மருத்துவ குறிப்பு

வெற்றி மட்டுமல்ல.. இவைகளிலும் கவனம் இருக்கட்டும்!

"வெற்றி"… இந்த நிமிஷம் உலகத்துல பெரும்பாலானவர்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் வார்த்தை. இந்த நிமிஷம் மட்டுமில்ல வாழ்க்கையோட அனைத்து நிமிடங்களையும் "வெற்றி" என்ற இலக்கை அடையறதுக்காகத்தான் செலவழித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், வெற்றிதான் வாழ்வின் ஒரே இலக்கா?, வெற்றி மட்டும்தான் நம் வாழ்க்கையா?. நம் வாழ்க்கையில நம்மை விட முக்கியமான விஷயம் எதுவுமில்லை. ஒரு சின்ன புன்னகையோடு இதைப் படிக்கத தொடங்குங்கள்…

வெற்றி வேண்டாம் சிரிப்பு போதும்

உடல் ஆரோக்கியம்:

உங்க வாழ்க்கைக்கு நீங்கதான் ராஜா. உங்க திறமைய, தகுதிய வேறு யாரும் சொல்லித்தான் நீங்க உணர்ந்துக் கொள்ளணும் என்பதில்லை. ‘நாம ஃபிட்டா இல்லையோ?’ உங்களப் பற்றி நீங்களே தாழ்வா நினைச்சுக்குற உணர்வ முதல்ல விரட்டுங்க. உங்க உடம்பு மேல முதலில் நீங்கதான் அக்கறையா இருக்கணும். அதுக்காக அவசியமான டயட், அத்யாவசிய உடற்பயிற்சினு கொஞ்சம் மெனெக்கெடலாமே. உடல் ஆரோக்கியத்தோட நிறுத்திட்டு, மன ஆரோக்கியத்தை கைவிட்டுடக் கூடாது. இதையெல்லாம் பின்பற்றி உங்களது கனவுகளை நோக்கி ஆரோக்கியமாக பயணியுங்கள். ஏனெனில் உங்களது கனவுகளே அழகான உலகத்தை உங்களுக்கு அளிக்கும்.

உள்ளத்தில் புத்துணர்ச்சி:

நாள் முழுவதும் உங்களைப் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களது இயல்பிற்கேற்ப உங்களை நீங்களே புத்துணர்வு செய்து கொள்ளுங்கள். பாடல் கேட்பது மிகவும் பிடிக்குமெனில், உங்களுக்குப் பிடித்த பாடல்களை கேளுங்கள். இல்லை புத்தகப்பிரியர் எனில் அதில் மூழ்குங்கள். இயற்கையை விரும்புபவர் எனில் இயன்ற அளவு இயற்கையை ரசித்துக் கொண்டே நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

நல்லெண்ணங்கள்:

பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்னு நாம பள்ளிக்காலத்தில் படித்திருப்போம். உங்களைச் சுற்றி நல்ல பழக்கங்கள் கொண்ட மனிதர்களை வைத்திருங்கள். நல்லெண்ணங்கள் நமக்கு தைரியத்தையும், உத்வேகத்தையும் அளிக்கும். அது உங்களை உற்சாகமூட்டும். உங்களை சுற்றி நடக்கின்ற அனைத்து விஷயங்களையும் உள்வாங்கி, நல்லதை அதிலிருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அப்போது உங்களிடம் சமூகத்தின் மீதான அன்பும், அக்கறையும் ஊற்றெடுக்கும்.

வெற்றி வேண்டாம் சிரிப்பு போதும்

சுயநம்பிக்கை :

மனதிற்குள்ளே ஒரு தோல்வியை எண்ணி நீங்களே உங்களை வருத்திக்கொள்ளாதீர்கள். எதிர்மறையாகவும், தரக்குறைவாகவும் உங்களை நீங்களே வரையறுக்காதீர்கள். தெரியாமல் நீங்கள் தவறு இழைக்கும்போது, உங்களை நீங்களே சிறிது கேலி செய்து கொள்ளுங்கள். அது தவறு மீதான குற்றவுணர்ச்சியை குறைக்கும். தன்னம்பிக்கையூட்டும் வாசகங்களை உங்கள் மனதிற்குள் அசைபோட்டுக் கொண்டே இருங்கள். அவை உங்களுக்குள் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தும்.

எதிர்மறை எண்ணங்கள் :

உங்களது முயற்சிக்கு சுற்றியிருப்பவர்கள் பேசும் எதிர்மறையான எண்ணங்களை உங்கள் செவிக்குள் ஏற்றாதீர்கள். எதிர்மறை எண்ணங்கள் உங்களுக்குள் இருக்கும் தன்னம்பிக்கையையும் அழித்து விடும். எப்போதும் புன்னகைத்திருங்கள்.

மன்னிப்பு :

‘மன்னிக்குறவன் மனுஷன்… மன்னிப்பு கேட்குறவன் பெரிய மனுஷன்…" ,"விருமாண்டி" அன்னலட்சுமி சொன்ன இந்த புது மொழி, நிச்சயம் நல்வாழ்க்கைக்கான வழி. மன்னிக்கப் பழகுங்கள், மன்னிப்பு கேட்கவும் பழகிக் கொள்ளுங்கள். இதயம் கனமற்று நிம்மதியாக இருக்கும்.

சுயபரிசோதனை :

உங்களை நீங்களே பரிசோதித்து கொள்ளுங்கள். நாம் செய்கின்ற செயல் சரிதானா? இதனால் யாராவது பாதிக்கப்படுகிறார்களா? என அனைத்து கோணங்களையும் ஆராய முயலுங்கள். அப்போது தெளிவாக எந்த முடிவையும் உங்களால் சுயமாக எடுக்க முடியும். இந்த சுயபரிசோதனை பெரிய முடிவுகளுக்கு மட்டுமல்ல, வீட்டிலிருந்து அலுவலகம் கிளம்பும்போது பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டோமா என்பதிலும் இருக்கலாம்.

நானே எனக்கு தோழன் :

உங்களுடைய முதல் நெருங்கிய தோழராக நீங்களே இருங்கள். இது எவ்வித எதிர்பார்ப்புக்கும் அப்பாற்பட்டதாக அமையும். எப்போதும் உங்களை பற்றி அதிகமாக தெரிந்தவர் நீங்களே என்பதே மறவாதீர்கள். எனவே உங்களிடமே உங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்.

வெற்றிக் கணக்குகளை விட்டுத் தள்ளுங்கள். சிரிப்பை அதிகப்படுத்துங்கள். உங்களைச் சுற்றி நிகழும் ஆச்சர்ய கணங்களைத் தவற விடாதீர்கள். உங்களை நீங்களே காதலிக்கத் தொடங்குங்கள். இதோ… அழகான நாளில் காலடி எடுத்து வைக்கிறீர்களே!!!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button