருந்தாலும், அதன் சேவைத் தரம் அதிகமாக இருக்கிறது எனத் தெரிந்தால், குறைந்த ப்ரீமியம் பாலிசியே போதும் என்று சமரசம் செய்துகொள்ளக் கூடாது. மருத்துவக்காப்பீடு வாங்கும்போது ஒவ்வொரு விஷயத்திலும் சந்தேகம்கொண்டு தீர்வு காண வேண்டும். ஆனால், மருத்துவக் காப்பீடே தேவைதானா என்கிற சந்தேகம் கூடாது். சேமியுங்கள், முதலீடு செய்யுங்கள், நீங்கள் சம்பாதிப்பதை என்ன வேண்டுமானாலும் செய்ய உங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால், மருத்துவக் காப்பீடு எடுப்பதன் மூலம், அதிகரித்துக்கொண்டே இருக்கும் மருத்துவச் செலவுகளைக் குறைக்கலாம். எனவே, ஒவ்வொருவருக்கும் தேவை ஒரு மருத்துவ பாலிசி!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button