ஆரோக்கிய உணவு

மணம் தரும்… நோயை விரட்டும் சீரகம்!

நாம் உணவுக்கு மணமூட்டியாகப் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று, சீரகம். இது வெறும் மணமூட்டி மட்டும் அல்ல. பார்க்க அவ்வளவாக வசீகரம் இல்லாமல், கொஞ்சம் அழுக்காக, அப்படியே சாப்பிட்டால் லேசான கசப்பாக, உலர்வாக இருக்கும் சீரகம் ஒரு மிகச் சிறந்த மருந்து. அதாவது, நோயை விரட்டும் சீரகம். நம் அகத்தைச் சீர்ப்படுத்துவதால், இதற்குச் சீரகம (சீர்+அகம்) எனப் பெயர் வந்தது.

நோயை விரட்டும் சீரகம்

நாம் உணவுக்கு மணமூட்டியாகப் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று, சீரகம். இது வெறும் மணமூட்டி மட்டும் அல்ல. பார்க்க அவ்வளவாக வசீகரம் இல்லாமல், கொஞ்சம் அழுக்காக, அப்படியே சாப்பிட்டால் லேசான கசப்பாக, உலர்வாக இருக்கும் சீரகம் ஒரு மிகச் சிறந்த மருந்து; நோயை விரட்டும். அதாவது, நம் அகத்தைச் சீர்ப்படுத்துவதால், இதற்குச் சீரகம (சீர்+அகம்) எனப் பெயர் வந்தது.

`போசனகுடோரியைப் புசிக்கில் நோயெல்லா மருங்காசமிராதக் காரத்திலுண்டிட’ என, சித்த மருத்துவ இலக்கியமான, `தேரன் வெண்பா’வில், ஜீரண நோயெல்லாம் வராமல் காக்கும் `போசனகுடோரி’ எனப் போற்றப்பட்டது. பித்த நோய்க்களுக்கு எல்லாம் முதல் மருந்தாகப் போற்றப்பட்ட சீரகம், அஜீரணம், கண் எரிச்சல், சைனசிட்டிஸ், வாந்தி, விக்கல், கல்லடைப்பு எனப் பல நோய்களுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
shutterstock 245347891 17563
சிறந்த மருந்து சீரகம்

உலகின் மூத்த மணமூட்டியான சீரகம், கிரேக்கத்திலிருந்து உலகெங்கும் பரவியது. சீரகத்தின் பிரத்யேக மணத்தின் காரணமாக, கிரேக்கத்தில் `வரிக்குப் பதிலாக, சீரகம் செலுத்தலாம்’ எனும் அரசாணையே அந்தக் காலத்தில் இருந்ததாம். இன்று, சீரகம் உலகை ஆளும் ஒரு மருத்துவ உணவு (Functional Food). இன்று நம் ஊர் ரசம் தொடங்கி, மெக்ஸிகோவின் பிரிட்டோஸ், மொராக்கோவின் ரஸ்-எல்-ஹேனோ என உலகின் அத்தனை கண்டங்களின் சிறப்பு உணவுகளிலும் சீரகம் மணமும் தந்து, நோயை ஓட்டும் மருந்தாகவும் இருக்கிறது.

சீரகம் தரும் நன்மைகள்!

* `எட்டுத் திப்பில் ஈரைந்து சீரகம் கட்டுத் தேனில் கலந்துண்ண விக்கலும் விட்டுப்போகும்’ என்கிறது சித்த மருத்துவம். அதாவது, விடாமல் இருக்கும் விக்கலுக்கு, 8 திப்பிலியையும் 10 சீரகத்தையும் பொடித்து, தேனில் கலந்து சாப்பிட்டால் போதும், விக்கல் நின்றுவிடும்.

* உணவு செரிமானம் ஆகாமல் எதிர்த்துக்கொண்டு வரும்போது (GERD), சாதாரண தண்ணீருக்குப் பதில், உணவருந்தும்போது, இளஞ்சூடான சீரகத் தண்ணீர் அருந்தலாம்.

