மருத்துவ குறிப்பு

கைகள் இல்லை… கால்கள் இல்லை… கவலையும் இல்லை! இயற்கை தந்த சவால்களை எதிர்கொண்டு, சாதனையாளராக உயர்ந்…

கைகள் இல்லை…
கால்கள் இல்லை…

கவலையும் இல்லை!
ஸ்திரேலியாவில் வசித்துவந்த ஒரு தம்பதியினருக்கு 1982-ம் ஆண்டில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. இரண்டு கைகளும் இல்லாமல், இரண்டு கால்களும் இல்லாமல் பிறந்த குழந்தையைப் பார்த்துக் கண்ணீர்விட்டு அழுதுமுடித்த அந்தக் குழந்தையின் பெற்றோர், விரைவில் தங்கள் மனதைத் தேற்றிக்கொண்டனர். அவனுக்கு நிக் உஜிசிக் என்று பெயர் வைத்தனர்.

11

அந்தக் குழந்தைக்கு கால்கள் இல்லை என்றபோதும், உடலை அசைத்து நிமிர்ந்து நடக்கக் கற்றுக்கொடுத்தனர். இடுப்போடு ஒட்டி இருந்த இடது பாதத்தில் 2 விரல்கள் ஒட்டியபடி இருந்தன. அந்த 2 விரல்களையும் ஆபரேஷன் செய்து பிரித்தனர். அந்த விரல்களுக்கு இடையே பென்சிலைப் பிடித்து எழுதுவதற்கு பயிற்சிக் கொடுத்தனர். வாயினால் ஓவியம் வரையவும் கற்றுக்கொடுத்தனர்.

பள்ளியில் சேர்க்க நிக் உஜிசிக்கை அழைத்துச் சென்ற அவனது பெற்றோருக்கு அடுத்த அதிர்ச்சிக் காத்திருந்தது. எந்தப் பள்ளியும் அவனைச் சேர்த்துக்கொள்ளத் தயாராக இல்லை. கைகளும் கால்களும் இல்லாத ஒரு குழந்தை, சாதாரணப் பள்ளிகளில் படிப்பதை ஆஸ்திரேலிய சட்டம் அனுமதிக்கவில்லை. நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து சட்டத்தையே மாற்றவைத்து நிக் உஜிசிக்கை  பள்ளியில் சேர்த்தனர்.

இரண்டு கைகளும், இரண்டு கால்களும் இல்லாத நிக் உஜிசிக், பள்ளியில் பல அவமானங்களைச் சந்தித்தார். அவரோடு பழகுவதற்கு நண்பர்கள் முன்வரவில்லை. சில முரட்டு மாணவர்கள் அவரது தோற்றத்தைக் கேலி செய்தனர். கிண்டலும் கேலியும் உச்சத்தைத் தொட்டபோது, குளிக்கும் தண்ணீர் தொட்டியில் தற்கொலைக்கு முயன்ற நிக் உஜிசிக்கை அவரது பெற்றோர் காப்பாற்றிச் சிகிச்சை அளித்தனர். தங்கள் மகனுக்குத் தன்னம்பிக்கைக் கதைகளை எடுத்துச்சொல்லி நம்பிக்கை விதைகளை விதைத்தனர். நிக் உஜிசிக்கின் தாய், ஒரு செய்தித்தாள் கட்டுரையைப் படித்துக் காட்டினார். நிக் உஜிசிக் போலவே உடல் சவால்கொண்ட ஒருவர் மிகச் சிறந்த மேடைப் பேச்சாளராகப் பரிணமித்தது பற்றிய கட்டுரை அது. அந்தச் செய்தி, நிக் உஜிசிக் மனதுக்குப் பெரும் நிம்மதியைக் கொடுத்தது. தான் தனி ஆள் இல்லை என்றும், தன்னைப்போன்ற மனிதர்களும் சாதனை படைக்க முடியும் என்றும் முதல் முறையாக நம்பத் தொடங்கினார்.

நிக் உஜிசிக்கின் நடை, உடை, பாவனைகளில் கம்பீரம் வந்தது. அவரது குரல் உயர்ந்தது. நகைச்சுவையாகப் பேசக் கற்றுக்கொண்டார். சக மாணவர்கள் அவர் மீது அன்பு காட்டினர். ஆசிரியர்கள் பரிவுகாட்டினர். வகுப்பு மாணவர் தலைவரானார் நிக் உஜிசிக். பின்னர் பள்ளி மாணவர் தலைவரானார். பள்ளியில் அவருக்குக் கிடைத்த ஒரு நல்ல ஆலோசகர், சுய முன்னேற்றப் பேச்சுத்திறனை வளர்த்துக்கொள்ள வழிகாட்டினார்.

