மருத்துவ குறிப்பு

குழந்தையை விடுதியில் சேர்த்து படிக்க வைக்கலாமா?

தவிர்க்க முடியாத காரணங்களுக்காக குழந்தைகளை விடுதியில் சேர்க்கலாம். ஆனால் அத்தியாவசிய காரணம் எதுவுமே இல்லாமல் குழந்தையை விடுதியில் தள்ளுவது சரியல்ல.

குழந்தையை விடுதியில் சேர்த்து படிக்க வைக்கலாமா?
இக்கால குழந்தைகளுக்கு கல்வி மிக அவசியமானது. குழந்தைகளை வீட்டில் வைத்து வளர்ப்பது தற்காலத்தில் சற்று சிரமமான காரியம் தான். அதிலும் குறிப்பாக பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியராக இருந்தால் அவர்களை பராமரித்து படிக்க வைப்பது சிரமத்திலும் சிரமம்.

அதிகாலையில் எழுந்திருக்கவே எழுந்திருக்காத குழந்தையை எழுப்பி படிக்க வைக்க வேண்டும். சரியான நேரத்திற்குள் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். மாலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட டியூசன்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இதற்கிடையில் குழந்தைகளுக்கு ஏற்படும் கவனச்சிதைவை சரியாக கண்கானித்து அதை ஒழிக்க தக்க முயற்சி எடுக்க வேண்டும்.

இத்தனையும் செய்து அதிக மதிப்பெண் பெற வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. அதனால் ஒரு விடுதியுடன் கூடிய நல்ல பள்ளியில் குழந்தையை இளம் வயதிலேயே சேர்த்து விட்டால் பெற்றோர் தங்கள் வேலைகளைப் பார்க்கலாம். குழந்தையின் படிப்பும் நன்றாக இருக்கும்.

ஒரு குழந்தையை விடுதியில் சேர்த்து படிக்க வைப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. பெற்றோர் தங்கள் குழந்தைகளை வீட்டில் வைத்து வளர்ப்பதே நல்லது. அதுதான் சரியான முறையும் கூட. வீட்டில் வைத்து வளர்க்கப்படும் குழந்தைக்கு பெற்றோர் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை கவனித்து அதுபோல தங்கள் நடத்தையை அமைத்துக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

குழந்தைகளுக்கு அவ்வப்போது அம்மா அப்பாவுடன் இருக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றும். அதுபோன்ற நேரத்தில் பெற்றோருடன் வளரும் குழந்தைகளுக்குப் பிரச்சனை இல்லை. ஒருநாள் பள்ளிக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டில் பெற்றோருடன் இருந்து விளையாடி மகிழலாம். விடுதியில் வளரும் குழந்தைகளுக்கு இந்த வாய்ப்பு இல்லை.

விடுதிக் குழந்தைகள் சற்று உடல் நலம் சரியில்லை என்றால் கூட விதிமுறைப்படி செய்ய வேண்டிய வேலைகளை செய்தே ஆக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தீவிரமாக உடல் நலம் பாதிக்கப்பட்டால் தான் கடமைகளிலிருந்து விலக்குப் பெற முடியும். சாப்பாட்டு விஷயத்திலும் அது போன்றே தான். வீட்டில் பல்வேறு வகையான சத்துப் பொருள்களை உண்டு வளரும் குழந்தைகள் விடுதியில் திட்டம் போட்டு வழங்கப்படும் தினசரி உணவுகளை உண்டு அலுப்புக்கு உள்ளாகிவிடுவர்.

விடுதியில் வளரும் குழந்தைகளிடம் ஒருசில ஆளுமை குறைபாடுகளும் காணப்படுகின்றன. பெரும்பான்மையான விடுதியில் வளர்ந்த குழந்தைகள் வெளிஉலகுக்கு வரும்போது மிக மென்மையானவர்களாக இருக்கின்றனர் அல்லது சற்று கோமாளித்தனம் கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு வீட்டில் வளர்ந்த குழந்தைகளைப் போல வாழ்க்கையின் நடைமுறைகள் அவ்வளவாக தெரிவதில்லை. தன்னைப் பற்றி அதிகம் சிந்திப்பவர்களாகவும் சற்றே சுயநலம் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். இவர்கள் பிறரைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. உறவினர்கள் மீதான மரியாதையும் இவர்களிடம் குறைவாக இருக்கிறது.

அப்படியானால் விடுதியில் குழந்தைகளை சேர்க்கவே கூடாதா என்ற கேள்வி எழலாம். சூழ்நிலை சந்தர்ப்பங்களை கருத்தில் கொண்டு ஒரு குழந்தையை விடுதியில் சேர்க்கலாமா வேண்டாமா என்பதை பெற்றோர்களே முடிவு செய்து கொள்ளலாம்.

வெளியூர்களில் அல்லது வெளிநாடுகளில் பெற்றோர் வசித்தல், குழந்தை வளரும் சூழ்நிலை சரியில்லாமல் இருத்தல், யாரேனும் ஒரு பெற்றோர் இல்லாமல் இருத்தல் போன்ற காரணங்களுக்காகவும் விடுதியில் குழந்தையை சேர்ப்பது தவறல்ல.

தவிர்க்க முடியாத காரணங்களுக்காக குழந்தைகளை விடுதியில் சேர்க்கலாம். ஆனால் அத்தியாவசிய காரணம் எதுவுமே இல்லாமல் குழந்தையை விடுதியில் தள்ளுவது சரியல்ல. என்னால் என் குழந்தையை வளர்க்க முடியவில்லை, யாரேனும் வளர்த்துக் கொடுத்தால் அதற்கு பணம் கொடுத்து விடலாம் என்று நினைக்கும் பெற்றோர்களே குழந்தைகளை காரணமில்லாமல் விடுதியில் சேர்க்க முடிவெடுப்பர்.201612261127145057 Can the child study along in the hostel SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button