மருத்துவ குறிப்பு

அழகுத் தோட்டம்

இத்தனை அத்தியாயங்களில் உபயோகமுள்ள தோட்டங்கள் பற்றிப் பார்த்தோம். வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், கீரைகள், பழங்கள், மலர்கள் பெறுவதைப் பற்றிப் பார்த்தோம். அடுத்த கட்டமாக அழகியல் தோட்டங்கள் பற்றிப் பார்க்க இருக்கிறோம். இவை பார்வைக்கு அழகாக இருப்பதுடன் கண்களுக்குக் குளிர்ச்சியாகவும் மனதுக்கு இதமானதாக அதாவது, மனத்தை அமைதிப்படுத்துகிற தோட்டங்கள் என்றும் சொல்லலாம். ஆங்கிலத்தில் ரிதம் அண்ட் ஹார்மனி என்று சொல்வோம். அழகியலுக்கான தோட்டங்களில் அந்த ரம்மியத்தை, லயத்தை, நயத்தைப் பார்க்க முடியும்!

அழகியலுக்கான தோட்டமா? அப்படியென்றால் அவற்றிலிருந்து நாம் என்ன பெற முடியும்? வெறும் அழகுக்காக மட்டுமே வைத்து ரசிக்க வேண்டியதுதானா? இந்தக் கேள்வி சிலருக்கு எழும். அப்படியில்லை. அழகியலுக்கான தோட்டம் என்றாலும் அதில் வைக்கிற செடிகளின் மூலம் பயன்பெறச் செய்ய முடியும். இதில் இன்னொரு விஷயத்தையும் நாம் செய்யலாம். நேட்டிவ் பிளான்ட்ஸ் எனப்படுகிற பாரம்பரியச் செடிகளைக் கொண்டே அழகியல் தோட்டத்தை அமைக்க முடியும். இந்த வகைத் தோட்டங்களில் அழகுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

உபயோகம் என்பது இரண்டாம் பட்சமாகி விடுகிறது. சிலருக்கு இது தேவையாக தோன்றலாம். இதற்கு உதாரணம் சொல்வதென்றால் பியூட்டி பார்லர் போவதைக் குறிப்பிடலாம். பியூட்டி பார்லர் போவதன் முக்கிய நோக்கம் அழகுப்படுத்திக் கொள்வதுதான். 75 சதவிகிதம் அழகுக்காக போனாலும் 25 சதவிகிதம் சருமம் மற்றும் கூந்தல் பிரச்னைகளை சரிசெய்து கொள்கிற நோக்கமும் இருக்குமல்லவா? அதே போன்றதுதான் இந்த அழகியல் தோட்டம். இது 90 சதவிகிதம் கண்களுக்கு விருந்து. அந்தத் தோட்டத்தைப் பார்த்ததும் உங்களையும் அறியாமல் ஒரு நிம்மதி உணர்வும் மன அமைதியும் ஊற்றெடுப்பதை உணர்வீர்கள்.

அழகு என்பது ஆளாளுக்கு வேறுபடும். ஒருவருக்குப் பிடிப்பது இன்னொருவருக்கும் பிடிக்கவேண்டும் என்றில்லையே… ஒரு வீட்டில் அழகியல் தோட்டம் அமைப்பதென்றால் அதற்கென வீட்டிலுள்ள ஒவ்வொருவரின் கற்பனையிலும் பலவித வடிவமைப்புகள் இருக்கும். ஒருவருக்கு பனை சார்ந்த மரங்கள் பிடிக்கலாம். அவரை திருப்திப்படுத்த அந்தத் தோட்டத்தில் ஏதேனும் விஷயம் இருக்க வேண்டும். இன்னொருவருக்கு முட்களும் கற்களும்தான் பிடிக்கும் என்றால் அவரை மகிழ்விக்கிற வகையில் ராக் கார்டனுக்கும் இடமளிக்க வேண்டும்.

