மருத்துவ குறிப்பு

உறவினர்களைத் தெரியுமா உங்கள் குழந்தைகளுக்கு?

அத்தை. அவன் என் முடியைப் பிடிச்சு இழுக்கறான்.’

‘அவதான் முதல்ல என் சட்டையைப் பிடிச்சு இழுத்தா.’

‘ரெண்டு பேரும் கொஞ்சம் நேரம் சும்மா இருக்க மாட்டீங்களா? உங்க பாட்டி நெய் சீடை செஞ்சுட்டு இருக்காங்க. ரெண்டு பேரும் சமையக்கட்டுக்குப் போங்க!’

– சிலபல ஆண்டுகளுக்கு முன் இப்படியான பேச்சுகளை நம் குடும்பங்களில் கேட்டிருக்கலாம்.

‘மம்மி. பிளாக் ஃபாரஸ்ட் கேக் வேணும்’

‘ம்ம்ம். ஷாப்பிங் போலாம்’

‘டாடி, ஐபேடு வேணும்’

‘கொஞ்ச நேரம் டிஸ்டர்ப் பண்ணாம மொபைல்ல கேம்ஸ் ஆடு செல்லம்.’

– இது நிகழ்காலத்தில் நம் வீடுகளில் கேட்கும் உரையாடல்கள்.

அம்மா – அப்பா, அண்ணன் – தம்பி, அக்கா – தங்கை, பாட்டி – தாத்தா, பெரியம்மா – பெரியப்பா, சித்தி – சித்தப்பா, அத்தை – மாமா, அண்ணன் – அண்ணி, மைத்துனி – மைத்துனர், பேத்தி – பேரன், மனைவி – கணவன், மாமியார் – மாமனார், நாத்தனார் – மாப்பிள்ளை, மகள் – மகன். இதெல்லாம் குடும்ப உறவுகள் என்பதை நம் குழந்தைகள் பாடப்புத்தகத்தில் படித்திருக்கலாம். அல்லது பெரியவர்கள் பேசும்போது கவனித்திருக்கலாம். கூட்டுக் குடும்பங்கள் தழைத்திருந்த காலத்தில், அத்தனை உறவுகளுமே ஒரே வீட்டில் இருந்ததைப் பார்த்திருக்க முடியும்.

கூட்டுக்குடும்பங்கள் தனிக்குடும்பங்களாக உடைந்த பிறகு, ஒரு குடும்பத்தில் அப்பா, அம்மாவோடு இரு குழந்தைகள் என்று சுருங்கியது. இப்போது அதுவும் குறைந்து, ஒரு குழந்தை மட்டுமே உள்ள வீடுகள் அதிகரித்து வருகின்றன.

p18

அப்பா, அம்மா, மகன் அல்லது மகள் என்று அமையும் நியூக்ளியர் குடும்பங்கள் அதிகரித்து வருவது ஒருபக்கம் இருக்க, வருந்தத்தக்க வகையில், குழந்தையுடன் தனித்து வாழும் தாய் அல்லது தந்தை என சிங்கிள் பேரன்ட் குடும்பங்களும் பெருகிவருகின்றன.

இப்படி உறவுகள் அனைத்தும் சிதறி வாழும் இன்றைய காலகட்டத்தில், உறவுமுறைகளின் பெயர்களை குழந்தைகள் பெயரளவில் தெரிந்து வைத்திருப்பதே ஆச்சர்யம்தான். குடும்பம் குடும்பமாக ஸ்டுடியோவுக்குச் சென்று குடும்பப் புகைப்படங்கள் எடுத்து, அதைச் சுவரில் மாட்டிவைத்து, ‘இது தாத்தா, இது கொள்ளுப் பாட்டி, இது பெரியப்பா’ என்று சொல்லி வளர்த்த காலம், இன்று செல்போன் செல்ஃபிகளில் கரைந்துகொண்டிருக்கிறது.

பாட்டி வீட்டுக்குப் போய் ஆற்றில் குளிப்பது, ஆலமரத்தில் விழுதுகட்டி ஊஞ்சல் ஆடுவது, பெரியம்மா வீட்டு முற்றத்தில் பம்பரம் விளையாடுவது, மாமாவோடு சென்று மீன் பிடிப்பது, சித்தியோடு திருவிழா பார்ப்பது, அண்ணி வீட்டில் கைமுறுக்கு சாப்பிடுவது என உறவுகளுடனான சுகானுபவங்கள் இல்லாமல் பிணைப்பற்று வாழ்கிறார்கள் இன்றைய குழந்தைகள்.