* `சாப்பிட்ட கொஞ்ச நேரத்துக்கெல்லாம் வயிறு உப்பிடுது’ என வருத்தப்படுபவர்களுக்கு இது ஓர் அருமருந்து. சீரகத்தையும் ஏலக்காயையும் சம அளவில் எடுத்து, நன்கு இள வறுப்பாக வறுத்து, பொடி செய்து, உணவுக்குப் பின் கால் டீஸ்பூன் அளவு சாப்பிட, இந்தப் பிரச்னை தீரும்.

* சீரகத்தூளை வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டுவர, எரிச்சலுடன் கூடிய அல்சர் நோய் தீரும்.
shutterstock 355619258 17139
சீரகம்

* சீரகத்தை தனித்தனியே கரும்புச் சாறு, எலுமிச்சைச் சாறு, இஞ்சிச் சாறு, முசுமுசுக்கைச் சாறு ஆகியவற்றில் மூன்று நாட்களுக்கு ஊறவைத்து, வெயிலில் காயவைக்க வேண்டும். நன்கு ஊறிய சீரகத்தை மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த சீரகச் சூரணம், பித்தத் தலைவலி எனும் மைக்ரேன் தலைவலிக்கும், பித்தத்தால் அதிகரிக்கும் உயர் ரத்த அழுத்தத்துக்கும் சிறந்த துணை மருந்து. வீட்டில் செய்ய முடியாதவர்கள், சித்த மருந்துக் கடைகளில் `சீரகச் சூரணம்’ என்று கேட்டு வாங்கிப் பயன்படுத்தலாம்.

* இஞ்சியை தோல் சீவி, சில மணித் துளிகள் ஈரம் போகும் வரை உலரவைத்து, அதே அளவுக்கு சீரகத்தை எடுத்து, இரண்டையும் பொன் வறுவலாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். இரண்டின் கூட்டு அளவுக்குச் சமமாக நாட்டுச்சர்க்கரையைக் கலக்கவும். இந்தக் கலவையை அரை டீஸ்பூன் அளவுக்கு காலை வேளையில் சாப்பிட, மைக்ரேன் தலைவலி படிப்படியாகக் குறையும்.

* சீரகத்தையும் வில்வவேர்க் கஷாயத்தையும் சேர்த்து, சித்த மருத்துவர்கள் செய்யும் `சீரக வில்வாதி லேகியம்’, பித்த நோய்கள் பலவற்றையும் போக்கும் மிக முக்கிய மருந்து. சீரகம், பித்தத்தைச் சீர்ப்படுத்தும் மருந்து. எனவே, உளவியல் நோய்க்கும்கூட இதை ஒரு துணை மருந்தாகப் பயன்படுத்த முடியும்.

* சீரகத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஏ, குடல் புற்றுநோய் வருவதைத் தடுக்கும் ஆற்றல்கொண்டது.

பஞ்ச தீபாக்னி சூரணம்

குழந்தைகள் சாப்பிட அடம்பிடிக்கிறார்களா? சீரகம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய் இவற்றைச் சம பங்கு எடுத்து, நன்கு மையாகப் பொடி செய்து, அத்துடன் சம அளவு நாட்டுச்சர்க்கரை கலந்து பாட்டிலில் வைத்துக்கொள்ளுங்கள். சாப்பிடுவதற்கு முன்னர், இதிலிருந்து இரண்டு முதல் நான்கு சிட்டிகையை எடுத்து தேனில் குழைத்துக் குழந்தைக்குக் கொடுங்கள். இது நேரத்துக்கு பசியைத் தூண்டும்; ஆரோக்கியத்தையும் பராமரிக்கும்.

பொங்கலோ, பொரியலோ சீரகம் சேர்க்கத் தவறாதீர்கள்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button