ஆரோக்கியம் குறிப்புகள்

வெயிலுக்கு மொட்டை அடிக்கலாமா? – ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?

`உச்சி வெயில் மண்டையைப் பொளக்குது…’ என்று பலர் கூறக் கேட்டிருப்போம். வெயிலின் உக்கிரத்தை இப்படிக் கூறுவார்கள். வெயிலுக்கும், தலைக்கும் உள்ள தொடர்பை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதேபோல, கோடை காலத்தில் அதிகம் வியர்ப்பதால் அக்குள் பகுதியில் பாடி ஸ்பிரே, வியர்க்குருத் தொல்லையிலிருந்து பாதுகாக்க முகம், கழுத்துப்பகுதிகளில் பவுடர் பூசுவது, சருமத்தைக் காக்க சன்ஸ்கிரீன் என்று கவனம் செலுத்துகிறோம். ஆனால், நம்மை நேரடியாகத் தாக்கும் தலைமுடி உள்ள தலைப்பகுதியை நாம் அதிகம் கண்டுகொள்வதில்லை.

மொட்டை

விபத்துக்கு அஞ்சி, ஹெல்மெட் போடாத இருசக்கர வாகன ஓட்டிகள்கூட, வெயிலிருந்து தப்பித்துக்கொள்ள ஹெல்மெட் போடுகின்றனர். அதனால் என்ன..? நல்ல விஷயம் தானே என்கிறீர்களா… ஹெல்மெட் போடுவதால் வெயிலில் இருந்து தப்பித்தாலும், வியர்வை மற்றும் தலையில் அழுக்கு சேர்வதால் தலையில் அரிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன.

ஹெல்மெட்

இப்படியிருக்க, மொட்டை போடுகிறவர்கள் கடவுள் பக்தியால் போடுகிறார்களோ இல்லையோ, வெயில்கால தலைமுடிப் பிரச்னைகளுக்குப் பயந்து மொட்டை போடுபவர்களையே இந்த கோடை காலத்தில் அதிகம் பார்க்கலாம். உண்மையில், கோடை காலத்தில் மொட்டை போட்டுக்கொள்வது நல்லதா, கெட்டதா என்பது குறித்த சந்தேகம் நம்மில் பலருக்கும் ஏற்படலாம். இதுகுறித்து பாலமுருகன்ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகனிடம் கேட்டோம். அவர் மொட்டை போடும் வழக்கம் குறித்து ஆயுர்வேத நூல்களில் சொல்லப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொண்டதோடு, அதனால் ஏற்படும் ஆரோக்கிய நலன்கள் குறித்தும் விவரித்தார்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சரகர் என்பவர் எழுதிய ‘சரக சம்ஹிதை’ என்னும் ஆயுர்வேத நூலில் மொட்டை அடிப்பதை ஒரு ஆரோக்கிய நடைமுறை என்று கூறியுள்ளார். குறிப்பாக, பிறப்பு முதல் இறப்பு வரை பின்பற்ற வேண்டிய 16 கருமங்களில் முண்டன கருமம், சூடன கருமம் போன்றவற்றில் இதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.
shutterstock 404405086 14233

அறுவை சிகிச்சையின் தந்தை என்று போற்றப்படும் சுஸ்ருதா (Sushruta) என்பவர் எழுதிய ‘சுஸ்ருத சம்ஹிதை’ என்ற மருத்துவ நூலில், ரத்தக் குழாய்களின் முடிவு, பல உணர்ச்சி மர்மங்கள் தலைப் பகுதியின் உச்சியில் உள்ளன. மொட்டை அடித்துக்கொள்ளும்போது அவை தூண்டப்படுகின்றன. இதனால் சிந்திக்கும் திறன், ஞாபக சக்தி, புத்துணர்வு, மன வலிமை அதிகரிக்கிறது என்று கூறியுள்ளார். நம் முன்னோர் தம் அனுபவத்தில் உணர்ந்த சிலவற்றைச் சடங்குகளாக நமக்கு அளித்துச் சென்றுள்ளனர். அந்த வகையில், இதுவும் கலாசாரச் சடங்குகளில் ஒன்றுதான். உதாரணமாக, வீட்டில் இறப்பு போன்ற துக்க நிகழ்வுகளிலும் மொட்டை அடிப்பது நமது கலாசாரமாக இருந்து வந்துள்ளது. மொட்டை அடிப்பதால் மன வலிமை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்ததால், இவ்வாறு பின்பற்றி வந்திருக்கலாம். அதேபோல, ஞானிகள் மொட்டை அடித்துக்கொள்வதையும் கண்கூடாகப் பார்க்கிறோம்.

இப்படி ஏராளமான உதாரணங்கள் இருந்தாலும் மொட்டை அடிப்பதால் என்னென்ன மருத்துவப்பலன் என்பது பற்றி சொல்ல வேண்டியது அவசியம். பொதுவாக, பிறந்த ஒரு வருடத்துக்குள்ளும், அதற்குப் பின், சில வருட இடைவெளியிலும் மொட்டை அடித்துக்கொள்வது நல்லதே. அதேநேரத்தில் மொட்டை அடித்துத்தான் ஆக வேண்டும் என்பதில்லை. குறிப்பாக கோடை காலங்களில் தலையில் அதிகம் வியர்வை வெளியாகும். இதனால் தலைப்பகுதியில் அழுக்கு அதிகம் சேரும். மேலும் தலையில் அரிப்பு, பொடுகு ஏற்படுவதோடு சொரியாசிஸ், தலைமுடி உதிர்வு போன்ற பிரச்னைகளுக்கு காரணமாக அமைந்து விடுகின்றன. இதுபோன்ற பிரச்னைகளைச் சந்திப்பவர்கள் மொட்டை அடிப்பதும் ஒரு வகையில் தீர்வாக அமையும். மற்றபடி, இரண்டுவேளை நன்றாக தேய்த்துக் குளிக்கும் வழக்கம் இருந்தால்கூட போதும்.

மேலும், பணிச்சூழலால் மொட்டை போட்டுக்கொள்ள முடியாதவர்கள் வழக்கமாக வளர்க்கும் முடியின் அளவைவிட வெயில் காலங்களில் முடியை குறைத்துக் கொள்ளலாம். அதே நேரத்தில், சூரிய ஒளியிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது அவசியமாகும். இதற்காக குடை, தொப்பி போன்றவற்றை வெயிலில் செல்லும்போது பயன்படுத்தலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button