ஆரோக்கிய உணவு

உங்கள் மனநிலையை மகிழ்ச்சியாக்கும் பழம்

உணவே மருந்து

ஆரோக்கியம் என்பது உடல் சார்ந்தது மட்டுமே அல்ல… உடல், மனம் மற்றும் சமூகம் அனைத்தும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். மனநலம் ஆரோக்கியமாக இருப்பின் மற்றவையும் நலமாகும். மனநலத்தை மேம்படுத்த சிகிச்சை முறைகள் பல இருப்பினும், முக்கிய இடம் வகிப்பது உணவு. அதுசரி. உணவு, உடல் ஆரோக்கியத்துக்கு உதவும். அதற்கும் மனதுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் நினைக்கலாம்.

“நம் மனநிலை மாற்றங்களுக்கும் எண்ணங்களுக்கும் நம் மூளையில் சுரக்கும் நியூரோ டிரான்ஸ்மிட்டர்ஸ் என்னும் ரசாயனங்கள் காரணமாகின்றன” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கலாராணி சரவணன்.”நம் உணவில் இருந்து, நம் உடல், தனக்குத் தேவைப்படும் ட்ரிப்டோபன், டைரோசின், கோலின் எனும் அமினோ அமிலங்கள் என்ற நியூரோ டிரான்ஸ்மிட்டர்களை தயாரித்துக் கொள்கிறது. இதற்கேற்ப உணவுகளை எடுத்துக் கொண்டால், அவை மருந்து போல செயல்பட்டு, நம் மூளையின் செயல்பாடுகளில் மாற்றங்கள் நிகழ்கின்றன” என்கிற அவர், மனதை மகிழ்ச்சியாக்கும் தன்மை கொண்ட சில உணவுகள் பற்றிப் பேசுகிறார்.

சிவப்பரிசி சிவப்பரிசியில் உள்ள ரைபோஃபிளேவின் என்ற வைட்டமின் ‘பி’, மூளை செல்களின் ஆற்றலை வெளிப்படுத்த உதவுகிறது. இது, நயாசின், தையமின், ஐனோசிடால் போன்ற ‘பி’ வைட்டமின்களையும் உள்ளடக்கியுள்ளது. நம் உடலில் போதுமான அளவு ‘பி’ வைட்டமின் இருக்கும் போதுதான் ட்ரிப்டோபன் என்னும் அமினோ அமிலம், நியூரோடிரான்ஸ்மிட்டரான ‘செரட்டோனின்’ ஆக மாற்றப்படுகிறது.

இது நம் மனதை அமைதியடைய வைத்து, கற்கும் திறனும் ஞாபக சக்தியும் மேம்பட உதவுகிறது. மன திருப்தியையும் நிறைவான தூக்கத்தையும் தருவதால் மனம் உற்சாகத்துடன் இருக்கும். செரட்டோனின் குறைந்தால் மன அழுத்தம் (Depression), தூக்கமின்மை, முரட்டுத்தனம் ஆகியவை தோன்றும். இதுவே பாலீஷ் செய்யப்பட்டு வெள்ளையாக இருக்கும் அரிசியில் ‘பி’ வைட்டமின் மிகவும் குறைவாக இருக்கும். சிவப்பரிசியில் அன்றாடம் நாம் செய்யும் தோசை, இட்லி, கொழுக்கட்டை போன்ற உணவு வகைகள் அனைத்தையுமே செய்யலாம்.

மீன்புரதச்சத்து நிறைந்த மீன், டைரோசின் என்ற அமினோ அமிலத்தைக் கொண்டது. உடலில் டைரோசின் அதிகமாக இருக்கும் போது, மூளையின் செல்கள் டோபமைன் என்னும் நியூரோ டிரான்ஸ்மிட்டரை தயாரிக்கின்றன. நம்மை சுறுசுறுப்படையச் செய்து முறையான நரம்பு மண்டல செயல்பாட்டை அதிகரிக்கச் செய்கிறது. டோபமைனை உபயோகிக்கும் மூளை செல்களை பாதுகாக்க, மீன் உணவு அவசியம். மீனில் உள்ள ஒமேகா 3 செரட்டோனின் சுரப்பை அதிகரிக்கிறது. மீனில் உள்ள செலினியம் எனும் தாதுப் பொருள் ஆக்சிஜனேற்றத்துக்கு முக்கியம். ஆக்சிஜனேற்றம் மூளையின் செயல்பாட்டுக்கு உதவுவதுடன் மகிழ்ச்சியையும் அதிகரிக்கும்.

