ஆரோக்கிய உணவு

ஆரோக்கியப் பலன்கள் அள்ளித் தருவதில் இது, `முந்திரிக்கொட்டை!’

எல்லா விஷயத்திலும் அவசரப்படுகிறவர்களை `முந்திரிக்கொட்டை’ என்று சொல்வோம். யதார்த்தத்தில், ஆரோக்கியப் பலன்கள் பலவற்றை அள்ளித் தருவதில் முந்திரிக்கு முதல் வரிசையிலேயே இடம் உண்டு. நாம் உண்ணும் உணவே பல நேரங்களில் மருந்தாகவும் நோய் வருவதைத் தடுப்பதாகவும் அமைந்துவிடும். அவற்றில் ஒன்றுதான் முந்திரி. `கொழுப்பு நிறைந்தது… இதை ஒதுக்க வேண்டும்’ என்று நாம் நினைக்கும் சில உணவுப் பொருட்களில் இதுவும் அடங்கும். ஆனால், தரும் பலன்களோ ஏராளம். முந்திரிப்பழம் மற்றும் முந்திரிக்கொட்டை இரண்டிலுமே ஜின்க், பாஸ்பரஸ், இரும்புச்சத்து அதிகம். சுவாசக்கோளாறுகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கக்கூடியது.

முந்திரிக்கொட்டை

முந்திரி தரும் முத்தான நன்மைகள்…

* `முந்திரி சாப்பிட்டால் உடல் எடை கூடும்’ என்பார்கள். இது தவறான கருத்து. முந்திரியில் கலோரியின் அளவு அதிகம். 100 கிராம் முந்திரியில் 553 கலோரிகள் உள்ளன; செறிவூட்டப்பட்ட கொழுப்புகள் 75 சதவிகிதம் உள்ளன. இவை தவிர நார்ச்சத்தின் அளவும் அதிகம். முந்திரி, உடலின் வளர்சிதை மாற்றம் சீராக உதவுகிறது. அதனால் நாள் ஒன்றுக்கு நான்கு முந்திரி வரை எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும்.

* முந்திரியில் மக்னீசியத்தின் அளவு அதிகமாக இருப்பதால், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். தசைப் பிடிப்பு, ஒற்றைத் தலைவலி, பதற்றம் மற்றும் மயக்கம் ஆகியவற்றையும் சரிசெய்யும். இதில் கால்சியம் நிறைந்துள்ளதால், எலும்புகளுக்கு வலு சேர்க்கும்.

* இரும்புச்சத்தை உடல் கிரகிக்க இது உதவுகிறது; வெளியில் இருந்து உடலுக்குள் நுழையும் கிருமிகளை அழிக்கிறது; எலும்புகள் மற்றும் திசுக்கள் வளர்வதற்குத் துணைபுரிகிறது; சருமம் மற்றும் கூந்தலின் நிறத்துக்குத் துணைபுரியும் மெலனினை (Melanin) உற்பத்திசெய்கிறது .

* மனிதனின் மூளை, மூளை செல்களை உற்பத்தி செய்வதற்கு, பாலிஅன்சாச்சுரேட்டட் (Polyunsaturated) மற்றும் மோனோஅன்சேச்சுரேட்டட் (Monounsaturated) கொழுப்பு அமிலங்களை நம்பியிருக்கிறது. முந்திரி, மூளைக்குத் தேவையான ஆக்சிஜனை அனுப்பி, இவை சீராகச் சுரந்து மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது.

* பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாகப் பாதுகாக்கவும் முந்திரி உதவுகிறது. முந்திரியில் உள்ள ரசாயனம் பல்வலியைச் சரிசெய்யும்; அதோடு, காசநோய் மற்றும் தொழுநோய் ஆகியவற்றையும் குணப்படுத்தும்.

* வயோதிகத்தால் ஏற்படும் பார்வைக்கோளாறின் வீரியத்தைத் தள்ளிப்போடும். வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி3, வைட்டமின் பி5, வைட்டமின் பி6 நிறைந்துள்ளதால் தோல் சம்பந்தமான நோய்களிலிருந்தும் காக்கும்.

* டைப் 2 சர்க்கரை நோயிலிருந்து பாதுகாக்கும் ஆற்றல் முந்திரிக்கு உண்டு. ஆனால் அளவுடன் சாப்பிடவேண்டும். ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. ரத்தநாளங்கள், மூட்டுகள் மற்றும் எலும்புகளுக்கு ஆரோக்கியத்தைத் தரும்.

* கெட்ட கொழுப்புகளின் அளவைக் குறைத்து, நல்ல கொழுப்புகளை அதிகரிப்பதால், இதய நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். முந்திரியில் காப்பர் அதிக அளவில் இருப்பதால், பெருங்குடலில் புற்றுநோய் வருவதைத் தடுக்கும்.

அலர்ஜி

பக்க விளைவுகள்…

* சிலருக்கு முந்திரி சாப்பிடுவதால் தோலில் அலர்ஜி ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு. சிலருக்கு அடிவயிற்றில் வலி, தலைசுற்றல் மற்றும் வாந்தி ஆகியவை ஏற்படலாம். இதுபோன்ற அறிகுறிகள் முந்திரியைச் சாப்பிடும்போது தோன்றினால் அதைத் தவிர்த்துவிட வேண்டும்.

* நம் உடல் கால்சியத்தை கிரகிப்பதை ஆக்சலேட் என்னும் ரசாயனக் கலவை தடுக்கிறது. இது முந்திரியில் அதிக அளவில் இருப்பதால், கிட்னி மற்றும் பித்தப்பைகளில் கல் இருப்பவர்கள் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.

* ஒரு நாளைக்கு 4-5 முந்திரிகளை சாப்பிடலாம். அளவுக்கு அதிகமாக முந்திரியைச் சாப்பிட்டால், அதிலுள்ள டைராமைன் (tyramine) மற்றும் பினைலேதைலாமின் (phenylethylamine) போன்ற அமினோ அமிலங்கள் தலைவலியை உண்டாக்கும்.12428

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button