தேன் மெழுகு மலர்க் கொடி

C0521_16தேவையான பொருட்கள்

தேன் மெழுகு – சிவப்பு, பச்சை நிறங்கள்
கேக் மெழுகுவர்த்தி – மஞ்சள் நிறம்
இதய வடிவ குக்கி கட்டர் – 2 அளவுகளில்
இலை வடிவ குக்கி கட்டர்
சிறிய பூ வடிவ குக்கி கட்டர்
சிறிய வட்ட வடிவ குக்கி கட்டர்
ரவுண்டட் டிப் க்ளே மாடலிங் டூல் (Rounded tip clay modelling tool)
ஹேர் ட்ரையர்
கத்தி
கத்தரிக்கோல்
காலண்டர் பேப்பர் / பேக்கிங் ஷீட்
க்ராஃப்ட் க்ளூ
சாஸர்
உயரமான சதுர வடிவ மெழுகுவர்த்தி & பொருத்தமான தட்டு

 

செய்முறை

தேவையானவற்றைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். வேலை செய்யும் மேற்பரப்பில் காலண்டர் பேப்பர் அல்லது பேக்கிங் ஷீட் விரித்துக் கொள்ளவும். (நியூஸ் பேப்பர் பயன்படுத்த வேண்டாம். மெழுகிலுள்ள எண்ணெய்ப் பசை காரணமாக எழுத்துகள் பதிந்து கெட்டுவிடலாம்).

இதய வடிவ குக்கி கட்டரை வைத்து சிவப்பு நிற தேன்மெழுகில் ஒவ்வொரு பூவுக்கும் நான்கு இதயத் துண்டுகள் வீதம் வெட்டிக் கொள்ளவும்.

ஒரு துண்டை மட்டும் சாஸரில் எடுத்து, ஹேர் ட்ரையரை மிதமான சூட்டில் வைத்துக் காட்டவும். மெழுகு மெதுவே மினுக்கமடைய ஆரம்பிக்கும். (சாஸரில் வைக்காவிட்டால் பறந்துவிடும். இளகும் போது கடதாசியில் நிறம் இறங்கவும் கூடும்). இளகிய துண்டை விரல்களிடையே பிடித்து இதழ் போல வளைத்துக் கொள்ளவும்.

பச்சை நிறத்தில் சிறிய வட்டம் ஒன்று வெட்டி எடுத்து சூடு காட்டி நடுவில் மாடலிங் டூல் வைத்து குழிவாக அழுத்தி எடுக்கவும். சுழற்றிபடி அழுத்தவும். இல்லையெனில் டூல் மெழுகோடு ஒட்டிக் கொள்ளும். அதன் பிறகு இதழ் ஒன்றின் முனையைச் சூடு காட்டி பச்சை வட்டத்தில் வைத்து இப்படி அழுத்தவும்.

மீதி இதழ்களையும் இவ்வாறு இணைத்து எடுக்கவும்.

மஞ்சள் நிற மெழுகை சிறு துண்டுகளாக்கி சூடு காட்டி சிறிய மணிகளாக உருட்டிக் கொள்ளவும். (என்னிடம் மஞ்சள் நிறத் தேன் மெழுகு இருக்காத காரணத்தால்தான் மெழுகுவர்த்தியைப் பயன்படுத்தியிருக்கிறேன்).

இவற்றை இளக்கி பூவின் மத்தியில் மகரந்தம் போல் வைத்து அழுத்திவிடவும்.

சிறிய பூக்கள் வெட்டி எடுத்து முன்பு செய்தது போலவே சூடு காட்டவும். மாடலிங் டூல் குமிழ் முனையை வைத்து அழுத்தினால் இதழ் குழிவாக வரும்.

பூவைத் திருப்பிப் பிடித்து இதே போல் நடுவிலும் ஒரு முறை அழுத்தி எடுக்கவும். இதன் நடுவிலும் மகரந்தம் வைத்துவிடவும்.

கத்தரிக்கோலால் பச்சை நிறத்தில் 3 மில்லி மீட்டர் அகலமான நீளத் துண்டுகள் சில வெட்டி எடுக்கவும்.

இவற்றைச் சூடுகாட்டி மெதுவே உள்ளங்கைகளின் நடுவில் வைத்து உருட்டவும்.

பச்சை நிறத்தில் இலை வடிவங்கள் சில வெட்டி வைக்கவும்.

இலைகளின் அடிப்பாகத்தைச் சூடு காட்டி உருட்டி வைத்துள்ள துண்டு ஒன்றின் மேல் இப்படி ஒட்டி வைக்கவும்.

இதய வடிவத் துண்டு ஒன்றை இளக்கி, பூவிற்கு தயாராக்கியது போல் வளைத்து எடுக்கவும். அதன் வளைவான பகுதியிலிருந்து ஆரம்பித்து மொட்டு போல ஓரங்களை இணைத்து ஒட்டவும். ஒட்டும் போதே உள்ளே காம்பையும் சொருகிவிட்டு ஒட்டவும்.

இலைகள் வெட்டியதில் மீந்து போனவற்றிலிருந்து சிறிய முக்கோணத் துண்டுகள் சில தெரிவு செய்து மொட்டைச் சுற்றி ஒட்டவும்.

போதுமான எண்ணிக்கை பூக்கள், இலைகள் தயாரானதும். மெழுகுவர்த்தியை தட்டில் உறுதியாக ஒட்டிக் கொண்டு விரும்பியவாறு அலங்கரிக்கலாம். பூக்கள், இலைகளை மீண்டும் சிறிது சூடுகாட்டிவிட்டு தேவையான இடத்தில் வைத்து டூல் அல்லது கத்தி முனையினால் மெதுவாக அழுத்திவிட்டால் ஒட்டிக்கொள்ளும்.

தேன் மெழுகு தடிப்பாக இருப்பதால் கட்டர் மாவில் இறங்குவது போல சுலபமாக இறங்காது. கையை வெட்டாமலிருக்க ஒரு சிறு அட்டைத் துண்டை கட்டருக்கும் கைக்கும் இடையில் வைத்துக் கொள்ளவும்.

ஒவ்வொரு துண்டாக வெட்டி நீக்க வேண்டும். எல்லாவற்றையும் ஒன்றாக வெட்டிவிட்டு கட்டரிலிருந்து வெளியே எடுக்க முனைந்தால் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளும். கட்டரை அதிகம் அழுத்தாமல் சுற்றிலும் கத்தியால் வரைந்தும் வெட்டலாம்.

மெழுகுவர்த்தியை ஜன்னலோரங்களிலோ மேசைவிளக்கின் அருகிலோ வைக்க வேண்டாம். இளகினால் பாகங்கள் கழன்று விழுந்துவிடும். விரும்பினால் க்ராஃப்ட் க்ளூ கொண்டு ஒட்டிக்கொள்ளலாம்.

Leave a Reply