சிலருக்கு தண்ணீர் பிடிக்கலாம். அவர்களுக்கு வாட்டர் கார்டன் அமைக்கலாம். இப்படி ஒரு வீட்டில் உள்ள எல்லோரின் விருப்பங்களையும் நிறைவேற்றும் வகையில் அழகுத் தோட்டம் அமைக்க சில யுத்திகளைக் கையாள வேண்டியது அவசியமாகிறது. அந்த யுத்திகள் என்னென்ன? அவற்றை எங்கே எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும்? என எல்லாவற்றையும் பார்த்து எல்லோரையும் திருப்திப்படுத்தும் வகையில் எப்படி அமைப்பது என்பதில்தான் இருக்கிறது விஷயமே. இப்படி எல்லாருக்கும் பிடித்த விஷயங்களை ஒருங்கிணைத்தபடி ஒரு தோட்டத்தை அமைப்பதன் மூலம் அழகியல் தோட்டம் என்பது அத்தனை பேருக்குமான மன அமைதியைக் கொடுப்பதாக மாறும்.

கொல்கத்தாவில் உள்ள பொட்டானிக்கல் கார்டனும், இங்கிலாந்தில் உள்ள Kew கார்டன் போன்றவை மிகப்பெரிய அழகியல் தோட்டங்களுக்கான சிறந்த உதாரணங்கள். இந்த தோட்டங்களிலும் நாம் ஏற்கனவே பார்த்தது போல பலதரப்பட்ட மனிதர்களின் மனங்களையும் கவரக்கூடிய பல்வேறு விஷயங்கள் இருக்கும். அதைத்தான் வீட்டில் அமைக்கக்கூடிய அழகியல் தோட்டங்களிலும் கொண்டுவரப் போகிறோம். மினியேச்சர் அளவுகளில் செயல்படுத்த வேண்டும்.

கார்டன் காம்பனன்ட்ஸ் என்று சொல்லக்கூடிய ஒரு தோட்டத்தில் இருக்க வேண்டிய விஷயங்களைப் பற்றி முதலில் பார்ப்போம். ஏக்கர் கணக்கில் தோட்டம் போட இடம் இருப்பவர்களுக்கு சாத்தியமாகிற விஷயங்களை சிறிய அளவில் வீட்டுத் தோட்டம் அமைக்கிறவர்களுக்கு ஏற்ற மாதிரியும் மாற்றிக் கொள்ளலாம். சாலையோரங்களில் இரு பக்கங்களிலும் புளிய மரங்கள் இருக்க நடுவில் நடந்து செல்வது எவ்வளவு ரம்மியமாக இருக்கும்? அதே அமைப்பை நமது தோட்டத்தில் கொண்டு வர முடியுமா? ஏக்கர் கணக்கில் நிலம் வைத்திருப்பவர்களுக்கு நடுவில் தெரு போன்ற அமைப்பு இருக்கும்.

புளிய மரங்கள் விரிந்த பரப்பளவைக் கொண்டவை என்பதால் அசோகா மரங்களையோ பெல்டோஃபோரம் (Peltaforum) எனச் சொல்லக்கூடிய ஒருவகை பூ மரங்களையோ வைக்கலாம். அல்லது கொன்றை மரம் வைக்கலாம். வசந்த காலத்தில் பச்சை மரத்தில் மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூத்துக் குலுங்குவதைப் பார்க்கும்போது நம் மனத்தில் எப்படிப்பட்ட பிரச்னைகள் இருந்தாலும் மறந்து விடுவோம். அழகியல் தோட்டத்தின் பிரதான பலன் என்றால் அவை மிகச் சிறந்த ஸ்ட்ரெஸ் ரிலீவர்களாக அமையும்.

