மருத்துவ குறிப்பு

வறண்ட சருமத்தை போக்கும் மருத்துவம்

எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், சமையலறையில் உள்ள உணவுப் பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்தி பாதுகாப்பான மருத்துவத்தை நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்த்து வருகிறோம். அந்தவகையில், ஆவாரம் பூ, அருகம்புல், கீழாநெல்லி, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை கொண்டு வறண்ட சருமத்தை போக்கும் மருத்துவத்தை காணலாம்.

தோல் சுத்தமாக இருக்க வேண்டும். ஈரல் நல்ல முறையில் செயல்பட வேண்டும். இல்லையெனில் வறண்ட சரும பிரச்னை ஏற்படும். வறண்ட சருமம் என்பது பல்வேறு நோய்களின் வெளிப்பாடு. தைராய்டு, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வறண்ட சருமம் ஏற்படும். இப்பிரச்னையை போக்க அதிகளவில் பழங்கள் எடுத்து கொள்ள வேண்டும். ஆவாரம் பூவை பயன்படுத்தி வறண்ட சருமத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

ஆவாரம்பூ, பனங்கற்கண்டு, விளாமிச்சை ஆகியவற்றை கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர வறண்ட சருமம் மாறும். தோல் மென்மையாகவும், பொலிவுடனும் இருக்கும். ஆவாரம் பூ பல்வேறு நன்மைகளை கொண்டது. வறண்ட சருமத்துக்கு மருந்தாக விளங்குகிறது.

அருகம் புல்லை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அருகம்புல், கீழாநெல்லி, தயிர். 100 மில்லி அருகம்புல் சாறுடன், பெரிய நெல்லிக்காய் அளவுக்கு கீழாநெல்லி இலை பசை சேர்க்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து சாப்பிட்டுவந்தால் வறண்ட சருமம் மாறும். தோல் பொலிவு பெறும். உடலுக்கு போதிய சத்துக்கள் கிடைக்கும். தோல் மென்மையாகும்.

வறண்ட சருமத்துக்கு கீழாநெல்லி மருந்தாகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட கீழாநெல்லி ஈரலை பலப்படுத்தும் தன்மை கொண்டது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. மருத்துவ குணங்களை உடைய அருகம்புல் நோய் எதிர்ப்பு சக்தி உடையது. பூஞ்சை காளான்கள், நுண்கிருமிகளை போக்க கூடியது. ரத்தத்தை சுத்திகரிக்க கூடியது. வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது. அருகம்புல் புரதச்சத்து கொண்டது.

ஆவாரம் மொட்டு, இலை ஆகியவற்றை வெயிலில் காயவைத்து பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியுடன் பால் சேர்த்து கலந்து வறண்ட சருமத்தில் பூசி சுமார் 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் வறண்ட சருமம் சரியாகும். தினமும் இவ்வாறு செய்வதால் தோல் எண்ணெய் பசை வர ஆரம்பிக்கும். தோல் மென்மையாகும்.

ஆவாரம் பொடி, கஸ்தூரி மஞ்சள், கசகசா ஆகியவற்றை நீரில் சேர்த்து கலந்து மேல் பூச்சாக பூசி சிறிது நேரம் கழித்து குளித்தால், வறண்ட சருமம் மாறும். தோல் பளபளப்பாகும். தோல் ஆரோக்கியத்தை அடையும். எளிதில் கிடைக்க கூடிய அருகம்புல், கீழாநெல்லி, ஆவாரம்பூ போன்றவற்றை பயன்படுத்தி இல்லத்தில் இருந்தவாறே வறண்ட சரும பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வு காணலாம்.

பால் மருக்களை குணப்படுத்தும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் வேப்பிலை பொடி, திரிபலா சூரணம், மஞ்சள் பொடி ஆகியவற்றை சம அளவு எடுத்து நீர் சேர்த்து கலந்து பூசி வர பால் மருக்கள் மறையும்.MFt4GJV

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button