மேக்கப்

வேனிட்டி பாக்ஸ்: பெர்ஃப்யூம்

பூ வாசம் புறப்படும் பெண்ணே நீ பூ வரைந்தால்…’ என்பது கற்பனைக்கு வேண்டுமானால் அழகாக இருக்கலாம். நிஜத்தில் யாருக்கும் இயற்கையிலேயே உடலில் நறுமணம் வீசுவதில்லை. அழகுசாதன அலமாரியில் அவசியமான பொருளாக இடம் பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன பெர்ஃப்யூம்கள். ஆண்களுக்குத் தனியே, பெண்களுக்குத் தனியே, காலை நேரத்துக்கு ஒன்று, மதியத்துக்கு ஒன்று, மாலைக்கு ஒன்று, இரவுக்கு ஒன்று என நேரத்துக்கேற்ற விதம் விதமான சென்ட்டுகள் இன்று கிடைக்கின்றன.

சிலருக்கு சென்ட் வாசனையே ஆகாது என்றால் பலருக்கு அது இல்லாமல் இருக்கவே முடியாது. அந்தக் காலங்களில் உடலை நறுமணத்துடன் வைத்திருக்க இயற்கையான பூக்கள், அரோமா எண்ணெய்கள், மூலிகைகள் போன்றவற்றைப் பயன்படுத்தினார்கள். இன்று அவற்றின் இடத்தில் விதம் விதமான, காஸ்ட்லியான பெர்ஃப்யூம் வகைகள்…

பெர்ஃப்யூம் என்பது பெரும்பாலும் ரசாயனங்களின் கலப்பே. எனவே, அவற்றைத் தேர்ந்தெடுக்கும் போது மிகுந்த கவனம் அவசியம்” என்கிறார் அழகுக்கலை நிபுணர் உஷா. பெர்ஃப்யூமில் சேர்க்கப்படுகிற ரசாயனங்கள் பற்றியும் அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றியும் விளக்குவதுடன், தரமான பெர்ஃப்யூமை தேர்ந்தெடுக்கும் விதங்களையும் விளக்குகிறார் அவர்.

`A rose is a rose is a rose’ என்பது வாசனைத் திரவியங்களுக்குப் பொருந்தாத பொன்மொழி. ரோஜா வாசனை தருகிற சென்ட்டில் டன் டன்னாக ரோஜாக்களை சேர்த்துத் தயாரிப்பதாக நீங்கள் நினைத்தால் ஏமாந்து போவீர்கள். அத்தனையும் கெமிக்கல்!

சென்ட் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிற கெமிக்கல்களில் 95 சதவிகிதம் பெட்ரோலியத்தில் இருந்து எடுக்கப்படுபவை. FDAவின் அறிக்கையின் படி ஒவ்வாமைக்கான காரணங்களில் 30 சதவிகிதம் பெர்ஃப்யூம் எனப்படுகிற வாசனைத் திரவியங்களால் ஏற்படுபவையே. ஒரு பெர்ஃப்யூமின் வாசனையைத் தீர்மானிப்பதே அதில் சேர்க்கப்படுகிற கெமிக்கல்கள்தான். மிதமான வாசனைக்கு மிதமான அளவு கெமிக்கல்களும் ஸ்ட்ராங்கான வாசனைக்கு அதற்கேற்றபடி ஸ்ட்ராங்கான கெமிக்கல்களும் பயன்படுத்தப்படும். அப்படி சேர்க்கப்படுகிற பெரும்பாலான கெமிக்கல்கள் நச்சுத்தன்மை வாய்ந்தவையே.

பெர்ஃப்யூம்களில் உள்ள ஆபத்தான கெமிக்கல்கள்…

Acetaldehyde

பழங்களின் வாசனையைக் கொடுக்கக்கூடிய இவை புற்றுநோயை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானவை.

Acetonitrile

இந்த கெமிக்கல் தலைவலி, பலவீனம், வாந்தி, மரத்துப் போதல், நடுக்கம் போன்றவற்றை ஏற்படுத்தலாம். அளவுக்கதிகமாக சேர்க்கப்படும் போது வலிப்பைக் கூட ஏற்படுத்தலாம் என எச்சரிக்கப்படுகிறது.

Musk tetralin

மூளை மற்றும் முதுகெலும்பைப் பாதிக்கும் அளவுக்கு அபாயமானது.

Phthalates

ஹார்மோன் சுரப்பிகளையும் இனப்பெருக்க உறுப்புகளையும் பாதிக்கக் கூடியது. இந்த கெமிக்கலை பெரும்பாலும் நிறம் மற்றும் நறுமணம் அதிகம் சேர்த்துத் தயாரிக்கிற அழகு சாதனங்களில் கலக்கிறார்கள்.

Styrene Oxide

மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடிய இந்த கெமிக்கல் சருமத்தில் ஒவ்வாமையையும் கண் எரிச்சலையும் ஏற்படுத்தக்கூடியது.

