மருத்துவ குறிப்பு

Male Drinking – What’s the difference between female drinking?|ஆண் குடி – பெண் குடி என்ன வித்தியாசம்…

மது… மயக்கம் என்ன?

அதிர்ச்சி டேட்டா

நாம் இங்கு அலசப் போவது மது என்கிற ரசாயனம் பெண்ணின் உடலில் கூடுதலாக ஏற்படுத்துகிற அபாய விளைவுகளை மட்டுமே. பெண்கள் குடிப்பது தவறு என்கிற போதனையின் வெளிப்பாடாக இக்கட்டுரை எழுதப்படவில்லை என்பதை நினைவில் கொள்க. ஆணோ, பெண்ணோ – ஒருவர் மது அருந்துவது என்பது சட்டத்துக்கு உட்பட்டு அவரது தனிப்பட்ட உரிமையே.

கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் மது அருந்தும் பழக்கம் அதீதமாக அதிகரித்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. அதில் ஆண், பெண், சிறுவர், சிறுமி என எந்தப் பேதமும் இல்லை என்பதே உண்மை நிலை. இச்சூழலில் மதுவானது ஆணின் உடலில் ஏற்படுத்தும் மாற்றங்களுக்கும், அதே மது பெண்களின் உடலில் ஏற்படுத்தும் விளைவுகளுக்கும் இயற்கையாகவே வேறுபாடுகள் உண்டு.

2005-2006 காலகட்டத்தில் எடுக்கப்பட்ட நேஷனல் ஃபேமிலி ஹெல்த் சர்வே முடிவு, தமிழகத்தில் 100ல் ஒரு பெண் குடிப்பதாகக் கூறியதே பலருக்கு அதிர்ச்சியை அளித்தது. வருங்காலத்தில் குடிக்கிற பெண்களின் எண்ணிக்கை ஆண்களோடு போட்டி போடும் என்கிற செய்தி எந்த விதத்திலும் ஆரோக்கியமானதல்ல. புள்ளிவிவரங்கள் இருக்கட்டும்…

பெண்களை ஏன் ஆல்கஹால் வேகமாகவும் அதிகமாகவும் தாக்குகிறது?

இயல்பாகவே ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு அதிக கொழுப்பு விகிதம் உள்ளது. கொழுப்பு ஆல்கஹாலை கிரகிப்பதில்லை என்பதால், அது நேரடியாக ரத்தத்தில் கலக்கிறது. அதனால் உடலும் உள்ளமும் உடனடியாகவே குழப்பம் கொள்கிறது. அதனால்தான், ஆண்கள் குடிப்பதை விட பெண்கள் குறைந்த அளவே உட்கொண்டாலும், அது ஆண்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளை விட அதிக பிரச்னையை ஏற்படுத்துகிறது.

ஒரே எடை கொண்ட ஆணும் பெண்ணும் ஒரே அளவு ஆல்கஹாலை உட்கொண்டாலும் கூட இப்படித்தான். ஆணை விட பெண்ணுக்கு ரத்த ஆல்கஹால் செறிவு அதிகமாகவே இருக்கும். இது மட்டுமல்ல… பெண்களின் ஹார்மோன்கள் மற்றும் என்சைம்கள் ஏற்படுத்தும் வினைகள் தனி.இதனால்தான் அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆணுக்கு 90 மி.லி. அளவு மது பாதகமில்லை என்கிற மருத்துவ அறிவுறுத்தலே, பெண்ணுக்கு என வரும்போது அதில் பாதி அளவே அனுமதிக்கப்படுகிறது.

கல்லீரல் பாதிப்பு

அதிக அளவு மது அருந்தும் பெண்களுக்கு கல்லீரல் வீக்கம் (ஆண்களுக்கு ஏற்படுவதை விட) மிக வேகமாக ஏற்பட்டு லிவர் ஹெபடைட்டிஸ் பாதிப்புக்குள் தள்ளும். இதன் தொடர்ச்சிதான் சிரோசிஸ்.

