கர்ப்பிணி பெண்களுக்கு

குழந்தைகளை ஊனமாக்கும் குமட்டல் மாத்திரை

ஒரு பெண்ணின் மகிழ்ச்சியான தருணம் என்பது கர்ப்பம் தரிப்பதுதான். அந்த கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் ஏற்படும் குமட்டலும், வாந்தியும் அந்த மகிழ்ச்சியான தருணத்தை மறக்கடித்து விடுகின்றன. கர்ப்பிணிகளுக்கு இம்சைதரும் இந்த குமட்டலை கட்டுப் படுத்துவதற்காக 1957-ல் ‘தலிடோமைட்’ என்ற மாத்திரை அறிமுகப்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் கர்ப்பிணிகளுக்கு வரப்பிரசாதமாக கருதப்பட்ட இது சிறிது காலத்திலேயே மோசமான விளைவுகளை தரத் தொடங்கியது.

அதாவது இந்த மாத்திரையை உபயோகித்த தாய்மார்களின் குழந்தை கள் பெரும்பாலும் கைகால் ஊனத்துடன் பிறந்தன. 1950களின் இறுதியிலும் 60களின் தொடக்கத்திலும் 46 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிப்புக்குள்ளாயின. இதுதவிர கணக்கில் வராத குழந்தைகளின் எண்ணிக்கையும் ஏராளம்.

மாத்திரையின் வீரியம் கண்டு 1961-ல் இதன் உபயோகம் முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. சிறிது காலம் கடந்த பின் வேறு சில நோய்களுக்கு தலிடோமைட் கொடுக்கத் தொடங்கினர். கேன்சர் நோய்க்கு வலி நிவாராணியாகவும் பயன்படுகிறது.

இந்த மாத்திரை குழந்தைகளை ஊனப்படுத்த என்ன காரணம் என்று இங்கிலாந்தில் இருக்கும் அபிர்தீன் பல்கலைக்கழகம் ஒரு ஆய்வை மேற்கொண்டது. அதன் முடிவில், “தலிடோமைட் மாத்திரை ரத்தக் குழாய்களை அதிகமாக பாதிக்கிறது. ஒரு பெண் கர்ப்பம் ஆக ஆரம்பித்த முதல் மூன்று மாதங்களுக்குத்தான் குமட்டல், வாந்தி போன்ற தொந்தரவுகள் இருக்கும். அப்போதுதான் இந்த மாத்திரையை பயன்படுத்துகிறார்கள். அந்தக் காலகட்டத்தில்தான் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு கை, கால்கள் வளரத் தொடங்கும். எனவே, தலிடோமைட் நேரடியாக அதை பாதிக்கிறது. அதனால்தான் பிறக்கும் குழந்தைகள் கை, கால் வளர்ச்சி இன்றி பிறக்கின்றன” என்று கண்டறிந்தார்கள்.

இந்த மாத்திரை குழந்தைகளை அரைகுறையாக பிறக்க வைப்பது மட்டுமல்ல. வேறு சில கேடுகளையும் உருவாக்குகிறது. மலச்சிக்கல், நரம்பு பாதிப்பு, கால்களில் உள்ள ரத்த நாளத்தில் ரத்தம் உறைந்து போதல் போன்ற கோளாறுகள் ஏற்படுகின்றன. விஞ்ஞானிகள் இந்த மருந்தை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்கிறார்கள். இங்கிலாந்தில் உள்ள பிரிங்க்டனை சேர்ந்தவர் ஜான் ராபர்ட். இவருக்கு 48 வயது ஆகிறது. இவருக்கு காது வளரவே இல்லை. இவருடைய தாயார் இவர் கருவில் இருக்கும் போது தலிடோமைட் மாத்திரையை உட்கொண்டாராம்.

ராபர்ட்டுக்கு இப்போது கண்களும் சரியாக தெரிவதில்லை. கண்ணாடி போட வேண்டும். கண்ணாடி போட காது வேண்டுமே. அது இல்லாததால் தனது டிஜிட்டல் கேமரா வழியாகவே அனைத்தையும் பார்க்கிறார். 3 47

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button