ஃபேஷன்

ஆடை பராமரிப்பு… `ஆல் இன் ஆல்…ஒரு டஜன் யோசனைகள்!

ஆடை பராமரிப்பு… `ஆல் இன் ஆல்

டி மாதம் வந்துவிட்டால் தள்ளுபடியில் அள்ளிக்குவித்து விடுகிறோம் ஆடைகளை! விலையைப் பற்றி யோசிக்காமல் வாங்கும் உடைகளை, வீணாக்காமல் பத்திரமாகப் பராமரிப்பதற்கான ஆலோசனைகளை வழங்குகிறார், சென்னையைச் சேர்ந்த ஃபேஷன் ஸ்டைலிஸ்ட்  அருள்மொழி.

1.தள்ளுபடியில் விழுந்துவிட வேண்டாம்!

தள்ளுபடி என்ற பெயரில், டேமேஜ் பீஸ் ஆடைகளை சில நிறுவனங்கள் விற்கலாம். மேலும், ஆடைகளின் விலையைக்கூட்டி, பிறகு தள்ளுபடி என்ற பெயரில் அதைக் குறைத்து விற்கும் தந்திரங்களும் ஜவுளிச் சந்தையில் சகஜம். எனவே, ‘ஆஃபர்’ என்றாலே வாங்குபவர்களுக்கு ஆதாயம் என்பதில்லை… ஏமாற்று வேலை அதில் ஒளிந்திருக்கலாம் கவனம்.

2.முதல் சலவை!

கடைகளில் வாங்கும் ஆடைகளை பிறர் போட்டுப் பார்த்திருக்கலாம், தூசு படிந்திருக்கலாம் போன்ற சுகாதாரக் காரணங்களால் அவற்றை, எந்தச் சலவைப் பொருளும் இல்லாமல் வெறும் தண்ணீரில் ஒருமுறை அலசிவிட்டே உடுத்தவும். மேலும், ரா சில்க், பனாரஸ், சாஃப்ட் சில்க் என பிரத்யேக மெட்டீரியல்களில் ஆடைகள் வாங்கும்போதே அதன் பராமரிப்பு முறைகளைக் கேட்டறிந்துகொள்ளவும்.

3.உலர்த்தும்போது…

எப்போதும் ஆடைகளை உட்புறத்தை வெளிப்புறமாகத் திருப்பி உலர்த்தவும். நீண்ட நேரம் வெயிலில் காயவிடாமல் உலர்ந்தவுடன் எடுத்துவிடவும். காட்டன் மற்றும் பட்டு ஆடைகளை வெயிலில் காயவைத்தால் விரைவில் பழையதுபோல ஆகிவிடும். துணி உலர்த்தும் கொடியில் துரு இருந்தால் அது ஆடையைப் பாழாக்கிவிடும் என்பதால், கவனித்து நீக்கிவிடவும்.

4.அயர்ன் செய்யும்போது…

அயர்ன் பாக்ஸை எப்போதும் மிதமான சூட்டில் வைத்துத் தேய்ப்பது நல்லது. இதனால் துணி விரைவில் வெளுக்காது. ஜரிகை உள்ள பட்டுப் புடவைகள், வேலைப்பாடுகள் கொண்ட ஆடைகளை அடிக்கடி அதீத சூட்டில் அயர்ன் செய்தால் சூடு தாங்காமல் கறுத்துப்போகும். எனவே, அந்த உடைகள் மீது ஏதேனும் துணி போட்டு அதன் மீது அயர்ன் செய்யவும்.

5.தரமான சலவைத்தூள்!

அதிகளவு pH உள்ள சலவைத்தூள், ஆடைகளை விரைவில் வெளுக்கச்செய்யும் என்பதால் தவிர்க்கவும். வாஷிங் மெஷின் பயன்படுத்துபவர்கள் ஃப்ரன்ட் டோர், டாப் டோர் என அதன் வகையைப் பொறுத்து அதற்கேற்ற சலவைத்தூளை பயன்படுத்துவது சிறந்தது. திரவ வடிவிலான சலவைப்பொருட்கள் பயன்படுத்தும்போது, ஆடைகளில் சோப்பு தூளின் எச்சம் திட்டுத் திட்டாகத் தேங்குவது தவிர்க்கப்படும். அழுக்கை நீக்கும் என்று நினைத்து, துணியின் தேவைக்கும் அதிகமாக சோப்புத்தூளைப் பயன்படுத்தும் மூடநம்பிக்கை வேண்டாம்.

6.தனித்தனி வாஷிங்!

