சரும பராமரிப்பு

30 ப்ளஸ்களில் மாசில்லா சருமத்திற்கான எளிய அழகுக் குறிப்புகள்!

30 வயதுகளில் மிக கவனமாய் சருமத்தை பராமரித்தால் 45 வயது வரை கவலையில்லாமல் இருக்கலாம். சுருக்கங்கள் வரத் தொடங்கும் இந்த வயதுகளில் தினமும் அல்லது வாரம் மூன்று முறையாவது சிறிது நேரம் ஒதுக்கி பராமரித்தால் கல்லூரி பெண்கள் போலவே நீங்கள் ஜொலிக்கலாம்.

பளபளப்பான மிருதுவான சருமத்திற்கு : தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து முகத்தில் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து பயத்தமாவை தேய்த்துக் கழுவினால் சுருக்கங்கள் விடபெற்று சருமம் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

எண்ணெய் சருமம் உள்ளவர்கள் தக்காளியை நன்றாக மசித்து அதனோடு 4 – 5 துளிகள் எலுமிச்சை சாறு கலந்து முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிக்கொள்ளலாம்.

பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும். தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.

சருமம் நிறம் பெற :

சிறிதளவு இளநீரை முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிவந்தால் சரும நிறம் மாறும். சீரகம் மற்றும் முள்ளங்கியை ஆகியவற்றை தனித்தனியே தண்ணீரில் கொதிக்கவைத்து, அந்த தண்ணீரில் முகத்தை கழுவினால் மாசுகள் அகற்றப்பட்டு முகம் பிரகாசமாக தோன்றும். புதினா மற்றும் எலுமிச்சை சாறுகளை கலந்து முகத்தில் தடவினால் சருமம் நிறம் பெறும். சுத்தமான சந்தனத்தை பாதாம் எண்ணெய்யில் குழைத்து முகத்தில் பூசி, இந்த கலவை காய்ந்ததும் முகத்தை கழுவலாம் . முட்டையின் வெள்ளை கருவை வாரம் இருமுறை முகத்தில் பூசிவந்தால் சரும நிறம் சிகப்பாக மாறுவதோடு மிருதுவாகவும் மாறும்.

அன்னாசி பழத்தின் சாறு, தர்பூசிணி மற்றும் பப்பாளி பழ சாறுகளை முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவவும். வாரம் மூன்று நாள் செய்தால் சருமம் நிறம் பெறும்.

வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், கறுத்துப் போகாமல் இருக்கும்.

கருமையை அகற்ற : கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும்.

ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.

முகப்பருக்கள் மறைய : இரவு தூங்கும் முன் புதினா சாறு இரு டீஸ்பூன் எடுத்து அதில் அரை மூடி எலுமிச்சம்பழ சாறு, பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிடங்கள் கழித்து ஐஸ் ஒத்தடம் கொடுத்தால் முகம் சுத்தமாகும். பருக்கள் மறையும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.

முகத்தில் உள்ள தேவையற்ற முடியை அகற்ற : முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

அதேபோல் முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து முகத்தில் தேய்க்கவும். நன்றாக காய்ந்தவுடன் படலம் போல் முகத்தில் ஏற்படும். அதனை பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.

1 25 1466837813

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button