வீட்டிற்கு அழகு சேர்க்கும் வண்ணக்கொடிகள்

வீட்டுக்கு அழகு சேர்ப்பவை வண்ணங்களும், அலங்காரங்களும் தான். சூரிய ஒளி, மலர்கள் மற்றும் மஞ்சள் நிறம் எந்த இடத்தையும் பிரகாசப்படுத்த வல்லவையாகும். பிடித்த வடிவங்களில் அறைகலன்களை வாங்கி வீட்டை அழகுப்படுத்துவோம். வீட்டுக்கு உண்மையான அழகை தேடி தருவது இயற்கைதான். முன்பெல்லாம் தோட்டம் வைக்க இடம் இருக்கும். அதில் நமக்கு விருப்பமான செடிகளை வைத்து அழகு பார்ப்பார்கள்.

இன்றைக்கு இடநெருக்கடியில் நாம் அடுக்கமாடி குடியிருப்பு என்றாலும் அந்த இடத்துக்குள் நாம் கொடிகள் வளர்க்கலாம். கொடிகள் என்றதும் பந்தல் கட்டவேண்டும் எனக் கற்பனை செய்ய வேண்டாம். இவற்றுக்காகப் பிரத்தியேகக் கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. எந்த இடங்களிலும் படர வேண்டுமென நினைக்கிறீர்களோ அந்த இடத்தில் படரத்தோதான வசதிகளை ஏற்படுத்தினால் போதும். போதுமான நிலவசதி இல்லாவிட்டால் கூடப்பரவாயில்லை, பெரிய தொட்டிகளில் கூட விதைகளை தூவிக் கொடிகளை வளர்த்து விடலாம்.

பூக்களை தரும் கொடிகளில் இரு வகைகள் உள்ளன. சில வகை கொடிகளில் தண்டுக்கு நெருக்கமாகப் பூக்கும். சிலவற்றில் பூக்கள் கொத்துக் கொத்தாய்ப் பூத்துக் தொங்கும். முதல் வகைக் கொடிகளை தூண்களில் படரவிடலாம். தூணோடு தூணாக அழகிய திரை போலப் படர்ந்து சூழலை அழகுப்படுத்தும். இரண்டாம் வகைக்கொடிகளை கூரை மீது படர விடலாம். படபடவெனப் பரவி கூரையில் பூக்களின் தோரணங்கள் கண்ணைப் பறிக்கும் விதமாக மலர்ந்து பார்ப்போரைக் கவரும்.

செங்குந்தான இடங்களுக்கா அல்லது கிடை மட்டப்பகுதிகளுக்கா என்பதை பொறுத்துத் தேவையான கொடிகளின் விதைகளை வாங்கிக் கொடிகளை வளர்த்து வீட்டை அழகுப்படுத்தலாம். வீடுகளின் ஜன்னல்கள், கதவுகள், வீட்டின் முன் புறசுவர்கள் போன்ற இடங்களில் எல்லாம் தேவைக்கேற்ப கொடிகளை படர விட்டு வீட்டை வண்ணமயமாக்கலாம். பூக்கள் மிகுந்த கொடிகள் வண்ணமயமான தோற்றத்தை தருவதுடன், நறுமணத்தையும் பரப்பும். மேலும், இது போன்ற கொடிகள் நம் இடத்தை அழகாக மாற்றிவிடும்.

Leave a Reply