சிற்றுண்டி வகைகள்

சம்மரை சமாளிக்க… குளுகுளு ரெசிப்பி! tamil recipes

கோடைகாலம் தொடங்கிவிட்டது… கூடவே, அந்த சீஸனுக்கே உரிய சில அசௌகரியங்களும்! வாழ்க்கைமுறை, உணவுப் பழக்கம் போன்றவற்றில் சில மாற்றங்கள் செய்து உடல் உஷ்ணம், சோர்வு, நாவறட்சி போன்ற அசௌகரியங்களை சமாளிக்கக் கற்றுக்கொண்டால், சம்மரும் இனிய பருவகாலம்தான். உடல் சூட்டைத் தணித்து, புத்துணர்ச்சி தரும் பொருட்களைக்கொண்டு பச்சடி, சாலட், பானம், ஐஸ்க்ரீம், தோசை, பிரியாணி என்று ரெசிப்பிகளை கலந்துகட்டி வழங்குகிறார், சமையல்கலை நிபுணர் சுதா செல்வக்குமார்.

களத்துல இறங்குங்க… லெட் அஸ் பீட் தி ஹீட்!

பாசிப்பருப்பு – தயிர் பக்கோடா

தேவையானவை: கெட்டித் தயிர் – ஒரு கப் (கடையவும்), பாசிப்பருப்பு (பயத்தம்பருப்பு) – ஒரு கப், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், தக்காளி சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன், வறுத்த மிளகுப் பொடி, வறுத்த சீரகப் பொடி, சுக்குப் பொடி, பொடித்த கறுப்பு உப்பு – தலா அரை டீஸ்பூன், அரிசி மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சித் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாசிப் பருப்பை அலசி ஒரு மணி நேரம் நீரில் ஊறவைக்கவும். பின்னர் நீரை வடித்து, வடை மாவு போல் அரைக்கவும். இதனுடன் இஞ்சித் துருவல், அரிசி மாவு சேர்த்து, கடைசியாக சிறிதளவு உப்பு சேர்த்துக் கலந்துகொள்ளவும். இந்த மாவை சூடான எண்ணெயில் சிறுசிறு உருண்டைகளாக கிள்ளிப் போட்டு பொரித்தெடுத்து, பாத்திரத்தில் வைக்கவும். அதன்மேல் கடைந்த தயிரை ஊற்றி மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து, வறுத்த மிளகுப் பொடி, வறுத்த சீரகப் பொடி, சுக்குப் பொடி, பொடித்த கறுப்பு உப்பு தூவி, தக்காளி சாஸ் தெளித்து உடனே பரிமாறவும்.

தேங்காய்ப்பால் பிரியாணி

தேவையானவை: பாஸ்மதி அரிசி – ஒரு கப், தேங்காய்ப்பால் – 2 கப், நீளவாக்கில் நறுக்கிய கேரட் – அரை கப், பெரிய வெங்காயம் – 2 (நீளவாக்கில் நறுக்கவும்), அன்னாசிப்பூ – ஒன்று, பச்சைப் பட்டாணி – கால் கப், பிரியாணி இலை – ஒன்று, ஏலக்காய் – 2, கிராம்பு – 2, பச்சை மிளகாய் – 3, இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

p44b

செய்முறை: அரிசியைக் கழுவி 10, 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு நீரை வடிக்கவும். கடாயில் அரை டீஸ்பூன் நெய் விட்டு, அரிசியை சேர்த்து ஈரம் போகும் வரை சில நிமிடம் வதக்கவும். மீதமுள்ள நெய்யை குக்கரில் விட்டு, சூடானதும் பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப்பூ, முந்திரி சேர்த்து வறுத்து… நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து… பிறகு நறுக்கிய கேரட் மற்றும் பச்சைப் பட்டாணி சேர்த்து மேலும் வதக்கவும். பின்னர் தேங்காய்ப்பால் சேர்த்து, கொதிக்க ஆரம்பித்த உடன் உப்பும், அரிசியும் சேர்க்கவும். நன்றாக கலக்கிவிட்டு அடுப்பின் தீயைக் குறைத்து, வெயிட் போட்டு 10 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கி, கிளறி பரிமாறவும்.