இதய நோய்கள்

ஆண்களை விட பெண்கள் குறைவாகக் குடித்தாலும் கூட, ஆல்கஹால் சார்ந்த இதய நோய்களின் தாக்கம் பெண்களுக்கே அதிகம். உயர் ரத்த அழுத்தத்தில் தொடங்கும் பிரச்னை நீண்ட தூரம் செல்லும்.

மூளை பாதிப்பு

ஆண்களை விட பெண்கள் குறைவாகக் குடித்தாலும் கூட, மூளை பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம். மூளையின் செயல்திறனில் இழப்பு மற்றும் மூளையின் அளவு சுருங்குதல் போன்ற விசித்திர பிரச்னைகளும் ஏற்படக் கூடும்.

மார்பக கேன்சர்

பிரெஸ்ட் கேன்சர் ஏற்படுவதற்கும் குடிப்பதற்கும் நிச்சயமாக தொடர்பு உண்டு. குடிக்காத பெண்களை விட, தினமோ, அடிக்கடியோ 45 மி.லி. என்கிற குறைந்த அளவே குடிக்கிற பெண்களுக்கு 10 சதவிகித கேன்சர் அபாயம் அதிகம். 45 மி.லி.க்கு அதிகமாகக் குடிக்கிற பெண்கள் ஒவ்வொரு எக்ஸ்ட்ரா பானத்துக்கும் 10 சதவிகித அதிக அபாயத்தைக் கணக்கிட்டுக் கொள்க. ஆஸ்டியோபொரோசிஸ் எலும்புகளின் அடர்த்தியைக் குறைத்துச் சிதைக்கும் ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்னை அதிக அளவு மது அருந்துகிற பெண்களைத் தாக்கும்.விழுதல் / இடுப்பு எலும்பு முறிவுபோதை காரணமாக தவறி விழுந்து காயங்கள் ஏற்படுவதும், இடுப்பு எலும்பு முறிவதும் ஆண்களை விட பெண்களுக்கே அதிகம்.

கர்ப்ப காலம்

கர்ப்பிணியாக இருக்கிற போது குடித்தால், அது தாய்க்கு மட்டுமல்ல… சேய்க்கும் ஆபத்தை அள்ளித் தரும். மதுவே கருச்சிதைவுக்கும் காரணமாகும். கர்ப்ப காலத்தில் குடித்த பெண்களின் குழந்தைகளுக்கு ‘கற்றல் மற்றும் நடத்தை பிரச்னைகள்’ ஏற்படக் கூடும். குழந்தையின் முக அமைப்பிலும் விரும்பத்தகாத மாற்றங்கள் உண்டாகலாம். கொஞ்சூண்டு குடித்தால் கூட சிக்கல்தான். குடிக்கிற கர்ப்பிணிகளுக்கு குறைப் பிரசவம் ஆகிற அபாயமும் உண்டு.

மெனோபாஸ்குறிப்பிட்ட வயதில் வர வேண்டிய மாதவிடாய் நின்றல் (மெனோபாஸ்), குறைந்த வயதிலேயே ஏற்பட்டு விடுவதற்கும் மதுவே காரணம் ஆகிறது.விடுபடுவது எளிதல்ல!ஒருகட்டத்தில் மதுவின் பிடியிலிருந்து பெண்கள் முழுமையாக விடுபட நினைத்தாலும், அது அவ்வளவு எளிதாக இருக்காது. குடும்பச் சூழல், சமூகச் சூழல், மருத்துவ வசதி, செலவு என பல வித காரணங்கள் இதற்கு உண்டு.

சில பெண்கள் குடிக்கவே கூடாது!

* 21 வயதுக்கு உட்பட்ட பெண்கள்
* வேறு பிரச்னைகள் / நோய்களுக்காக மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் பெண்கள்
* கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண்கள்

இம்மூன்று வகையினரும் மறந்தும் கூட மருந்துக்குக்கூட ஆல்கஹாலை நாடக் கூடாது. இவர்களுக்கு மற்ற பெண்களை விடவும் சிக்கல்கள் இரு மடங்கு அதிகம். ஆண்களோடு ஒப்பிட்டால் 4 மடங்கு சிக்கல்!28

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button