ஆரோக்கியம் குறிப்புகள்

வாட வைக்குதா வாடை?

மகளிர் மட்டும்

உடலில் உண்டாகிற வியர்வையால் கிளம்பும் நாற்றத்தை வாசனையான சோப்பு, சென்ட், டியோடரன்ட் என எதையோ வைத்து மறைத்து விடலாம். சில பெண்களுக்கோ அந்தரங்க உறுப்பில் இருந்து வீசுகிற வாடையை எப்படி மறைப்பதென்றே தெரியாது. தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் இந்தப் பிரச்னைக்கான காரணம், தீர்வுகள் பற்றிப் பேசுகிறார் மருத்துவர் நிவேதிதா.

அந்தரங்க உறுப்பில் உண்டாகும் ஒருவித திரவக் கசிவும் பாக்டீரியாவும் சேர்ந்து அந்தப் பகுதியின் பி.ஹெச் அளவை ஆரோக்கியமாக, அதாவது, 4.5 அளவில் வைத்திருக்கின்றன. இதன் விளைவாக அந்தப் பகுதியில் ஒருவித வாடை வருவது இயல்புதான். அது அதிகமானால்தான் பிரச்னை. அந்த வாடையை உங்களாலேயே சகித்துக் கொள்ள முடியாதது, அரிப்பு, வலி, எரிச்சல் போன்றவை இருந்தால் அது அதீதமானது என அர்த்தம். அதீத வாடைக்கான காரணங்கள் பல…

பொதுவாக அந்தரங்கப் பகுதியில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களே இருக்கும். அரிதாக அவை தொந்தரவு செய்யப்பட்டால் ஆரோக்கியமற்ற Bacterial Vaginosis (BV) வரும். இது தாக்கினால் சாம்பல் நிறக் கசிவு, துர்வாடை இருக்கும். இதை அலட்சியப்படுத்தினால் தீவிரத் தொற்றில் கொண்டு போய் விடும். எனவே, ஆரம்பத்திலேயே மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ஆன்ட்டிபயாடிக் எடுத்து சரி செய்துவிடலாம்.

வெங்காயம், பூண்டு, கரம் மசாலா போன்ற கடுமையான வாசனை உள்ள உணவுகளை உண்பதன் மூலம் உடலிலும் அந்தரங்க உறுப்புகளிலும் துர்வாடை கிளம்பலாம். வேறு பிரச்னைகளுக்காக ஆன்ட்டிபயாடிக்கோ, மருந்துகளோ எடுத்துக் கொள்ளும் போது, அந்தரங்க உறுப்பின் பி.ெஹச் அளவு மாறி வாடையைக் கிளப்பலாம். சிலவகை ஒவ்வாமை மருந்துகளாலும் அந்தரங்க உறுப்பு அளவுக்கதிகமாக வறண்டு, கெட்ட வாடையைத் தூண்டலாம்.

அக்குள் பகுதியைப் போலவே அந்தரங்க உறுப்பைச் சுற்றியுள்ள சருமத்திலும் அதிகம் வியர்க்கும். அந்த வியர்வையும் அந்தரங்க உறுப்புக் கசிவும் சேரும்போது அது சகித்துக் கொள்ள முடியாத வாடையை உண்டாக்கலாம். இதைத் தவிர்க்க வியர்வையை உறிஞ்சக்கூடிய காட்டன் உள்ளாடைகளை அணிய வேண்டியது அவசியம். உடற்பயிற்சி மாதிரியான வியர்வை சிந்தும் வேலைகளுக்குப் பிறகு உடனடியாக உள்ளாடைகளை மாற்ற வேண்டும்.

மாதவிலக்குச் சுழற்சியின் போது இந்த வாடையில் மாற்றங்கள் தெரியும். கருத்தடை மாத்திரைகள் போன்ற ஹார்மோன் மருந்துகளும் பிறப்புறுப்பின் பி.ஹெச் அளவில் மாறுதல்களை ஏற்படுத்தி, வாடையைக் கிளப்பும். மெனோபாஸும் ஒரு காரணம். அந்தக் காலத்தில் ஈஸ்ட்ரோஜென் அளவு குறைவதால் ஈஸ்ட் தொற்று மற்றும் Bacterial Vaginosis ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகும்.

நீண்ட நேரமாக மாற்றப்படாத நாப்கின் மற்றும் டாம்பூன்கள் கொடுமையான வாடையை ஏற்படுத்தும். ரத்தப்போக்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட இடைவெளிகளில் பழைய நாப்கின்களை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் அவை வாடையை ஏற்படுத்துவது மட்டுமின்றி, தீவிரமான தொற்றையும் உண்டாக்கி விடும்.

வாடையை நீக்க நீங்களாகவே கடைகளில் விற்கும் சென்ட், மருந்துகள், வாசனை சோப்பு, அரோமா ஆயில் போன்றவற்றை உபயோகிக்கக்கூடாது. அவை எல்லாம் பி.ஹெச் அளவை தாறுமாறாக மாற்றி, பிரச்னையை அதிகப்படுத்தும். நிறைய தண்ணீர் குடிப்பது, ஆரோக்கியமான உணவுப் பழக்கம் போன்றவையே பிரச்னையில் இருந்து விடுபடும் முதல் வழி. மிகவும் மைல்டான சோப்பு உபயோகித்து அந்தப் பகுதிகளை சுத்தம் செய்வது, இருமுறை உள்ளாடைகளை மாற்றுவது போன்றவையும் அவசியம். பிரச்னை தீவிரமானது தெரிந்தால் உடனடியாக மருத்துவரை சந்திப்பதே சிறந்தது.”ld4130

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button