ஜீன்ஸ் போன்ற அதிக எடைகொண்ட ஆடைகள், காட்டன் ஆடைகள், குழந்தைகளின் ஆடைகள், வெள்ளைநிற ஆடைகள் என துணியின் தன்மைக்கு ஏற்ப தனித்தனியே வகைப்படுத்தி சலவை செய்யவும். வாஷிங் மெஷினில் அதற்கென இருக்கும் ஆப்ஷன்களைப் பயன்படுத்தலாம். இதனால் துணியின் தன்மை பாதுகாக்கப்படும். எம்ப்ராய்டரி, ஸ்டோன் வொர்க் போன்ற வேலைப்பாடுகொண்ட ஆடைகளைக் கைகளால் துவைப்பது நல்லது.

7.சாயம் ஒட்டினால் டிரை வாஷா?

ஆடைகளில் சாயம் ஒட்டும்போது, அதை டிரை வாஷுக்குக் கொடுத்து சரிசெய்ய முயற்சிக்க வேண்டாம். டிரை வாஷில்   ஆடையின் சாயம் நீங்காது. பதிலாக மொத்த ஆடையின் நிறமும் மங்கும்படி செய்யப்படும். அதில் கறையும் மங்கிப்போகும். மாற்றாக, சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கும் வாஷிங் கலர் டைகளை சாயம் ஒட்டிய ஆடையின் நிறத்தில் வாங்கி தண்ணீரில் கலந்து, அந்தத் துணியை முக்கி எடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

8.பட்டு ஆடைகள் பத்திரம்!

12

பட்டு ஆடைகளை எப்போதும் முதல்முறை டிரை வாஷுக்குக் கொடுத்து வாங்கவும். அடுத்தடுத்த சலவைக்கு வெறும் தண்ணீரில் முக்கி, நிழலில் காயவைத்து எடுக்கவும்; டிரைவாஷுக்கும் கொடுக்கலாம். சில மணிநேரம்தான் உடுத்திய ஆடை எனில், நிழலில் காயவைத்து மடித்துவைத்து, இன்னொரு முறை உடுத்திவிட்டு பின்னர் சலவை செய்துகொள்ளலாம். பட்டாடைகளை அடிக்கடி சலவை செய்வதைத் தவிர்க்கவும்.

9.பட்டுக்கு வேண்டாம் மடிப்பு!

பட்டாடைகளை அயர்ன் செய்து மடித்துவைக்கும்போது, மாதம், வருடக்கணக்கில் அப்படியே இருக்கும் அந்த ஆடைகளின் மடிப்புகளில் துணி நைந்துபோகலாம் என்பதால் அயர்ன் செய்யாமல் கைகளால் மட்டும் மடித்துவைத்து, உடுத்தும் தருணத்தில் அயர்ன் செய்துகொள்ளலாம். மேலும், மாதம் ஒருமுறை மடிப்பை மாற்றி மடித்தும் வைக்கவும்.

10.கறைகளைப் போக்கலாம்!

ஆடைகளில் படியும் டீ கறை, எண்ணெய்க் கறை, பழச்சாறுகளின் கறை எல்லாம் வெறும் டிடர்ஜென்ட்டுக்கு நீங்காது. பதிலாக வெந்நீரில் டிடர் ஜென்டை கலக்கி துணியை  10 நிமிடம் ஊறவைத்து பின்னர் வினிகர் அல்லது எலுமிச்சைச் சாறு ஊற்றித் தேய்த்தால், கறை காணாமல் போகும்.

11.கிருமிகளிடம் இருந்து பாதுகாப்பு..!

அதிக வியர்வை வெளியேறிய உடைகளை, மறுமுறை உடுத்த நினைக்காமல் சலவை செய்துவிடவும். குழந்தைகளின் ஆடைகளை மிதமான சுடுநீரில் அலசுவது கிருமிகளிடம் இருந்து பாதுகாப்பைத் தரும். மழைக்காலங்களில் துணிகளை அலசிய பிறகு அரோமெட்டிக்  லிக்விட் டிடர்ஜென்ட்டில் ஒருமுறை அலசி காயவைக்க, பூஞ்சை வாடை நீங்கி நறுமணமாக இருக்கும். சாக்ஸ்கள் மற்றும் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் உள்ளாடைகள் போன்றவற்றை தனியாகத் துவைக்கவும். மேலும் வாஷிங்மெஷினை இரண்டு மாதத்துக்கு ஒருமுறை சுத்தம் செய்யவும்.

12.இறுக்கம் வேண்டாம்!

13

இறுக்கமான ஆடைகள் அணியும்போது, தையல்கள் பலவீனப்பட்டு விடுபடும் என்பதால் தவிர்க்கவும். பொதுவாக, பாலியஸ்டர் துணிகளைத் தவிர்த்து காட்டன் துணிகளைப் பயன்படுத்துவது சரும நலனுக்குச் சிறந்தது.

.11

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button