மருத்துவ குறிப்பு

பயணமும் சட்டமும் பாதுகாப்பை தருகிறதா?

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் சவுமியா(வயது 23). பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி எர்ணாகுளம்சோரனூர் ரயிலில் பெண்களுக்கான பெட்டியில், அவர் மட்டும் தனியாக பயணித்தார். வள்ளத்தோள் நகர்சோரனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்தபோது கோவிந்தசாமி என்பவர் சவுமியா இருந்த பெட்டிக்குள் நுழைந்து அவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

அவரிடம் இருந்து தப்பிக்க முயன்ற சவுமியாவை, ரயில் மெதுவாக சென்று கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரயிலில் இருந்து கீழே தள்ளி அவரும் கீழே குதித்து படுகாயங்களுடன் தண்டவாளத்தில் அடிபட்டுக் கிடந்த சவுமியாவை ஈவு இரக்கமற்று பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கினார். பின் அவரிடம் இருந்த கைப்பை மற்றும் பணத்தையும் எடுத்துச் சென்றார். படுகாயம் அடைந்த சவுமியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு போராடி பின் உயிரிழந்தார்.

இந்த வழக்கை விசாரித்த திருச்சூர் விரைவு நீதிமன்றம் 154 சாட்சிகள், 101 ஆவணங்கள், 43 ஆதாரங்கள் மற்றும் 143 கேள்விகளுடன் கோவிந்தசாமி மீது கொலை, பாலியல் வன்புணர்வு, வழிப்பறி, கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கோவிந்தசாமிக்கு தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றமும் இந்த தண்டனையை உறுதி செய்தது. இதை எதிர்த்து கோவிந்தசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்
முறையீடு செய்தார்.

கடந்த வாரம் இந்த வழக்கின் திருப்பமாக தமிழகத்தைச் சேர்ந்த கோவிந்தசாமிக்கு கேரள உயர்நீதிமன்றம் வழங்கிய தூக்குத் தண்டனையை 7 ஆண்டுகால சிறைத்தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சவுமியா கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக கேரள அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு ‘சவுமியா பலாத்கார வழக்கில் உச்சநீதிமன்றம் தவறான தீர்ப்பு வழங்கிஉள்ளது’ என்று தனது முகநூல் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் இந்தத் தீர்ப்பு திறந்த நீதிமன்றத்தில் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மரண தண்டனைக்கு எதிரான கருத்துகள் நம்மிடையே இருந்தாலும், பொதுவெளிகளில் எவ்வித பய
முமின்றி பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் 7 ஆண்டுகள் என்பது மிகவும் குறைவான தண்டனை. இது குற்றம் செய்வதில் உள்ள பயம் நீங்கி மேலும் குற்றங்கள் தொடர வழிவகுக்காதா என்ற ஐயத்தோடு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அஜிதாவை தொடர்புகொண்டபோது அவர், ”குற்றத்திற்கான
தண்டனை என்பது நேரில் கண்ணால் பார்த்த சாட்சியங்களை கொண்டே வரையறுக்கப்படுகிறது.

மேலும் தண்டனைகளை கடுமையாக்குவதன் மூலம் இதுவரை எந்தக் குற்றமும் குறைந்துவிடவில்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்களும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேதான் உள்ளது. எனவே இந்தப் பிரச்னையை உளவியல் சிக்கலாக நினைத்து உளவியல் ரீதியாக அணுகுவதே சிறந்தது. அதற்கான வழிமுறைகளை கண்டறிந்து களைவதே சிறந்த வழியாக இருக்கும்” என்றார். ரயில் பயணங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் பேசியபோது, ”பெண்களை கருத்தில் கொண்டு அவர்களின் பாதுகாப்புக்காக ‘1322’ என்ற புதிய புகார் எண் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் இந்த எண்ணை பயன்படுத்தலாம். ஒரு பெண் பயணி இந்த எண்ணை தொடர்பு கொள்ளும்போது, அடுத்த 4 விநாடிகளில் இந்த அழைப்பு எங்கிருந்து வந்ததோ அந்த மாநிலத்தின் தலைநகருக்கும், மாவட்டத் தலைநகருக்கும் அழைப்பு சேரும் வகையில் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது. எல்லா மொழிகளிலும் உதவி கிடைக்கக்கூடிய வகையில் இந்தத் திட்டம் உள்ளது. உதாரணத்திற்கு தமிழ்ப் பயணி ஒருவர் டெல்லியில் சென்று, இந்த எண்ணை தொடர்பு கொள்ளுகையில், மொழி புரிதல் பிரச்னை ஏற்பட்டால், அடுத்த 5 நொடிகளில் தமிழ் இணைப்பு கிடைக்கும்.

இதன் மூலம் தகவல் பரிமாற்றம் விரைவாக நடக்கும். பிரச்னையிலிருந்து பெண்கள் மீள நல்ல வழிவகையாகவும் அமையும்” என்றார். மேலும் ஆபத்து காலங்களில் போன் செய்தோ அல்லது எஸ்.எம்.எஸ்.(குறுந்தகவல்) சேவையை பயன்படுத்தி ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் ரயில்வே போலீசார் ஆகியோரை தொடர்பு கொள்ள முறையே 9003161710, 9962500500 ஆகிய எண்கள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

ஆபத்துகால அவசர உதவி எண்கள் தாங்கள் பயணம் செய்யும் ரயில் பெட்டிகளிலும் வெளியிடப்பட்டுள்ளன. தனியாக பயணம் செய்யும் பெண்கள் தங்களின் பயணத்திற்கு முன்பு தங்களின் பயணம் குறித்த விழிப்புணர்வோடு தங்களின் பாதுகாப்பிற்காக இந்த எண்களையும் தங்களின் கைபேசியில் வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார் விஜயகுமார்.ld45943

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button