கருப்பட்டிகடந்த 30 ஆண்டுகளாக வெள்ளை சர்க்கரை நம் சமையல் அறையில் நீங்காத இடத்தைப் பிடித்துக் கொண்டு, நாம் நோயாளியாக மாறுவதற்கும் காரணமாகிவிட்டது. நாம் அநேகமாக மறந்து விட்ட – நமது முன்னோர் அதிகம் பயன்படுத்திய வெல்லம், கருப்பட்டி போன்றவை இப்போது மேலைநாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி ஆகின்றன.

வைட்டமின் ‘பி 6’ மற்றும் ‘பி 12’ குறைவாக உட்கொள்பவர்களுக்கு மன அழுத்தம் அதிகம் ஏற்படுகிறது என ஆராய்ச்சி கூறுகிறது. நம் கருப்பட்டியில் இவ்விரண்டும் அதிகம் உள்ளது. மனச்சோர்வுடன் இருக்கும் போது, வெதுவெதுப்பான பாலில் கருப்பட்டி சேர்த்து குடித்துப் பாருங்கள். உற்சாகம் உங்களை தொற்றிக் கொள்ளும். அவசர உலகத்துக்கு ஏற்ப இப்போது கருப்பட்டி தூளாகவும் கிடைக்கிறது.

வாழைப்பழம் ஏழை மக்களும் வாங்கக்கூடிய விலையுள்ள வாழை, வருடம் முழுவதும் கிடைக்கிறது. பல உயிர் சத்துகளையும் கனிமங்களையும் கொண்டுள்ளது. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் மூளை சுறுசுறுப்பாகும். இதற்கு காரணம் அதில் உள்ள ட்ரிப்டோபன், டைரோசின் என்னும் அமினோ அமிலங்கள் மற்றும் செரட்டோனின், டோபமைன் போன்றவை.

கடின உழைப்பால் ஏற்படும் உடல் சோர்வு உடனடியாக நீங்கி மீண்டும் வேலையை தொடர உதவும். இது தவிர, வைட்டமின் ‘சி’ மிகுதியாக இருப்பதால், அது, மூளைக்கு தேவையான ‘நார்எபிநெப்ரின்’ தயாரிக்க உதவுகிறது. மூளையின் ரத்த நாளங்கள் சேதமடையாமல் காப்பாற்றக்கூடிய வாழையில் நம் உடலுக்கு, ஒரு நாளைக்கு தேவைப்படும் வைட்டமின் ‘சி’ சத்து 33 சதவிகிதம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பப்பாளி

பப்பாளியும் வாழைப்பழத்தைப் போலவே ரத்த நாளங்கள் சேதமடையாமல் காப்பாற்றுகிறது. இதிலும் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. மூளைக்கு தேவைப்படும் செரட்டோனின் அளவை அதிகப்படுத்தும் ஃபோலிக் அமிலமும் பப்பாளியில் உள்ளது. 250 கிராம் பப்பாளிப் பழத்தில் 115 மைக்ரோ கிராம் ஃபோலிக் அமிலம் இருக்கிறது. ப்ளூ பெர்ரி, ராஸ் பெர்ரி, அவகடோ போன்ற மேலைநாட்டுப் பழங்களில் நாம் அதிகம் சேர்க்க வேண்டிய ஒமேகா 3 கொழுப்பு அமிலம், ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் குறைவாகவே இருக்கும். பப்பாளியிலோ ஒமேகா-3 கொழுப்பு அமிலம் (0.13கி) மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் அந்தப் பழங்களை விட அதிகம் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

முட்டை

முட்டையின் மஞ்சள் கருவில் கோலின் உள்ளது. இது அசிடைல்கோலின் என்னும் நியூரோ டிரான்ஸ்மிட்டரை தயாரிக்க தேவைப்படுகிறது. அசிடைல்கோலின், மூளையில் தகவல்களை சேமிக்கவும், நினைவுக்கு கொண்டு வரவும், கவனத்துடன் இருக்கவும், மனதை ஒருமுகப்படுத்தவும் உதவுகிறது. அசிடைல் கோலின் போதுமான அளவில் இல்லாவிட்டால் கவனக்குறைவையும் ஞாபகமறதியையும் ஏற்படுத்தும். சிலர் முட்டையின் மஞ்சள் கருவை கொலஸ்ட்ரால் என்று ஒதுக்கிவிடுவர். இந்த மஞ்சள் கருவில் உள்ள கொலஸ்ட்ரால் மூளையின் நரம்பு செல்களை சுற்றியுள்ள அடுக்குகளுக்கும் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும் ஹார்மோன்களுக்கும் முக்கியமானது. முட்டையில் DHA எனும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் இருப்பதால், அது நரம்பு செல்களின் இணைப்புகளுக்கு உதவுகிறது.

