தலைமுடி சிகிச்சை

கூந்தல் வளர்க்கும் ரகசியங்கள்

ஆறடி கூந்தலும், 60ஐ கடந்த பிறகும் நரைக்காத தலையும் அந்தக் காலத்து மனிதர்களுக்கு சர்வ சாதாரணமாக சாத்தியமானது. ஆனால், இன்றோ 15ஐ கடக்கும் முன்பே நரை… 20 பிளஸ்சில் வழுக்கை… 30 பிளஸ்சில் மொத்தமும் சொட்டை என கூந்தல் பிரச்னை ஒருவரையும் விட்டுவைப்பதில்லை. அவர்களுக்கு சாத்தியமானது நமக்கு மட்டும் ஏன் முடிவதில்லை?

அவர்கள் இயற்கையை மதித்தார்கள்… நேசித்தார்கள்… இயற்கை வழி வாழ்ந்தார்கள்… எல்லாவற்றையும்விட முக்கியமாக அவர்கள் கூந்தல் அழகுக்கு எந்த செயற்கையான வழிகளையும் நாடவில்லை. செடிகள், மூலிகைகள் போன்றவற்றைக் கொண்டே அழகு மற்றும் ஆரோக்கியத்துக்கான அனைத்துப் பொருட்களையும் தயாரித்துக் கொண்டார்கள். அப்படி நம் முன்னோர்கள் பின்பற்றிய சில விஷயங்களைத் தெரிந்து கொள்வோமா?

நெல்லிக்காய்க்கு இளமையைத் தக்க வைக்கிற குணம் உண்டு என்பதை அறிவோம். அதேபோல், கூந்தலைக் கருகருவென்று அடர்த்தியாக வளர்க்கும் குணமும் நெல்லிக்காய்க்கு உண்டு. காரணம், அதில் இருக்கும் இரும்புச் சத்தும், ஆன்ட்டி ஆக்சிடெண்டுகளும். நம் மூதாதையர் கூந்தல் அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் நெல்லிக்காயில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெயை உபயோகித்ததன் ரகசியம் இதுதான்.

மருதாணியை கூந்தலுக்கு சாயம் ஏற்றுகிற பொருளாகத்தான் நாம் அறிவோம். அந்தக் காலத்தில் பொலிவிழந்த, மெலிந்த கூந்தலுக்கு ஊட்டம் ஏற்றும் சத்துணவாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

கற்றாழையின் ஜெல் போன்ற பகுதியை கூந்தலுக்குப் பயன்படுத்தினார்கள். இதன்மூலம் உடலுக்குக் குளிர்ச்சி கிடைத்ததுடன் வெயிலில் அலைவதால் கூந்தல் பாதிக்கப்படுவதிலுருந்தும் தவிர்க்க முடிந்தது. கூந்தல் பட்டுபோலவும் மென்மையாக இருந்தது.

அந்தக் காலத்துப் பெண்கள், தினமும் தலைக்குத் தேங்காய் எண்ணெய் வைக்கத் தவறியதில்லை. அதன் மூலம் அவர்களது கூந்தலை வறண்டு போகாமல் காத்தார்கள். இன்று தலைக்கு எண்ணெய் வைப்பது என்பது ஏதோ செய்யக்கூடாத விஷயம் என்கிற மாதிரி ஆகிவிட்டது.

தேங்காய் எண்ணெய் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் என்று அவர்கள் நம்பியது மூட நம்பிக்கையாக இருந்தாலும், அப்படி எண்ணெய் வைப்பதன் மூலம் அவர்களது கூந்தலின் ஈரப்பதம் தக்க வைக்கப்பட்டது. நுனிப் பிளவு இருக்காது. கூந்தல் தேங்காய் நார் போல முரடாக மாறாது. பிரச்னைகள் இல்லாத கூந்தல் இயற்கையாகவே ஆரோக்கியமாக வளரும்தானே?

கூந்தல் என்பது ஒரு வருடத்துக்கு 6 இன்ச் அளவு வளரும். அது வறண்டு, உடைந்து, உதிர்ந்து கொண்டிருந்தால் எப்படி வளரும்? எனவே, கூந்தலுக்கு தேங்காய் எண்ணெயோ, ஆலிவ் எண்ணெயோ, பாதாம் எண்ணெயோ உபயோகித்து வறண்டு போகாமல் காக்கும்பட்சத்தில் உங்கள் கூந்தலும் நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

அரைத்த வெந்தயத்தைத் தலைக்குத் தடவிக் குளிப்பதன் மூலம் நீளமான முடியைப் பெறலாம்.

கூந்தல் வளர்ச்சியில் உணவுக்கு மிக முக்கிய பங்குண்டு. கறிவேப்பிலையும் கீரைகளும் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும். தயிரில் ஊற வைத்த வெந்தயமும் கூந்தலுக்கு நல்லது செய்யும். நட்ஸ், பேரீச்சம்பழம், மீன் மற்றும் வைட்டமின் பி அதிகமுள்ள உணவுகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நீளமான கூந்தலுக்கு வழி செய்யும்.

ஷாம்பு வேண்டாம்… சீயக்காய்க்கு மாறுங்கள்!

சீயக்காய் பொடி கூந்தலை இயற்கையான முறையில் சுத்தம் செய்து, பாதுகாக்கும். பொடுகும் இளநரையும் வராமல் தடுக்கும். ஷாம்புவில் உள்ளது போல எஸ்.எல்.எஸ், பாரபென், சிலிக்கான் என எந்த கெமிக்கலும் அதில் இல்லை. கெமிக்கல் இல்லாத பொருட்கள் நல்லது செய்கின்றனவோ இல்லையோ, கெடுதலை ஏற்படுத்தாது என்பது நிச்சயம். எனவே, முழுக்க சீயக்காய்க்கு மாற முடியாதவர்கள், அவ்வப்போது ஒரு மாறுதலுக்கு சீயக்காய் குளியலை முயற்சி செய்யலாம். மெல்ல மெல்ல மாறலாம்.sO2t6Ey

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button