மருத்துவ குறிப்பு

பாதப்பராமரிப்புக்கான மருத்துவமுறைகள்

நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் இன்று நாம் பாதங்களில் ஏற்படும் பித்தவெடிப்பு, குதிகால் பிரச்னை, நகச்சொத்தை போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கான தீர்வுகள் குறித்து அறிந்து கொள்வோம். சில நாட்களில் மழைக்காலம் தொடங்க உள்ளது. மழைக்காலங்களில் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பாதபாதிப்பு என்பது பெரும்பாலானவர்களை தாக்கும். இதில் இருந்து எளிதில் விடுபடவும் வராமல் இருக்க முன்னெச்சரிக்கையாகவும் நாம் எளிதில் வீட்டிலேயே செய்யக்கூடிய நாட்டு மருத்துவமுறைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இன்று தெரிந்து கொண்டு பயன்பெறுவோம். பொதுவாக மழைக்காலங்களில் மட்டுமின்றி எப்பொழுதுமே பாதங்களில் பலருக்கு தொற்று ஏற்படுவது உண்டு. இதற்கு எளிய தீர்வாக அமையும் மருத்துவம் குறித்து முதலில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்: வேப்பிலை, குப்பைமேனி, மஞ்சள்தூள். வேப்பிலை, குப்பைமேனி இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து சுத்தம் செய்து தனித்தனியே விழுதாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் சிறிது நீர் ஊற்றி கொதிவரும் போது அதில் ஒரு டீஸ்பூன் அளவு இரண்டு விழுதுகளையும் சேர்த்து அதில் சிறிதளவு மஞ்சள் தூளும் சேர்த்து கொதிக்க வைத்து ஆற விடவும். பின்னர் ஒரு வாயகன்ற டப்பில் சிறிது வெதுவெதுப்பான நீர் எடுத்து அதில் இந்த மருந்து கலவையை ஊற்றி சுமார் 10 நிமிடங்களுக்கு காலை அதில் முக்கி வைக்கவும். பின்னர் எடுத்து காலை கழுவிவிடலாம். இதனை தொடர்ந்து செய்துவர பாத தொற்றுகள் இருந்தால் நீங்கும். வராமல் பாதுகாக்கும். தொற்றை நீக்கும் தன்மை குப்பைமேனி மற்றும் வேப்பிலைக்கு உண்டு.

அடுத்து பித்த வெடிப்பு மற்றும் நகச்சொத்தைக்கான எளிய மருத்துவம். தேவையான பொருட்கள்: வாழைப்பழம் (எந்த வகையாக இருந்தாலும் பயன்படுத்தலாம்.), மஞ்சள்தூள் அல்லது விளக்கெண்ணை. வாழைப்பழத்தை தோலுரித்து எடுத்து நன்கு பிசைந்து கொள்ளவும். அதனை பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சுமார் 10 நிமிடங்கள் ஊறவிடவும். இதனுடன் மஞ்சள் தூள் கலந்தும் தடவலாம். ஊறிய பின்னர் அவற்றை எடுத்து விட்டு சுத்தமான தண்ணீரில் கழுவி துடைத்துவிட்டு சிறிது விளக்கெண்ணைய் தடவிவர பித்த வெடிப்பு குதிகால் வெடிப்பு உள்ளிட்டவை குணமாகும். இதே பிரச்னைக்கு மற்றொரு மருத்துவம் குறித்து தெரிந்து கொள்வோம்.

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் எளிய பொருட்களான இலுப்ப எண்ணை மற்றும் புங்க எண்ணை இரண்டிலும் சமஅளவு எடுத்து நன்கு கலந்து இரவு படுக்கும் முன்பு பாதங்களில் தடவி காலையில் கழுவி வந்தால் பித்த வெடிப்பு பிரச்னைகள் எளிதில் நீங்கும். பங்கஸ் எனப்படும் நகச்சொத்தைக்கான மற்றொரு மருத்துவமுறை குறித்து தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள் சீமை அகத்தி பூ, நல்லெண்ணை, சீமை அகத்தி பூக்களை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது எண்ணை விட்டு வதக்கி லேகிய பதம் வந்ததும் ஆறவைத்து அதை பங்கஸ் உள்ள இடங்களில் இரவில் தொடர்ந்து தடவி வரவும்.

சீமை அகத்தி இலை மற்றும் பூக்கள் பங்கஸ் எனப்படும் பூஞ்சை பிரச்னைக்கு அருமருந்தாக விளங்குகிறது. கஜூர் என்பது காய்ந்த பேரிச்சை. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதனை வாங்கி 5 அல்லது 6 காய்கள் எடுத்து இரவில் ஊறவைத்து காலையில் அதை பாலில் கொதிக்க வைத்து தொடர்ந்து அருந்திவர ஹீமோகுளோபின் அளவு கூடும். உடல் வனப்படையும். இப்படி பணச்செலவுகள், பக்கவிளைவுகள் இல்லாத நாட்டு மருத்துவம் அனைவருக்கும் பயன்தரும் என்பதில் சந்தேகமில்லை. fJhVwCU

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button