மருத்துவ குறிப்பு

கொசுக்களை விரட்டி… தலைவலி, உடல்வலி, சளித் தொல்லைக்கு மருந்தாகும் நொச்சி!

நொச்சி… ஆகச் சிறந்த ஒரு மூலிகை என்றால் அது மிகையல்ல. `கொசுவை விரட்டும் தன்மை படைத்தது’ என்ற தகவலைக் கேள்விப்பட்டதில் இருந்து, பெரும்பாலான மக்களால் வீடுகளில் இது வளர்க்கப்பட்டுவருகிறது. இது ஒரு குறு மரமாக வளரும் தன்மைகொண்டது. இந்த மூலிகைச் செடியை ஆடு, மாடுகள் உள்ளிட்ட விலங்குகள் நெருங்காது. அதனால், இது வயல்வெளிகளின் ஓரமாகவும், வேலி ஓரங்களிலும் வளர்க்கப்படுகிறது. இந்தச்செடி சமவெளியில் 4 மீட்டர் உயரமும், மலைப் பகுதிகளில் 6 மீட்டர் உயரமும் வளரக்கூடியது. இந்த இலைக்கு பூச்சியைத் தடுக்கும் திறன் இருக்கிறது. அதனால், தானியங்களை சேமித்துவைக்கும் குதிர்களில் நொச்சி இலைகளையும் சேர்த்து மூடி வைத்தால் பாதிப்புகள் ஏற்படாது. இதன் மூலம் பழங்காலத்திலிருந்தே இந்த இலை பயன்பாட்டில் இருந்து வந்திருக்கிறது என்பதை அறிய முடியும்.

நொச்சி

நொச்சி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, ஆவி (வேது பிடித்தல்) பிடித்து வந்தால் மூக்கடைப்பில் தொடங்கி ஜலதோஷம், சளித் தொல்லை, தலைபாரம், தலைவலி என அனைத்துப் பிரச்னைகளிலும் இருந்து நிவாரணம் கிடைக்கும். மேலும், இதன் இலையை பச்சையாகவோ, உலர்த்தியோ தலையணை உறைக்குள் வைத்து அதன் மேல் தலை வைத்து உறங்கினால், தலைவலி, ஜலதோஷம், சைனஸ் கோளாறுகள் சரியாகும்.

காய்ச்சலின்போது நொச்சி இலையை வேகவைத்து அதன் நீராவியை வேது பிடிப்பதன் (ஆவி பிடித்தல்) மூலம் வியர்வை உண்டாகி, காய்ச்சலின் தீவிரம் மெள்ள மெள்ளத் தணியும். இதே நீரை உடல் வலியின்போது பொறுக்கும் சூட்டில் உடலில் ஊற்றிவர, நல்ல நிவாரணம் கிடைக்கும்.

நொச்சி இலையுடன் மிளகு, பூண்டு, கிராம்பு சேர்த்து மென்று தின்று வந்தால், ஆஸ்துமா குணமாகும். மேலும், நொச்சி இலையை சுக்கு சேர்த்து அரைத்து, நெற்றி, கன்னம் போன்ற பகுதிகளில் பற்றுப் போட்டு வந்தால், தலைவலி சரியாகும். வலி, வீக்கம், கீல்வாயு ஏற்பட்டால் நொச்சி இலையை வெறுமனே வதக்கி ஒத்தடம் கொடுப்பதன் மூலம் நிவாரணம் பெறலாம். அடிபட்ட வீக்கம் மட்டுமல்லாமல், உடம்பில் தலை முதல் கால் வரை எந்தப் பகுதியில் அடிபட்டாலும் இந்த ஒத்தடம் பலன் தரும். நொச்சி இலைச் சாறு அல்லது இலையுடன் நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சி, பொறுக்கும் சூட்டில் சிறிதளவு எடுத்து தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால் சைனஸ், கழுத்தில் நெறிகட்டுதல், கழுத்துவலி போன்றவை சரியாகும். நரம்புக் கோளாறுகளால் கழுத்துவலி வந்து அவதிப்படுவோருக்கும் இந்தச் சிகிச்சை பலனளிக்கும்.

மூலிகை

கொசுவை விரட்ட என்னென்னவோ மருந்துகள் வந்தும் அவை பலனளிப்பதில்லை. மேலும் அவை பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. எனவே, இதை மாற்று நிவாரணியாகப் பயன்படுத்தலாம். காய்ந்த அல்லது பச்சையாக உள்ள நொச்சி இலைகளை தீயில் எரித்து, புகைமூட்டம் போட்டு வந்தால் கொசுக்கள் விலகும். படுக்கை அறையில் வெறுமனே நொச்சி இலைகளை வைத்தாலும் கொசுக்கள் நெருங்காது. நொச்சி, வேப்பிலை போன்றவற்றை புகை மூட்டம் போடுவதாலும் கொசுத் தொல்லைகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம். நொச்சி இலையை ஆடு, மாடுகள் உண்ணாது என்பதால், வீடுகளைச்சுற்றி வளர்க்கலாம். அதே நேரத்தில் கொஞ்சம் ஈரமான இடங்களில் செழித்து வளரும். நொச்சி எளிதில் வளராது என்று சிலர் சொல்கிறார்கள். தொடக்கத்தில் ஈரம் காயாதவாறு பார்த்துக்கொண்டால், மிக எளிதாக வளரக்கூடியது. நொச்சியின் வேர் முடிச்சுகளை எடுத்தும் நடலாம்.

நொச்சி, பொடுதலை, நுணா இலை போன்றவற்றால் ஆன கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தத்தை கட்டுப்படுத்தக்கூடியது. புற்றுநோயைக் குணப்படுத்தும் தன்மை நொச்சி இலைக்கு உள்ளது என்பதால், அது குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மாட்டுச் சாணத்துடன் நொச்சி இலைகளைச் சேர்த்து முதுகுவலிக்குப் பூசினால் நல்ல பலன் கிடைக்கும். தேமல் உள்ள இடங்களில் நொச்சி இலைச் சாற்றைப் பூசினாலும் நிவாரணம் கிடைக்கும். ஆக, பல்வேறு வழிகளில் நல்லதொரு மருந்தாகிறது நொச்சி.

மலைச்சரிவுகளில் மண் அரிப்பைத் தடுக்க நொச்சியை நெருக்கமாக வளர்க்கலாம். ஆறுகள், நீரோடைகள் போன்றவற்றின் கரைகளிலும் இவற்றை நட்டு வைக்கலாம். இதனால் கரைகளுக்கு வலு சேர்க்கும்; வெள்ளம் ஏற்படும்போது கரைகள் உடையாமல் காக்கும். நீர்ச் செழிப்புள்ள இடங்களில் வளரக்கூடிய நொச்சி காற்றைத் தடுக்கும் தன்மை படைத்தது. வீடுகளின் முகப்பில் நடுவதால் தூசியை வடிகட்டுவதோடு கொசுக்களை விரட்டும் தன்மையும் படைத்தது.301967 15533

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button