மருத்துவ குறிப்பு

பண நெருக்கடி சுனாமியைச் சமாளிக்கும் வழிகள்

நம்மில் பலர், எப்போதுமே நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறோமே? அந்த நிலையை எப்படித் தவிர்ப்பது? இதோ, சில ஆலோசனைகள்…

பண நெருக்கடி சுனாமியைச் சமாளிக்கும் வழிகள்
இன்றைய சூழலில், பணத்தின் மதிப்பை நாம் அனைவரும் நன்றாக உணர்ந்திருக்கிறோம். சில ரூபாய் நோட்டுகளுக்காக, செயல்படும் ஏ.டி.எம்.களை தேடி அலைந்ததும், வங்கிகள் முன் கால்கடுக்க பல மணி நேரம் நின்றதும் எளிதில் மறக்காது. இதுபோன்ற புறக்காரணங்களால் ஏற்படும் அசாதாரண சூழ்நிலைகளைத் தவிர்க்க முடியாது. ஆனால் நம்மில் பலர், எப்போதுமே நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறோமே? அந்த நிலையை எப்படித் தவிர்ப்பது? இதோ, சில ஆலோசனைகள்…

மனப்பான்மையை மாற்றுங்கள் :

நிதி நெருக்கடி நிலையை நிரந்தரமாகப் போக்குவதற்கான முதல் அடி, பணத்தைப் பற்றிய எதிர்மறையான எண்ணத்தை மாற்றுவதுதான். பணம் குறித்த ஓர் அச்சம் நம் மனதுக்குள் உறைந்திருக்கிறது. நாளைக்கு நம் கையில் பணம் இல்லாமல் போய்விடுமோ, இன்றைய சீரான நிதி நிலை மாறிவிடுமோ என்ற பயம் நம்மை ஆட்டுவிக்கிறது. இப்படி எதிர்மறை எண்ணங்களுக்குப் பதிலாக, பணம் தரும் சுதந்திரம், வாய்ப்புகள், சாத்தியங்கள், வளமை போன்ற நல்ல விஷயங்களை எண்ணுங்கள். பணத்தைப் பற்றி ‘பாசிட்டிவாக’ எண்ணுவதால் மட்டும் நம் பணப் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடுமா என்று கேட்காதீர்கள். அது நமது மனநெருக்கடியைக் குறைக்கும், நிதி நிலைமையை வளமாக்குவதை நோக்கி முதல் படியை எடுத்துவைக்க உதவும்.

மாற்றுவழிகளை யோசியுங்கள் :

செலவுகளைச் சமாளிக்கும் அளவுக்கு நமது வருமானம் போதவில்லை. சரி, அதை எப்படி அதிகரிப்பது? நியாயமான, நேர்மையான எந்த வழியும் சரியானதுதான். உதாரணத்துக்கு, பகுதி நேர வேலை, புதிய தொழில் முயற்சி. பல நெருக்கடியான நேரங்களில்தான் புதிய தீர்வுகள் பிறந்திருக்கின்றன. நாமும் நமது பண நெருக்கடியை, புதிய முயற்சிக்கான தூண்டுகோலாகப் பார்க்கலாம். நிதானமாக யோசித்தாலே நிறைய தொழில் வாய்ப்புகள் புலப்படும். இன்று அவற்றுக்கான வழிகாட்டிகள், கடன் உதவிகளும் பரவலாகக் கிடைக்கின்றன. பெரிய முயற்சிகளில்தான் ஈடுபட வேண்டும் என்பதில்லை. சிறிய விஷயங்களில் தொடங்கியே பெரிய சிகரங்களை நோக்கிப் பயணிக்கலாம்.

தொடர்புகளை வளர்த்திடுங்கள் :

வெற்றி பெற்ற பலரும் தங்களுக்கு உதவிய மனிதர்கள் அதாவது, தொடர்புகள் பற்றிக் கூறுகிறார்கள். நமக்குத் தேவையானபோது மட்டும் பிறரை நாடாமல், எப்போதுமே தொடர்புகளை, அறிமுகங்களை வளர்த்துக்கொள்வது நல்லது. நீங்கள் சந்திக்கும் எந்த ஒரு புதிய நபரும் ஒரு புதிய வாய்ப்பைக் கொண்டுவரலாம். அது எப்போது, யார் மூலம் வரும் என்று தெரியாததால், அதிகமான பேருடன் நல்லுறவை வளர்த்துக்கொள்வது நலம் பயக்கும். பலரை அறிந்திருப்பதன் மூலம் புதிய வாய்ப்புகள் வருவது மட்டுமல்ல, ‘பரிந்துரை’ என்பதன் மூலமும் பலன் பெற முடியும். இரு தரப்புக்கு இடையிலான நடு நபராகச் செயல்படுவதன் மூலம் நியாயமான ஒரு வருவாயைப் பெற முடியும். ஆனால் நாம் தொடர்பு வைத்துள்ள அனைத்து நபர்களிடமும் நமக்கென ஒரு மரியாதையை வளர்ப்பதும், நேர்மையைப் பராமரிப்பதும் முக்கியம்.

