ஆரோக்கியம் குறிப்புகள்

குழந்தையின் நடத்தையில் கவனம் கொள்வது அவசியம்…!

எல்லா குழந்தைகளும் ஒரே நேரத்தில் குறிப்பிட்ட வளர்ச்சியை அடைய மாட்டார்கள். என்றாலும், வயதொத்த குழந்தைகளின் நடத்தையில் இருந்து பெரிய அளவில் வித்தியாசப்பட்டால் அதைக் கவனத்தில் கொள்வது மிக அவசியம்.

பல நேரங்களில் குழந்தை சோகமாகவோ, தனிமையாக இருந்தாலோ, அதிகமாக கோபப்பட்டாலோ, அதை பெரிய விஷயமாகபெற்றோர் கருதுவதில்லை. பொதுவாக பெற்றோருக்கு தங்கள் குழந்தைக்கு இவ்வகை பிரச்சனை உள்ளது என கண்டுபிடிப்பது கடினம்.

தங்கள் குழந்தையின் நடத்தையில்/உணர்ச்சி வெளிப்பாட்டில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆலோசனையைக் கேட்டுப் பார்த்து சரி செய்ய பார்ப்பார்கள். பள்ளியிலும் கலந்தாலோசித்து, அதற்கு தீர்வு காண முற்படுவார்கள். அப்படியும் பலனின்றி போனால், குழந்தை நலமருத்துவரையோ, உளவியல் நிபுணரையோ ஆலோசிக்க வேண்டியது அவசியம்.

எப்போது இதை முக்கியமாக கருதி சிகிச்சை பெற வேண்டும்?

எந்தவித முன்னேற்றமும் இன்றி குழந்தையின் நடத்தையில் எந்த மாற்றமும் காணப்படவில்லை எனில்…

நடத்தையின் தன்மை தீவிரமாக இருக்கும்போது மற்றவருக்கு பயமேற்படுத்தும் வகையில் கோபத்தில் கத்துவது, திடீரென தனிமையை நாடுவது, விரக்தியாக பேசுவது, தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்வது…

சில நடத்தைகள், குழந்தையின் வயதிற்கேற்ப சரி, தவறு என பிரித்துப் பார்க்க முடியும். உதாரணத்துக்கு… 2 வயது குழந்தை கத்தி அழுவது சரி; ஆனால், அதே விஷயத்தை 5 வயது குழந்தை செய்தால் அது தவறு என சக வயது குழந்தைகளின்வளர்ச்சியை ஒப்பிட்டு புரிந்து கொள்ளமுடியும். எல்லாக் குழந்தைகளும் ஒரே நேரத்தில் குறிப்பிட்ட வளர்ச்சியை அடைய மாட்டார்கள் என்றாலும், வயதொத்த குழந்தைகளின் நடத்தையில் இருந்து பெரிய அளவில் வித்தியாசப்பட்டால் அதை கவனத்தில் கொள்வது மிக அவசியம்.

இம்மூன்று விஷயங்களையும் மனதில் கொண்டு சந்தேகப்படும்படி தோன்றினால், பெற்றோர் தங்கள் குழந்தையை உடனடியாக உளவியல் நிபுணரிடம் சென்று ஆலோசனைப் பெறுவது நல்லது. இப்படிச் செய்தால், பிற்காலத்தில் ஏற்படவிருக்கும் மனநலப் பிரச்சனைகளில் இருந்து குழந்தையை காக்கலாம். பொதுவாக குழந்தைகளின் உணர்ச்சி மற்றும் நடத்தை பிரச்சனைகளை இருவிதமாக பிரிக்கலாம்…

1. வெளிப்படுத்துதல் (Externalizing) வகை

2. உள்ளுக்குள்ளே வைத்துக் கொள்ளுதல் வகை (Internalizing).

‘வெளிப்படுத்துதல்’ மனநலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம். பெரும்பாலும், அவர்களின் நடத்தை மற்றவர்களுக்கு தொந்தரவு (சத்தமாக அழுவது, அடம்பிடிப்பது, கத்துவது, மற்றவரை சீண்டுவது…) அளிக்கும் வண்ணம் அமைவதால், இக்குழந்தைகள் பெரும்பாலும் ஆலோசனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

‘உள்ளுக்குள்ளே வைத்துக் கொள்ளுதல்’ மனநலப்பிரச்னையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தங்களுக்கு உள்ளேயே போராடுவதால், வெளியே எளிதில் தெரியாது (பதற்றம், சோகம், உடல் வலி…). இதனால், பல நேரங்களில், இக்குழந்தைகளின் பிரச்சனையைப் பெற்றோர் கவனிக்க தவறுகின்றனர்.
child

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button