இன்று மன அழுத்தம் இல்லாத மனிதர்களே இல்லை. அவர்களுக்கெல்லாம் இந்த அழகியல் தோட்டங்கள் தியானத்தைவிடவும் மிகச் சிறந்த மன நிம்மதியை, அமைதியைக் கொடுக்கக்கூடியவை. இப்படி மரங்கள் வைக்கிற போது நடைமுறையை கவனத்தில் கொள்ள வேண்டியதும் அவசியம். சென்னை வானிலைக்கு ஏற்றவற்றை தான் இங்கே வைக்க முடியும். பெங்களூருவில் அந்த வானிலைக்கேற்ற மரங்களே வளரும். பெங்களூரு சாலைகளில் ஊதாநிறப் பூக்களை உதிர்க்கும் மரங்களைப் பார்த்திருப்பீர்கள்.

அதன் பெயர் ஜகரண்டா. அது அந்தச் சூழலுக்குத்தான் வளரும். அதை சென்னையில் வைத்தால் சரியாக வளராது. சென்னை மெரினா கடற்கரையில் வைக்கப்பட்டிருக்கிற அத்தனை மரங்களும் இந்த வானிலைக்கு ஏற்றவை. சென்னையில் வளரக்கூடிய எல்லாம் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் வளரக்கூடியவை என்பது ஒரு அனுமானம். எனவே அழகியல் தோட்டம் அமைப்பதற்கு முன் என்னென்ன செடிகள், மரங்கள் நம்மூர் சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவை, நமக்குக் கிடைக்கிற பலவகையான தண்ணீரை ஏற்று அவை வளருமா என்றெல்லாம் பார்க்க வேண்டும்.

சரி… வெறும் செடிகளையும் மரங்களையும் மட்டுமே வைத்து தோட்டத்தை அழகுப்படுத்திவிட முடியுமா? தோட்டத்துக்கு நடுவில் ஒரு கல் டேபிளோ, இருக்கையோ இல்லாவிட்டால் அது முழுமையாக இருக்குமா? அழகியல் தோட்டங்கள் என்பவை பார்த்து ரசிக்கவும் மனரீதியாக அமைதியைப் பெற்று இளைப்பாறும் இடமாகவும் இருக்கக்கூடியவை. சிமென்ட் மற்றும் கல் கொண்டு சில அமைப்புகளையும் நிறுவ வேண்டும். இதை ஹார்ட் ஸ்கேப் என்று சொல்வோம். அதாவது, இன்ஜினியரிங் சம்பந்தப்பட்ட பொருட்களையும் உள்ளே கொண்டு வர வேண்டும்.

இரவு நேரத்தில் உங்கள் தோட்டத்தில் ஒரு பார்ட்டி நடத்த விரும்புகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அப்போது அங்கே எந்த மாதிரியான விளக்குகளைப் பொருத்தினால் தோட்டம் அழகாக இருக்கும் எனப் பார்க்க வேண்டும். காடுகள்தான் இயற்கையாக அமைந்துள்ள தோட்டங்கள். காட்டின் பெரிய அமைப்பை ஒரு பிரமாண்ட பொட்டானிக்கல் கார்டனாக கற்பனை செய்து கொள்ளலாம். அடுத்தது ஒரு தனி வீட்டிலோ பங்களாவிலோ இருக்கிறோம்… அதைச் சுற்றி பெரிய தோட்டம் அமைக்கிறோம்… அதை அடுத்து அதைவிடவும் சிறிய வீடு… அதை ஒட்டிய தோட்டம்…

பிறகு ஃபிளாட்ஸ். அங்கேயும் இந்த அமைப்பை கொண்டு வரலாம். அதே போல வீட்டுக்குள் கார்டன் ரூம் (வீட்டுக்குள் ஒரு அறையையே தோட்டமாக்குவது!) என ஒரு கான்செப்ட் இருக்கிறது. சாதாரண தோட்டங்களையே அழகியல் உணர்ச்சியோடு மாற்றக்கூடிய வித்தைகளையும் விஷயங்களையும் பற்றி இனி வரும் அத்தியாயங்களில் பார்க்கப் போகிறோம். உங்கள் வீட்டுத் தோட்டம் பெரியதோ, சின்னதோ – அதை அழகியல் தோட்டமாக மாற்ற முடியும் என நம்புங்கள்!ld4424

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button