மருத்துவ குறிப்பு

சித்தர்களின் ஹைக்கூ… சித்தரத்தை!

‘இருமலுக்கு சித்தரத்தை, இதயத்துக்குச் செம்பரத்தை… சுக்குக்கு மிஞ்சிய மருந்துண்டா, சுப்பிரமணிக்கு மிஞ்சிய சாமியுண்டா’ என்ற சொலவடைகளில் சுகமாக கைவைத்தியங்கள் ஒட்டியிருக்கின்றன. இருமலுக்குச் சித்தரத்தை என்பதுதான் இந்த அத்தியாயத்தில் நாம் அறியவுள்ள சித்தர் ஹைக்கூ.

shutterstock 392914501 16038

‘தொண்டையில் கட்டும் கபத்தைத் துரத்தும் பண்டைச் சீதத்தைப் பராக்கடிக்கும் கெண்டை விழிப் பெண்ணே!’ – என அகத்திய குணவாகடத்தில் அழகுப் பெண்ணுக்கு ஆரோக்கியக் குறிப்பாக, அரத்தையைக் (சித்தரத்தை) காட்டிப் பாடியுள்ளார் சித்தர். இது இஞ்சிக் குடும்பத்துப் பெண்தான். இந்தியாவில் இஞ்சியைக் கொண்டாடுவதுபோல, தாய்லாந்தும், இந்தோனேஷியாவும், வியட்நாமும் அரத்தை இல்லாமல் அம்மிப் பக்கம் போவது இல்லை.

அரத்தையில் சித்தரத்தை, பேரரத்தை என இரண்டு ரகங்கள் உண்டு. இரண்டும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றாலும், இதற்கு மருத்துவச் சிறப்பு கொஞ்சம் ஒசத்தி.

சிறப்பான பலன்கள்…

* கால் டீஸ்பூன் அளவு சித்தரத்தைப் பொடியைத் தேனில் குழைத்து, காலை, மாலை என மூன்று நாட்கள் சாப்பிட்டால், நுரையீரலில் ஒட்டிக்கொண்டு அகல மறுக்கும் கோழைச் சளியை, இளக்கிக்கொண்டுவந்து வெளியேற்றி, இருமலைப் போக்கும்.

* சளிக்குக் காரணமான சால்மோனெல்லா (Salmonella), ஸ்ட்ரெப்டோ காக்கஸ் எனப் பல்வேறு நுண்ணுயிரிகளின் கொட்டத்தை அடக்கும் எதிர் நுண்ணுயிரி ஆற்றலும் (Anti-biotic activity) கொண்டது என, இன்றைய நவீன அறிவியலும் அங்கீகரித்துள்ளது.

* இதை சிறுசிறு துண்டுகளாக்கி, அதில் நான்கைந்து துண்டுகளை, இரண்டு டம்ளர் நீர்விட்டு, மூன்று மணி நேரம் ஊறவைத்து, அந்த ஊறல் கஷாயத்தைச் சாப்பிட்டால் இருமல் போகும்.

சித்தரத்தை

* சின்னதாக இரண்டு துண்டு சித்தரத்தையை வாயில் அடக்கிக்கொண்டால், பேச்சுக்கிடையே வரும் இருமல் பேசாமல் அடங்கிவிடும். வறட்டு இருமல், சூட்டு இருமலுக்கு, இந்தத் துண்டுடன் பனங்கற்கண்டையும் சேர்த்து வாயில் ஒதுக்கிக்கொள்ள வேண்டும்.

* வயோதிகத்தில் வரும் மூட்டுவலிக்கும், ரூமட்டாய்டு மூட்டுவலிக்கும் (Rheumatoid Arthritis) அரத்தையையும் அமுக்கராங்கிழங்கையும் நன்றாக உலர்த்தி, பொடித்து வைத்துக்கொண்டு, கால் டீஸ்பூன் எடுத்து, தேனில் கலந்து, காலை, மாலை உணவுக்கு முன்னர் 45 நாட்கள் சாப்பிட வேண்டும். இது ஒரு சிறந்த வலி நிவாரணியாகவும் அழற்சியைப் போக்கி நோயின் தீவிரத்தைக் குறைக்கவும் இந்தப் பொடி உதவும். புற்றுநோய்க்கு, அறுவைசிகிச்சை எடுத்துக்கொண்டாலும், இந்தப் பொடியை செயல்பாடு உணவாக (Functional food) எடுத்துக்கொள்வது கூடுதல் பயனை அளிக்கும்.

சித்தரத்தை

* சித்தரத்தை, அதிமதுரம், தாளீசம், திப்பிலி இவற்றைச் சமபங்கு எடுத்து, வறுத்துப் பொடித்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் வைத்துக்கொண்டால், மூன்று மாதங்கள் இதன் திறன் குறையாது. இதன் மருத்துவச் செயல்பாட்டுக்கு, அதன் மாறாத குணம் முக்கியம். அடிக்கடி சளி, இருமல் வரும் குழந்தைகளுக்கு, இரைப்பிருமல் எனும் ஆஸ்துமாவால் அவதிப்படுவோருக்கு, இந்தப் பொடியைக் கால் டீஸ்பூன் எடுத்துத் தேனில் குழைத்து, காலையில் உணவுக்கு முன்னர் கொடுத்து வரலாம்.

நம் ஊர் நாட்டு மருந்துக்கடைகளில் சித்தரத்தை மாதிரி பல அற்புதங்கள், அழுக்குக் கோணியில் கட்டப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. இதன் மகத்துவத்தை அறிந்து, நம் பாட்டன் வீட்டுச் சொத்தான இதை பயன்படுத்தி, பாதுகாப்பாக இருப்போம்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button