சிறுசிறு இலக்குகளை நிர்ணயிங்கள் :

எடுத்ததுமே, ‘எவரெஸ்ட்’ சிகரத்தை எட்டிவிடுவோம்’ என்கிற மாதிரி பெரிய இலக்குகளை நிர்ணயிப்பதை விட, சிறுசிறு இலக்குகளை நிர்ணயித்துக்கொள்வது நல்லது. பொருளாதாரத்தில், ஒரு சிறு இலக்கை நிர்ணயித்து, அதை எட்டியதும் அதைவிட சற்றுப் பெரிய இலக்கின் மீது கவனம் வைக்கலாம். பெரிய இலக்குக்காக முட்டி மோதுவது, திகைப்பையும் அலுப்பையும் ஏற்படுத்தலாம்.

ஆனால் சிறுசிறு இலக்குகள், பெரிய இலக்குகளை எட்டுவதற்குப் படிக்கட்டுகளாக அமையும். உயர்ந்த மலை உச்சியையும், சிறு சிறு படிக்கட்டுகளை ஒவ்வொன்றாக ஏறித்தானே அடைகிறோம்? உங்களின் பொருளாதார லட்சியங்களை எட்ட, தெளிவான திட்டங்களைத் தீட்டுங்கள், அவை நடைமுறைரீதியாக சாத்தியமானவைதானா என்றும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அடுத்து முக்கியமான விஷயம், உங்கள் திட்டங்களை உறுதியாகவும், தொடர்ச்சியாகவும் பின்பற்றுவது. ஆரம்பத்தில் வெற்றி மெதுவாகவும், ஒன்றிரண்டாகவும் வந்தாலும், கால ஓட்டத்தில் நன்மைகள் மழையெனப் பொழியத் தொடங்கும்.

நம்பிக்கைக்கு உரியவர் களிடம் சொல்லுங்கள் :

நாம் நமது பண லட்சியங்களை நம் மனதுக்குள்ளே பூட்டி வைத்திராமல், நமக்கு நெருக்கமானவர்கள், நம்பிக்கைக்குரியவர்களிடம் அவற்றைப் பகிர்ந்துகொண்டு, அவர்களின் ஒத்துழைப்பையும் ஆலோசனையையும் பெறலாம். நாம் நம் மனதுக்குள் மலையென நினைத்துக்கொண்டிருக்கும் பிரச்சினைகளைக் கூட அடுத்தவர்கள் பனியாய் கரைத்துவிடுவார்கள். நாம் சந்திப்பதைப் போன்ற நெருக்கடியை பிறரும் சந்தித்திருக்கக்கூடும். அதனால் அவர்களால் எளிதாக வழிகாட்ட முடியும். நாம் நமது மனச்சுமையைப் பகிர்ந்துகொள்வதால், பாரமும் குறையும்.

வெற்றிகரமானவர்கள் அருகில் இருங்கள் :

வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற துடிப்புள்ளவர்கள், வெற்றி பெற்றவர் களின் அருகில் இருப்பதால், அவர்களின் ‘நெருப்பு’ உங்களையும் பற்றிக் கொள்ளும். வெற்றிக்கு அவர்கள் பயன்படுத்திய நியாயமான வழிகளை நாமும் பின்பற்றிப் பார்க்கலாம். உங்களுக்குத் தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும்போது, இயல்பாகவே உங்களால் முடங்கிக் கிடக்க முடியாது. வெற்றிகரமானவர்களைப் பின்பற்றுவதுதான் வாழ்வில் வெற்றி பெறுவதற்கு நிச்சயமான வழி என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

உங்கள் நண்பர் எப்படி இருக்கிறாரோ, அதைப் போல நீங்களும் கொஞ்சம் மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. உங்கள் நண்பர், உடலை கச்சிதமாக வைத்துக்கொள்வதில் ஆர்வம் உள்ளவர் என்றால், அவர் அதைப் பற்றி பேசப் பேச, உங்களையும் அது தொற்றிக்கொள்ளும். பண விஷயத்துக்கும் அது பொருந்தும். எனவே, உங்கள் நண்பர்கள் வட்டாரத்தையும், அறிந்தவர் வட்டாரத்தையும் பண விஷயத்தில் பொறுப்புள்ளவர்களாக, இலக்கு உள்ளவர்களாக அமைத்துக்கொள்ளுங்கள். நாளடைவில் அவர்களின் பழக்கம் உங்களையும் தொற்றிக்கொண்டுவிடும்.

வாய்ப்புகள் ஏராளம் :

பலருக்கும், பணம் சம்பாதிப்பதும், அதைப் பாதுகாப்பதும் கடினமாகத் தோன்றுகின்றன. ஆனால் நமது பொதுவான எண்ணத்துக்கு மாறாக, நம்மைச் சுற்றி வாய்ப்புகளும் வளமையும் நிறைந்திருக்கின்றன. ஆனால் பலர், பண ஊற்றை நோக்கி ‘வாட்டர் டேங்கருக்கு’ பதிலாக ‘வாட்டர் பாட்டிலை’ எடுத்துக்கொண்டு வருகிறார்கள்.

கொட்டிக் கிடக்கும் பணத்தை வெட்டி எடுக்க மண்வெட்டி அல்லாமல், சிறு ஸ்பூனை கொண்டு வருகிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பது கொஞ்சம்தான், எனவே அவர்களுக்கு கிடைப்பதும் கொஞ்சம்தான் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். நியாயமான முறையில் நிறையப் பணம் சம்பாதிக்க நினைப்பது தவறல்ல. நாம் வளமையாக இருக்கும்போதுதான், நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு நம்மால் உதவ முடியும். எனவே சரியான வழியைத் தேர்ந்தெடுப்போம், வாழ்வில் வளம் பெறுவோம். 201612100823519160 Ways financial crisis SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button