ஹெல்தி ஐஸ்க்ரீம்

தேவையானவை: பால் – ஒரு லிட்டர், கேரட், பீட்ரூட் – தலா 100 கிராம், பாதாம் பருப்பு – 6, சர்க்கரை – ஒரு கப், தேன் – சிறிதளவு, பாதாம் எசன்ஸ் – சில துளிகள், செர்ரி பழம் – சிறிதளவு, விரும்பிய கிரீம் பிஸ்கட் – 2.

p44c

செய்முறை: கேரட், பீட்ரூட்டை தோல் சீவவும். குக்கரில் நீர் விட்டு கேரட், பீட்ரூட்டை வேகவைத்துக் கொள்ளவும். பாதாம்பருப்பை சூடான நீரில் ஊறவிட்டு, தோல் உரித்து சிறு துண்டுகளாக நறுக்கவும். பாலை நன்றாக காய்ச்சி ஆறவிடவும். மிக்ஸியில் பால், சர்க்கரை, கேரட், பீட்ரூட்டை சேர்த்து அரைக்கவும். ஒன்றிரண்டு ஐஸ்கட்டியைப் போட்டு அடித்து, பாதாம் எசன்ஸ் சேர்க்கவும். கிண்ணத்தில் இந்த கலவையை ஊற்றி நறுக்கிய பாதாம்பருப்பை சேர்த்து, ஃப்ரீஸரில் ஒரு மணி நேரம் வைக்கவும். திரும்பவும் அதை எடுத்து மிக்ஸியில் அடித்து, கிண்ணத்தில் ஊற்றி, மீண்டும் ஃப்ரீஸரில் வைத்து, 6 மணி நேரம் கழித்து எடுக்கவும். விருப்பமான ஐஸ்க்ரீம் பவுல்களுக்கு மாற்றி, க்ரீம் பிஸ்கட்டை நொறுக்கிப் போட்டு, தேன் விட்டு, செர்ரி பழத்தை நடுவில் வைத்துப் பரிமாறவும்.

கம்பு தோசை

தேவையானவை: கம்பு – ஒரு கப், முழு உளுத்தம்பருப்பு – அரை கப், இட்லி அரிசி – ஒரு கப், கெட்டித் தயிர் – ஒரு கப், இஞ்சித் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – கால் கப், பச்சை மிளகாய் – 2 (நீளவாக்கில் நறுக்கவும்), கடுகு, கறிவேப்பிலை – தாளிக்கத் தேவையான அளவு, எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.

p44d

செய்முறை: கெட்டித் தயிரை நன்கு கடைந்து, தண்ணீர் விட்டு கலக்கவும். கம்பு, அரிசியைக் கழுவி, ஒன்றுசேர்த்து கடைந்த தயிரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். உளுந்தை தனியாக நீரில் ஊறவைக்கவும். இவற்றை தனித்தனியாக அரைத்து, ஒன்றாக கலந்து, உப்பு போட்டு கரைத்து மறுநாள் வரை ஊறவிடவும் (இட்லி மாவு போல). மாவை தோசை ஊற்றுவதற்கு முன் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் சேர்த்துக் கலக்கவும். கடுகு, கறிவேப்பிலையை சிறிதளவு எண்ணெயில் தாளித்து சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: கம்பு மாவு, அரிசி மாவு ரெடிமேடாக கிடைக்கிறது. அவற்றைப் பயன்படுத்தியும் தயாரிக்கலாம். ஆனால், சுவையும், சத்தும் ஊறவைத்து செய்வதில்தான் அதிகம்.

