மருத்துவ குறிப்பு

வெளிநாட்டில் மருத்துவம் படிக்கலாமா?

கடந்த சில ஆண்டுகளாகவே, வெளிநாட்டில் மருத்துவப் படிப்புக்கு செல்லும் மாணவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ரஷ்யா, பிலிப்பைன்ஸ், சீனா, ஜார்ஜியா, உக்ரைன், செயின்ட் லூசியா, கயானா போன்ற நாடுகளில் உள்ள மருத்துவக் கல்வி நிறுவனங்கள் இந்திய மாணவர்களை ஈர்க்கின்றன. ’50 சதவிகிதம் மதிப்பெண் போதும், 10-15 லட்சம் ரூபாய்க்குள் படிப்பை முடித்து விடலாம்’ என்றெல்லாம் அந்நிறுவனங்களின் பிரதிநிதிகள் மாணவர்களை வசப்படுத்துகிறார்கள்.

இங்கு மாணவர் சேர்க்கையில் நிலவும் குழப்பங்கள், போட்டிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மிரட்டும் கல்விக்கட்டணம்… இதையெல்லாம் யோசிக்கும் பெற்றோர், வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளைத் தேர்வு செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். கடந்தாண்டு சுமார் 10 ஆயிரம் தமிழக மாணவர்கள் மேற்கண்ட நாடுகளுக்கு மருத்துவம் படிக்கச் சென்றிருக்கிறார்கள். இந்தாண்டு அந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்கிறார்கள். இதன் பின்னணியை அலச வேண்டியது அவசியம்.

வெளிநாட்டில் 5 – 6 ஆண்டு காலம் மருத்துவப் படிப்பை முடித்து விட்டுத் திரும்பும் மாணவர்கள், உடனடியாக இந்தியாவில் மருத்துவராக பதிவு செய்ய முடியாது. அவர்களின் தகுதியைப் பரிசோதிப்பதற்காக இந்திய மருத்துவ கவுன்சில் Foreign Medical Graduate Screening Exam(FMGE) என்கிற தகுதித்தேர்வு நடத்துகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, ஒரு மருத்துவமனையில் ஓராண்டு இன்டர்ன்ஷிப் பயிற்சி பெற வேண்டும். அதன் பிறகே மருத்துவராக பதிவு செய்து சிகிச்சை அளிக்க முடியும்.

இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது எளிதானதல்ல. 2014 ஜூனில் நடத்தப்பட்ட FMGE தேர்வில் 5 ஆயிரத்து 724 பேர் பங்கேற்றார்கள். தேர்ச்சி பெற்றவர்களோ 282 பேர்தான். 2015 ஜூன் தேர்வில் பங்கேற்ற 5 ஆயிரத்து 967 பேரில் 603 பேர் மட்டுமே தேர்ச்சி. அதே ஆண்டு டிசம்பரில் நடந்த தேர்வில் 6 ஆயிரத்து 407 மாணவர்களில் 731 பேர்தான் தேர்ச்சி பெற்றார்கள்.

காரணம் என்ன?

இத்தேர்வை இதுநாள் வரை படித்த படிப்பை வைத்து மட்டுமே எதிர்கொள்ள முடியாது. தனிப்பயிற்சி தேவை. லட்சங்களில் அதற்குக் கட்டணம். வினாத்தாள் அமைப்பு எப்படி இருக்கும் என்பதைக் கூட கணிக்க முடியாது. தேர்வு முடிந்ததும் வினாத்தாளையும் சேர்த்து வாங்கிக் கொள்வார்கள்!

இத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் கதி..?

பரிதாபம்தான்… அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மருத்துவப் படிப்பு முடித்தவர்கள் அதே நாட்டில் மருத்துவராக பதிவு செய்து சிகிச்சை அளிக்க முடியும் (ஆனால், 1 கோடி ரூபாய்க்கு மேல் கல்விச் செலவு ஆகும்). மேலே உள்ள நாடுகளில் மருத்துவப் படிப்பு முடிப்பவர்கள், படித்த நாட்டில் மருத்துவராக பணியாற்ற முடியாது. காரணம், மொழிச் சிக்கல். அங்கீகாரம் பெறுவதிலும் சிக்கல்கள் உண்டு. இந்தியாவுக்குத்தான் வந்தாக வேண்டும். இங்கும் இப்படியொரு பிரச்னை.

இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறாமல் சிகிச்சை அளித்தவர்களை போலி மருத்துவர்கள் என்று கூறி கைது செய்த சம்பவங்கள் நிறையவே உண்டு. அதனால் காலத்தையும் பணத்தையும் தொலைத்துவிட்டு ஏராளமான மாணவர்கள் கலங்கி நிற்கிறார்கள். பொதுவாக, இப்படியொரு தேர்வு இருக்கிறது என்பதை, மாணவர்களை சேர்த்துவிடும் ஆலோசனை நிறுவனங்கள் பெற்றோருக்குச் சொல்வதே இல்லை. இப்போதுதான் சற்று விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், அது பற்றி ஓரளவுக்குச் சொல்கிறார்கள்.

ஆனால், அந்தத் தேர்வை எளிதாக கடந்து விடலாம் என்கிறார்கள். இதன் கடினத்தன்மை பற்றியோ, விளைவுகள் பற்றியோ சொல்வதில்லை. சில நிறுவனங்கள் நாங்கள் அத்தேர்வுக்கும் ஆன்லைனில் பயிற்சி தருகிறோம் என்று விளம்பரம் செய்கிறார்கள். ஆன்லைன் பயிற்சிகள் மூலமெல்லாம் அந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது சாத்தியமே இல்லை என்பதுதான் யதார்த்தம். டெல்லியில் FMGE தேர்வுக்குப் பயிற்சி தருவதற்கு ஒரு நிறுவனம் உள்ளது. கட்டணமோ லட்சங்களில்! சென்னை போன்ற நகரங்களில் அந்த வாய்ப்பும் இல்லை.

வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளின் கல்வித் தரம் பற்றி நேர்மையான ஆய்வுகள் ஏதுமில்லை. கல்வி நிறுவனங்கள் குறித்த தரப்பட்டியல் ஏதுமில்லை. கல்வி நிறுவனத்தின் பிரதிநிதிகள் சொல்வதைத் தான் நம்பவேண்டும். மேற்கண்ட நாடுகளில் பெரும்பாலானவை ஆங்கில வழி நாடுகள் அல்ல. அதனால் மொழிப் பிரச்னையும் மாணவர்களை வதைக்கிறது. சில கல்வி ஆலோசனை நிறுவனங்கள் வெளிநாட்டில் மருத்துவம் படிக்கும் மாணவர்களின் பெற்றோரையே தங்கள் முகவர்களாக நியமித்து விடுகிறார்கள்.

தன் பிள்ளையை வெளிநாட்டில் மருத்துவம் படிக்க வைக்கும் ஒருவரே தங்களிடம் பேசுவதால், மற்ற பெற்றோரும் அவரை நம்பி பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள். அந்த நம்பிக்கை பல மாணவர்களின் வாழ்க்கையை திருப்பிப் போட்டிருக்கிறது என்பதால் கவனம் அவசியம். தமிழகத்தில் இருந்து வெளிநாட்டுக்கு மாணவர்களை அனுப்பும் கல்வி நிறுவனங்களை தணிக்கை செய்து அரசு முறைப்படுத்த வேண்டும். அரசு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ‘FMGE தேர்வு பற்றி எனக்குத் தெரியும், நிச்சயம் அதில் நான் தேர்ச்சி பெறுவேன்’ என்று நம்பும் மாணவர்கள் தாராளமாக வெளிநாட்டில் மருத்துவம் படிக்கச் செல்லலாம்… மருத்துவராகலாம்!

வெளிநாடு சென்று மருத்துவம் படிக்க விரும்புகிறீர்களா?

* உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் கல்வி நிறுவனம் இந்திய மருத்துவக் கவுன்சில் அங்கீகாரம் பெற்றுள்ளதா? இந்திய மருத்துவக் கவுன்சில் இணையதளத்தில் அதை அறிந்து கொள்ளலாம் (www.mciindia.org/ActsandAmendments/TheThirdScheduleofIMCAct.aspx).
* உலக சுகாதார அமைப்பும் அந்தக் கல்வி நிறுவனத்தை அங்கீகரித்திருக்க வேண்டும் (www.who.int/workforcealliance/members_partners/member_list/en).
* அந்நாட்டின் பருவநிலை, அரசியல் சூழல், மொழி, உணவு, கல்வி நிறுவனத்தின் பின்புலம், பாடத்திட்ட ஒப்பீடு ஆகியவற்றையும் அலச வேண்டியது அவசியம். newtopdoc

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button