தலைமுடி சிகிச்சை

கருகரு கூந்தலுக்கு கறிவேப்பிலை

உணவில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள் கறிவேப்பிலை. கொசுறாக வாங்கினாலும் அதன் பலன்களோ மிக மிக அதிகம். தமிழர்கள் இதன் பெருமையை அறிந்திருப்பதால்தான் குழம்பு, கூட்டு, பொரியல், ரசம், நீர் மோர் என அனைத்திலும் கறிவேப்பிலையைப் பயன்படுத்துகின்றனர். கறிவேப்பிலை மணம், சுவை மட்டும் கொண்டதல்ல, பல்வேறு மருத்துவக் குணங்களும் கொண்டது; தாதுஉப்புகள், வைட்டமின்கள் நிறைந்தது.

உலர்ந்த கறிவேப்பிலையை நன்றாகப் பொடிசெய்து, மிளகாய் வற்றல் பொடி அல்லது மிளகுத் தூளுடன் கலந்துகொள்ள வேண்டும். இதனுடன் உப்பு, சீரகம், சுக்குப்பொடி ஆகியவற்றைத் தேவையான அளவு சேர்த்து, நன்றாக அரைத்துப் பொடித்து, சிறிதளவு நெய் விட்டு இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்துச் சாப்பிட்டுவந்தால், மந்தம், மலக்கட்டு ஆகியவை சரியாகும்.

கறிவேப்பிலையுடன் சுட்ட புளி, வறுத்த உப்பு, வறுத்த மிளகாய் சேர்த்து துவையல் செய்து உணவுடன் கலந்து சாப்பிட, சுவையின்மை, கழிச்சல், பித்த வாந்தி, செரிமானப் பிரச்னை போன்றவை குணமாகும்.

சித்த மருத்துவமுறையில் தலைமுடிக்குத் தயாரிக்கும் தைலத்தோடு, கறிவேப்பிலையைச் சேர்த்துக் காய்ச்சித் தடவினால், தலைமுடி நன்றாக வளருவதோடு கருமையாகவும் இருக்கும்.

அரிசியோடு கறிவேப்பிலையைச் சேர்த்து உரலில் குத்தி, நன்றாகப் புடைத்து, பழுத்து உலர்ந்த ஒரு மிளகாயைச் சேர்த்துக் கருக்கி, வசம்புச்சாம்பல், சிறுநாகப்பூ, அதிவிடயம் சேர்த்து, நீர்விட்டு, சுண்டக்காய்ச்சிக் குடித்தால், அஜீரணம், வயிற்றுப்போக்கு குணமாகும்.
இரண்டு கைப்பிடி கறிவேப்பிலை இலைகளை காம்பு நீக்கி, ஒரு பாத்திரத்தில் சுமார் 400 மி.லி நீர் சேர்த்துக் கொதிக்கவைத்து, நீர் பாதியாகும் வரை சுண்டக்காய்ச்சி வடிகட்டி, மூன்று வேளையும் சுமார் 50 மி.லி குடித்துவந்தால், சளி, இருமல் குணமாகும்.

பெருஞ்செடி வகையைச் சேர்ந்தது கறிவேப்பிலை. கறிவேப்பிலைக்கு நல்ல மணம் உண்டு. வீட்டின் முன்புறம், பின்புறம் என ஏதாவதோர் இடத்தில் கறிவேப்பிலைச் செடி வளர்ப்பது நல்லது.p45b

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button