நிக் உஜிசிக்கின் பெற்றோர் பணி நிமித்தம் காரணமாக அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்துக்கு இடம்பெயர்ந்தனர். அங்குள்ள பள்ளியில் சேர்ந்த நிக் உஜிசிக், அங்கேயும் பள்ளி மாணவர் தலைவராக வலம் வந்தார். கல்லூரியில் சேர்ந்தபோது அங்கும் கதாநாயகனாகக் கலக்கினார். கணக்கியல் துறையில் பட்டம் பெற்றார். ஏழை மாணவர்களுக்கு உதவுவதற்காக நிதிதிரட்டும் நிகழ்ச்சிகள் நடத்தினார்.

இரண்டு கைகளும், இரண்டு கால்களும் இல்லாத நிக் உஜிசிக், ஸ்கேட்டிங் செய்கிறார்; நீச்சலடிக்கிறார்; கோல்ப் விளையாடுகிறார்; நீர்ச்சறுக்கு ஆடுகிறார்; செயற்கை கை பொருத்தி கார் ஓட்டுகிறார்; தனது பாதத்தில் ஒட்டியிருக்கும் 2 விரல்களை ‘சிக்கன் ட்ரம்ஸ்டிக்’ என்று பட்டப்பெயர் வைத்து அழைக்கிறார்; அந்த இரண்டு விரல்களால் எழுதுகிறார்; நிமிடத்துக்கு 45 வார்த்தைகள் டைப் செய்கிறார்; எலெக்ட்ரானிக் ட்ரம்ஸ் இசைக்கிறார்; பந்துகளைத் தூக்கி வீசுகிறார்; மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதை எல்லா வகையிலும் நிரூபிக்கிறார்.   தன்னம்பிக்கையைக் கைகளாகவும், கால்களாகவும் கொண்டு உயர்ந்து நிற்கும் நிக் உஜிசிக் மீது அன்புகொண்ட கானே மியாகரா என்ற பெண் அவரைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இப்போது 2 செல்லக் குழந்தைகள்.

12

விரக்தியின் எல்லைவரை சென்று, பின் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்ட நிக் உஜிசிக், இப்போது மற்றவர்களுக்குத் தன்னம்பிக்கையைக் கற்றுத் தருகிறார். சுய முன்னேற்றப் பயிற்சி வகுப்புகள் எடுப்பது, புத்தகங்கள் எழுதுவது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றுவது போன்றவற்றையே வாழ்க்கையாகவும், வருமான வாய்ப்பாகவும் மாற்றிக்கொண்டார். இதுவரை 58 நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறார். 60 லட்சம் பேருக்குத் தன்னம்பிக்கைப் பயிற்சி அளித்திருக்கிறார்.
மாணவர்களிடம் உரையாற்றும்போது நிக் உஜிசிக் ஒருமுறை இப்படிப் பேசினார்: ”எனது உறவுக்கார மாணவி ஒருவர் மருத்துவக் கல்லூரியில் படிக்கிறார். ரத்த அழுத்தத்தைச் சோதிப்பது பற்றி அவரது பேராசிரியர் பயிற்சி வகுப்பு நடத்தியபோது, ‘கை இல்லாதவர்களிடம் எப்படிச் சோதிப்பது’ எனக் கேட்டிருக்கிறார். ‘காலில் சோதிக்கலாம்’ என்று பேராசிரியர் பதில் அளித்திருக்கிறார். ‘காலும் இல்லாதவர்களிடம் எப்படிச் சோதிப்பது’ என்று மாணவி கேட்டதும், பேராசிரியருக்கு கோபம் வந்து வெளியே போகச் சொல்லிவிட்டார். அதன்பின், அந்த மாணவி என்னைப் பற்றி எடுத்துச் சொன்னபின்தான், ‘ஓ… அப்படிப்பட்ட மனிதர்களும் இருக்கிறார்களா?’ என்று உணர்ந்து பேசியிருக்கிறார். அப்படிப்பட்ட வித்தியாசமான மனிதன் நான். என்னாலேயே இவ்வளவு சாதிக்க முடிகிறது என்றால், உங்களால் எவ்வளவு முடியும் என்று சிந்தித்துப் பாருங்கள்.”

13

இயற்கை தந்த சவால்களை எதிர்கொண்டு, சாதனையாளராக உயர்ந்து நிற்கும் நிக் உஜிசிக், காலையில் கண் விழித்தது முதல், கட்டிலில் இருந்து குதித்து இறங்குவது, சோபாவில் குதித்து ஏறி அமர்வது, புத்தகத்தை எடுத்துப் படிப்பது, குறிப்பு எழுதுவது, போனை எடுத்துப் பேசுவது என எத்தனையோ வேலைகளை, தானே செய்கிறார். தனது முயற்சிகளில் எத்தனைமுறை தோல்விகள் வந்தாலும் அவர் பொருட்படுத்துவதில்லை. “நான் தோல்வி அடைந்தால் 100 முறை, 1,000 முறை முயற்சிக்கிறேன். உத்வேகத்துடன் மீண்டும் முயற்சி செய்வது எனது பண்பாகிவிட்டதால், எனக்குக் கைகளும் கால்களும் இல்லை என்பதே மறந்துபோகிறது. கவலையில்லாமல் மகிழ்ச்சியாக வாழ்கிறேன்.”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button