தக்காளி – வெள்ளரி சாலட்

தேவையானவை: கசப்பு இல்லாத வெள்ளரிக்காய் (பெரியது) – ஒன்று, நன்கு பழுத்த தக்காளி – 2 , பெரிய வெங்காயம் – ஒன்று, எலுமிச்சைப் பழம் – ஒன்று, மிளகுத்தூள் – சிறிதளவு, வேர்க்கடலைப் பொடி – ஒரு டேபிள்ஸ்பூன், பாசிப்பருப்பு (பயத்தம்பருப்பு) – 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், கடுகு – தாளிக்கத் தேவையான அளவு, உப்பு – தேவைக்கேற்ப.

p44e

செய்முறை: வெள்ளரிக்காயின் மேல் தோலை சீவி மெல்லிய, நீள துண்டுகளாகவும், தக்காளி, வெங்காயத்தை ஒரே அளவு துண்டுகளாகவும் நறுக்கிக்கொள்ளவும். பாசிப்பருப்பை உதிர் உதிராக வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். தக்காளி, வெங்காயம், வெள்ளரித் துண்டுகள், பாசிப்பருப்பு, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் போடவும். மேலே மிளகுத்தூள், உப்பு தூவவும். எண்ணெயில் கடுகை தாளித்து சேர்க்கவும். பரிமாறுவதற்கு சற்று முன் வேர்க்கடலைப் பொடியைத் தூவி, தேவையான அளவு எலுமிச்சைச் சாறு சேர்க்கவும்.

காய்கறி தயிர் பச்சடி

தேவையானவை: கெட்டித் தயிர் – ஒரு கப், தக்காளி – ஒன்று (மிகச்சிறிய துண்டுகளாக நறுக்கவும்), துருவிய கேரட், நூல்கோல் – தலா 2 டேபிள்ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – சிறிதளவு.

அரைக்க: பச்சை மிளகாய் – ஒன்று, தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி – கால் அங்குல துண்டு (தோல் சீவவும்).

p44f

செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு தாளித்து… துருவிய கேரட், நூல்கோல் சேர்த்து வதக்கி, தக்காளியைப் போட்டு புரட்டி எடுக்கவும். பிறகு இதனை கட்டித் தயிருடன் கலந்து உப்பு சேர்த்து, அரைத்த விழுதை கலந்து பரிமாறவும்.

இதை ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் குளிர வைத்தும் பரிமாறலாம்.

லெமன் – பார்லி வாட்டர்

தேவையானவை: எலுமிச்சைச் சாறு – ஒரு கப், தண்ணீர் – ஒன்றரை கப், பார்லி பவுடர் – ஒரு டீஸ்பூன், சர்க்கரை – ஒரு கப், எலுமிச்சை எசன்ஸ் – 2 துளி, கே.எம்.எஸ் பவுடர் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) – ஒரு சிட்டிகை

p44g

செய்முறை: எலுமிச்சைச் சாற்றுடன் 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து மூடி வைக்கவும். பார்லி பவுடருடன் குளிர்ந்த நீர் சேர்த்து பேஸ்ட் போல் குழைத்துக்கொள்ளவும். அதனுடன் தண்ணீர் சேர்த்து குறைந்த தணலில் சூடாக்கவும். மீதமுள்ள சர்க்கரையை சேர்த்துக் கிளறவும் (சர்க்கரை நன்கு கரைய வேண்டும்). பிறகு இதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து இதை ஆற விடவும். பிறகு வடிகட்டி, இதில் மீதமுள்ள எலுமிச்சைச் சாறு, கே.எம்.எஸ் மற்றும் எசன்ஸ் சேர்த்து, சுத்தமான பாட்டிலில் ஊற்றி வைக்கவும். இது நீண்ட நாட்கள் கெடாது. தேவைப்படும்போது ஒரு பங்கு ஜூஸுக்கு 3 பங்கு நீர் கலந்து பருகவும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button