Toluene

பெட்ரோலியம் க்ரூட் ஆயிலில் இருந்து எடுக்கப்படுவது. நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், இதயம், நரம்பு மண்டலம் என எல்லாவற்றையும் பாதிக்கக்கூடியது. தலைவலி, மறதி, மூளைச் செயலிழப்பு, கேட்கும் திறன் பாதிப்பு போன்றவற்றையும் ஏற்படுத்தக்கூடியது. பெரும்பாலும் பெர்ஃப்யூம்கள் என்பவை ஆயிரக்கணக்கான வேறு வேறு பொருட்கள், கெமிக்கல்களின் கலவையாகவே இருப்பதால், அத்தனையையும் பரிசோதனைக்கு உட்படுத்தி, பாதுகாப்பானவைதானா எனப் பார்க்கப்படுவதில்லை.
பெர்ஃப்யூம் பாட்டில்களில் அதில் கலக்கப்படுகிற அத்தனை பொருட்களின் பெயர்களும் பட்டியலிடப்படுவதில்லை. அத்தகைய
பொருட்களால் தலைவலி, மூக்கடைப்பு, கண் எரிச்சல், ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் மிகவும் சாதாரணமாக ஏற்படுவதைப் பார்க்கலாம்.

அதிக வாசனை கொண்ட பெர்ஃப்யூம்கள் 4ல் 3 பேருக்கு சுவாசப் பிரச்னைகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கர்ப்ப காலத்தில் பெர்ஃப்யூமில் உள்ள கெமிக்கல்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகிற பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தை குறைபாடுகளுடன் இருக்கும் வாய்ப்புகளும், ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் அபாயமும் அதிகமாவதாகவும் அந்தத் தகவல்கள் எச்சரிக்கின்றன. அதனால், பெர்ஃப்யூம் உபயோகிப்பதை தினசரி வாடிக்கையாக்கிக் கொள்வதைத் தவிர்ப்பதும், என்றோ ஒருநாள் உபயோகிக்கும் போதும் பாதுகாப்பானதாகப் பார்த்துத் தேர்வு செய்வதும், அலர்ஜியோ, வேறு பிரச்னைகளோ தெரிந்தால் உடனடியாக அதை உபயோகிப்பதை நிறுத்துவதுமே பாதுகாப்பானது.

பெர்ஃப்யூமை எப்படித்தேர்வு செய்வது?

ஒரே நேரத்தில் ஏகப்பட்ட சென்ட் வாசனைகளை டெஸ்ட் செய்யாதீர்கள். அதிகபட்சம் 3 வாசனைகளை மட்டும் டெஸ்ட் செய்துவிட்டு, ஒரு சின்ன இடைவெளிவிட்டு, அந்த இடத்தைவிட்டு நகர்ந்து, சிறிது நேரம் கழித்து மறுபடி வேறு வாசனைகளை டெஸ்ட் செய்து தேர்ந்தெடுங்கள். தொடர்ச்சியாக வாசனைகளை முகர்ந்து கொண்டே இருந்தால் உங்கள் முகரும் திறன் குறைவதோடு, தலைவலியும் வரலாம்.

சென்ட் வாங்கும் போது உங்கள் மணிக்கட்டு அல்லது காதின் பின்புறம் அடித்துப் பாருங்கள். 20 நிமிடங்கள் கழித்து அந்த வாசனையை மறுபடி முகர்ந்து பார்த்து பிடித்திருந்தால் வாங்குங்கள்.

பெர்ஃப்யூம் என்பது ஒருவரது ஆளுமையை வெளிக்காட்டும் விஷயமும்கூட. எனவே, உங்களது வேலை, சமூகத்தில் உங்களது அந்தஸ்து போன்றவற்றைக் கருத்தில் கொண்டு மிதமானதாகவோ, ஸ்ட்ராங்கானதாகவோ உள்ளதைத் தேர்வு செய்யலாம்.

எல்லா நேரமும் ஒரே சென்ட்டை உபயோகிக்க வேண்டும் என அவசியமில்லை. பார்ட்டி, விசேஷங்களுக்கென தனியே ஸ்பெஷல் வாசனையுடன் கூடிய பெர்ஃப்யூமை உபயோகிக்கலாம்.

சென்ட்டுகளை உபயோகிக்கிற முறைகளும் வேறு வேறாக இருக்கும். சிலதை நேரடியாக அப்படியே ஸ்பிரே செய்து கொள்ளலாம். சிலதை தொட்டுத் தடவிக் கொள்ள வேண்டியிருக்கும். வெள்ளை மற்றும் லைட் கலர் உடைகளை அணிகிற போது ஸ்பிரே சென்ட்டுகள் உபயோகிப்பதானால் அவை கறையை ஏற்படுத்துமா எனப் பார்த்து உபயோகிக்கவும். சென்ட் வேறு… பாடி ஸ்பிரே வேறு… எனவே, உடைகளின் மேல் அடித்துக் கொள்ளக்கூடிய பெர்ஃப்யூம்களை நேரடியாக சருமத்தில் படுகிற மாதிரி அடித்துக் கொள்ளக்கூடாது.யாருக்கு என்ன சென்ட்? உங்கள் சென்ட் உங்களைப் பற்றி என்ன சொல்லும்? இயற்கையிலேயே நறுமணத்துடன் திகழ வழிகள் என வாசனைத் தகவல்கள் அடுத்த இதழிலும் தொடரும்.ld4118

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button