நம் தலைமுறையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் உறவுகளைப் பற்றி பெயர் அளவில்கூட தெரியாத அளவுக்கு குழந்தைகளை வளர்த்துக்கொண்டிருப்பது ஆரோக்கியமானதா? இப்படியே போனால் நாளை நமது பேரக் குழந்தைகளுக்கு, நாம் யாரென்பதுகூட தெரியாத நிலை வரக்கூடுமா? குடும்ப உறவுகளை நம் குழந்தைகள் எந்த அளவுக்கு அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை, முதலில் நாம் தெரிந்துகொள்வது அவசியமானதுதானே? அதை அறிய, விகடன் இணையதளத்தில் பிரத்யேக சர்வே நடத்தினோம் (பார்க்க: பாட்டிக்குக் கெத்து!).

உறவுகள் என்பதே விவாதத்துக்கு உரிய விஷயமாகிவிட்ட நிலையில், இன்றைய குழந்தை வளர்ப்பும் உறவுகளை விட்டு தனித்திருப்பதையே பிரதானப்படுத்துகிறது. உறவினருக்கும் குழந்தை களுக்குமான உறவு எப்படி இருக்க வேண்டும்? உறவுகள் பலம் இழந்ததன் காரணம் என்ன? இதற்கான தீர்வு என்ன? இவற்றைப் பற்றிப் பேசுகிறார், மனநல மருத்துவர் திருநாவுக்கரசு.

‘`உறவுகள் தேவை என்றால் அதற்குக் குடும்பம் இருக்க வேண்டும். அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போதுதான் அவர்களின் வாரிசுகளுக்கு மாமா, அத்தை, பெரியம்மா, பெரியப்பா, சித்தப்பா, சித்தி, சித்தப்பா உள்ளிட்ட உறவுகள் கிடைக்க முடியும். தனியொரு குழந்தையாக இருக்கும் போது, உறவுகள் எப்படி விரியக்கூடும்? திருமணத்தையே ‘ஏன், எதற்கு?’ என்று கேள்விக்கு உள்ளாக்கும் சமூக அமைப்பு நம்மை நெருக்கிக்கொண்டிருக்கும் வேளையில், குடும்பங்களில் உறவுகளைப் பெருக்குவது சற்று கடினம்தான்.

* தனிக்குடித்தனம்

* பொருளாதாரச் சூழல்

* ஒரே குழந்தை

* சமூக மாற்றம்

* தொழில்நுட்ப (டெக்னாலஜி) வளர்ச்சி

இதுபோன்ற காரணங்களாலேயே இன்று உறவுகள் சுருங்கிக்கொண்டிருக்கின்றன. இதில் மிக முக்கியப் பங்கு, டெக்னாலஜிக்கு இருக்கிறது. என்னதான் டெக்னாலஜியின் மூலமாக எங்கோ இருக்கும் உறவுடனும் பேச முடியும் என்றாலும், அதன் அசுர வளர்ச்சி, நாம் உறவினர்களுக்கு ஒதுக்க வேண்டிய நேரத்தை அபகரித்துக்கொள்கிறது என்பது உண்மை.

மனித உணர்வுகளை சக மனிதர்களிடம் பகிர முடியுமே தவிர, இயந்திரத்திடம் பகிர்ந்துகொள்ள முடியாது. நம் முன்னோர் வாழ்ந்த வாழ்க்கையையும், அவர்களின் அனுபவத்தையும் அவர்களே சொல்லிக் கேட்டு, அதை பின்தொடர்ந்து வாழ்கிற வாய்ப்பையும் இன்றைய தலைமுறையினர் இழந்துவருகிறார்கள்.
p18b
இதற்கான தீர்வுதான் என்ன?

* `தனிமனிதனாகவே வாழ்ந்துவிடலாம்’ என்கிற எண்ணம் துறந்து உறவுகளைப் பேணுவதில் கவனம்கொள்ள வேண்டும்.
*
உணவு, உடை, உறைவிடம், தூக்கம், போலவே உறவுகளுக்கு முக்கியத்துவம் தரும்போதுதான் மனிதாபிமானம் நிறைந்த சமூகம் உயிர்ப்புடன் இருக்கும்.

* அடிப்படையில் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளலாம்.

* பொருளாதாரத்தை உயர்த்துவதில் காட்டும் முனைப்பைவிட, குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.

* குழந்தைகளுக்கு உறவினர்களிடம் பழகும் வாய்ப்பை தொலைபேசியோடு நிறுத்திவிடாமல், நேரிலும் வாய்க்கச் செய்ய வேண்டும்.

இப்படி, குடும்பம் என்கிற மரம் தழைக்கும்போதுதான் உறவுகள் கிளைகளாகச் செழித்திருக்கும்!” என்கிறார் திருநாவுக்கரசு!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button