வேர்க்கடலை

பாதாம், வால்நட் போன்றவற்றைவிட வேர்க்கடலைதான் மூளைச் செயல்பாட்டுக்கு முக்கியமானது. வேர்க்கடலையில் அதிகம் உள்ள வைட்டமின் ஈ-க்கு ஆக்சிஜனேற்றக் கூடிய தன்மை அதிகம். இதனால் நரம்புகள் பலப்படுகின்றன. பப்பாளியில் உள்ளது போல ஃபோலிக் அமிலமும் வேர்க்கடலையில்
உள்ளது. இதிலுள்ள தையமின் என்னும் அமினோ அமிலம் மூளைக்கும் நரம்பு மண்டலத்துக்கும் தேவையான சக்தியைத் தருகிறது. பிற நட்ஸ்களில் உள்ளதைவிட வேர்க்கடலையில் 25% அதிக புரதம் உள்ளது. ட்ரிப்டோபன் என்னும் அமினோ அமிலமும் வேர்க்கடலையில் இருப்பதால் நியூரோ டிரான்ஸ்மிட்டரான ‘செரட்டோனின்’ தயாரிப்பதற்கு ஏதுவாகிறது.

எள்

`ஏழைக்கேற்ற எள்ளுருண்டை’ என நம் முன்னோர் சொல்வார்கள். மீனில் இருப்பது போலவே செலீனியம் தாது உப்பு எள்ளிலும் உள்ளது. 36 கிராம் எள்ளில் 23% செலீனியம் இருப்பது குறிப்பிடத்தக்கது. எள், மூளையின் செயல்பாட்டுக்கு உதவுவதுடன், சந்தோஷ உணர்வையும் ஏற்படுத்துகிறது.
எள்ளில் துத்தநாகம் (Zinc) உள்ளது.

இது ஞாபகசக்திக்கும் மூளை வளர்ச்சிக்கும் மிகவும் அவசியம். துத்தநாகம், மூளையின் பாதுகாப்புக்கும் உறுதுணையாக இருக்கும். எள்ளில் அரிசியில் உள்ளது போல் ட்ரிப்டோபன் எனும் அமினோ அமிலம் உள்ளது. இதுவே மூளையின் முக்கிய நியூரோ டிரான்ஸ்மிட்டரான ‘செரட்டோனின்’ ஆக மாற்றப்படுகிறது. இதனால் எள் ஏற்படுத்தும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. குழந்தைகளுக்கு மில்க் சாக்லெட்டுக்கு பதிலாக எள்ளுருண்டை செய்து கொடுக்கலாமே!

வல்லாரைக் கீரை

நம் பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்த மற்றும் ஆயுர்வேதத்தில் மூளையின் சுறுசுறுப்புக்கு வல்லாரை மிக நல்லது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வல்லாரையின் வல்லமை ஆராய்ச்சியின் மூலமும் நிரூபிக்கப்பட்டுள்ளது. வல்லாரையிலுள்ள ப்ரம்மிக் அமிலம், ப்ரமினோசைட் மற்றும் ப்ரம்மோசைட் போன்றவையே நினைவாற்றலுக்கு உதவுபவை. கரும்பச்சை கீரை வகையைச் சார்ந்த வல்லாரையில் டி.ஹச்.ஏ. இருப்பதும் நிரூபிக்கப்பட்ட உண்மை. மகத்துவம் வாய்ந்த வல்லாரையை குழந்தைகளுக்கு பிடித்த வகையில் சமைத்துக் கொடுக்கலாம்.

பசலைக் கீரை

பசலைக் கீரையில் வைட்டமின் ‘பி’ நிறைந்து இருக்கிறது. ஃபோலேட் அதிகம் இருப்பதால், மூளையைச் சுற்றி Plaque ஏற்படாமல் தடுப்பதுடன், நரம்பு செல்களில் இருக்கும் மூலக்கூறை (DNA) பாதுகாக்கிறது. கிரியேட்டிவிட்டிக்கும் நினைவாற்றலுக்கும் தேவையான நியூரோ டிரான்ஸ்மிட்டரை தயாரிக்கிறது. பசலைக்கீரையில் டி.ஹச்.ஏ. இருப்பது மேலும் சிறப்பு. குழந்தைகளுக்கு சாக்லெட்டுக்கு பதிலாக எள்ளுருண்டை செய்து கொடுத்துப் பாருங்கள்… எள் ஏற்படுத்தும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!
11

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button