ஆரோக்கிய உணவு

முடி உதிர்வைத் தடுக்கும் 8 உணவுகள்!

ஒருவருக்கு அழகைக் கூட்டுவதில் முக்கியமானது தலைமுடி. ஆரோக்கியமான, அடர்த்தியான கூந்தல் வேண்டும் என ஆசைப்படாதவர்கள் யாருமில்லை. அதற்காகவே கவர்ச்சிகரமான விளம்பரங்களைப் பார்த்து, கண்ட ஷாம்பூக்களைப் பயன்படுத்துகிறோம். ஆனாலும், பலருக்கு முடி உதிர்வது குறைந்திருக்காது; சிலருக்கு ஆசைப்பட்டபடி அடர்த்தியான கூந்தலும் வளர்ந்திருக்காது. என்ன காரணம்?

முடி பராமரிப்புக்காக சந்தையில் விதவிதமான எண்ணெய்கள், ஷாம்பூக்கள் கிடைக்கின்றன. அவை வெளிப்புறப் பராமரிப்புக்கு உதவுமே தவிர, உள்ளிருந்து ஊட்டமளிக்காது. கூந்தலின் ஆரோக்கியத்துக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்த உணவை உண்டால்தான் பலன் கிடைக்கும்.

உறுதியான கூந்தலுக்கு வைட்டமின் ஏ, சி, இ, பி5, பி6, பி12, இரும்புச்சத்து, துத்தநாகம், புரதம், கொழுப்பு அமிலங்கள் மிக அவசியம். இவை முடி உதிர்வை தவிர்க்கவும், நம் கூந்தலை ஆரோக்கியமாகவும் மாற்றக்கூடியவை. எனவே இந்த சத்துக்கள் எந்தெந்த உணவுகளில் உள்ளன; எந்ததெந்தச் சத்துக்கள் முடி வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் அவசியம்; எந்தெந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் முடி உதிர்வைத் தவிர்க்கலாம் என்பதைப் பார்க்கலாம்.
shutterstock 245119171 DC 17320

1. முட்டை:

முட்டையில் புரோட்டீன், வைட்டமின் பி12, இரும்புச்சத்து, துத்தநாகம், ஒமேகா கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. இவை முடி வளர்ச்சிக்கு ஊட்டமளிக்கக்கூடியவை. முட்டையில் உள்ள வெள்ளைப் பகுதியில் ‘அல்புமின்’ என்ற புரதம் உள்ளது. அது கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது. இதில் முடி உதிர்வைக் கட்டுபடுத்தும் பயோட்டின் என்கிற வைட்டமினும் உள்ளது.

2. பீன்ஸ்:

பீன்ஸில் கறுப்பு பீன்ஸ், கிட்னி பீன்ஸ், நேவி பீன்ஸ், பின்டோ பீன்ஸ், சோயா பீன்ஸ் எனப் பல வகைகள் உள்ளன. இந்த பீன்ஸ் வகைகளில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் பி, சி மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் நிறைவாக உள்ளன. இவை தலைமுடிக்கு நல்ல உறுதியையும் வளர்ச்சியையும் கொடுக்கும். மேலும், முடி உதிர்வைக் கட்டுப்படுத்தக்கூடிய இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. குறிப்பாக கிட்னி பீன்ஸ், சோயா பீன்ஸ், கறுப்பு பீன்ஸ் ஆகியவை கூந்தல் அடர்த்தியாக வளர உதவி புரிகின்றன.

shutterstock 274469018 DC 17556

3. பசலைக் கீரை:

பசலைக் கீரையில் அதிகளவு இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி, புரதம் உள்ளன. முடி உதிர்வுக்கு ஒரு முக்கியக் காரணமான இரும்புச்சத்து குறைபாட்டுக்கு தீர்வாக இது இருக்கிறது. மேலும், தலையில் உள்ள எண்ணெய்ச் சுரப்பியைத் தூண்டி, முடிக்கு இயற்கையான கண்டிஷனராகச் செயல்படுகிறது. இதில் உள்ள மக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், ஒமெகா 3 கொழுப்பு அமிலங்கள் தலை முடிக்கு ஆரோக்கியத்தைக் கொடுப்பதோடு, முடிக்கு நல்ல பளபளப்பையும் தரக்கூடியவை.

4. ஓட்ஸ்:

ஓட்ஸில் வைட்டமின் பி-யும் தாதுஉப்புக்களும் நிறைவாக உள்ளன. மெலனின் என்ற நிறமி, முடிக்கு நிறமளிக்கக் கூடியது. ஓட்ஸ்சில் உள்ள சத்துக்கள் மெலனின் உற்பத்தியை ஊக்குவிக்கின்றன. முடி வளர்ச்சிக்குத் தேவையான பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம் ஆகிய சத்துக்கள் ஓட்ஸில் உள்ளன. இவை முடி வேகமாகவும் கறுமையான நிறத்திலும் வளரத் தேவையான சத்துக்கள்.

5. சர்க்கரை வள்ளிக்கிழங்கு:

வறட்சியான சருமம், முடி, பொடுகு போன்றவை வைட்டமின் ஏ குறைபாட்டாலும் வரக்கூடியவை. இதில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளதால், செல் மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும், புரதம், தாமிரம், இரும்புச்சத்தும் உள்ளன. இவை, முடி கொட்டுவதைத் தவிர்க்க உதவுவதுடன், முடிக்கும் சருமத்துக்கும் ஆரோக்கியத்தைத் தருகின்றன.

6. சூரிய காந்தி விதைகள்:

சூரியகாந்தி விதைகள் அதிக ஆற்றல் தரக்கூடியது. நல்ல சுவையுள்ளது; இதை மற்ற பருப்புகள்போலவே மென்று தின்னலாம். சூரியகாந்தி விதைகளில் துத்தநாகம், மக்னீசியம், பையோட்டின், வைட்டமின் பி, இ, புரோட்டீன், இரும்புச்சத்து, பொட்டாசியம், தாமிரம், கால்சியம், செலினியம் போன்ற தலைமுடியைப் பாதுகாக்கும் ஊட்டச்சத்துகள் உள்ளதால் முடி இழப்பை தடுப்பதோடு, தலைமுடியை வளமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகின்றன.

7. கேரட்:

வைட்டமின் ஏ உள்ளதால் முடியோடு சேர்த்து, கண்களுக்கும் நல்லது. தோல் மற்றும் முடியை பாதுகாக்கும்ம் தன்மை இதற்கு உண்டு. கேரட்டில் அதிக அளவு பீட்டாகரோட்டின் சத்துக்கள் உள்ளன. இவை ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்குத் தூண்டுகின்றன. தலையில் உள்ள எண்ணெய் சுரப்பியைத் (சீபம்) தூண்டி, தலையில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

shutterstock 244173103 DC 17227

8.நட்ஸ் & டிரைஃப்ரூட்ஸ்

இவற்றில் அதிக அளவு துத்தநாகம், பயோட்டின், புரோட்டீன், இரும்புச்சத்து உள்ளன. குறிப்பாக, புரோட்டீன் தலைமுடிக்கு நல்ல உறுதியையும் வளர்ச்சியையும் கொடுக்கும். முடி உலர்ந்துபோகாமல் தடுக்கும். ீ பாதாம், பீநட்ஸ், வால்நட், முந்திரி ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இவை முடிக்கு நல்ல ஊட்டச்சத்தைக் கொடுக்கும். முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும். தோலுக்கு நல்ல நிறத்தையும் முடிக்கு நல்ல பளபளப்பையும் தரக்கூடியவை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button