மருத்துவ குறிப்பு

வேலை தோடும் பெண்களுக்கான சுய பரிசோதனை

வேலை தேடத் தொடங்கும்போதே விழிப்புடன் செயல்பட்டால்தான் வாழ்வில் வளர்ச்சி கிடைக்கும். வேலை தேடும்போதே சில கேள்விகளை உங்களுக்கு நீங்களே எழுப்பி சுய பரிசோதனை செய்வது அவசியம்.

வேலை தோடும் பெண்களுக்கான சுய பரிசோதனை
படிப்பை முடித்துவிட்ட சந்தோஷத்தில் தேர்வு முடிவை எதிர்பார்த்து காத்திருக்கும் நேரமிது. அடுத்ததாக சிறந்த வேலையை தேடிக் கொள்ளும் கனவில் இருப்பீர்கள். வேலை தேடத் தொடங்கும்போதே விழிப்புடன் செயல்பட்டால்தான் வாழ்வில் வளர்ச்சி கிடைக்கும். பொருந்தாத வேலையில் சேர்ந்துவிட்டு அவதிப்படக் கூடாது. எதிர்காலத்தை கெடுத்துக் கொள்ளக்கூடாது.

நாம் எந்தத் துறைக்கு வேலைக்குச் செல்ல வேண்டும், என்ன பதவிக்கு செல்ல வேண்டும், எவ்வளவு ஊதியம் பெற வேண்டும், வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றிய தெளிவு இருந்தால் எளிதில் வேலையிலும், வாழ்க்கையிலும் ஜெயித்துவிடலாம். அதற்கு வேலை தேடும்போதே சில கேள்விகளை உங்களுக்கு நீங்களே எழுப்பி சுய பரிசோதனை செய்வது அவசியம். இங்கே சில கேள்விகள்…

உங்களுடைய பலம் என்ன?, சிறப்புத்திறன்கள் எவை?, எந்த துறையில் என்ன சாதிக்க நினைக்கிறீர்கள்?

தன் திறன் அறிந்தவர்கள் எந்தத் துறையிலும் தோற்றுப் போக மாட்டார்கள். படிச்சு முடிச்சாச்சு ஏதாவது ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துவிட வேண்டும் என்று நினைப்பதும், தெரிந்தவர்கள் மூலமாக பெரிய கம்பெனியில் ஒரு பணியில் சேர்ந்துவிட்டால் போதும் என நினைப்பவர்களும் பெரிதாக எதுவும் சாதித்துவிடப் போவதில்லை. நாம் இந்த துறையில் நுழைய வேண்டும், இந்த சாதனையை நிகழ்த்த வேண்டும் என்ற உத்வேகத்துடன் பணி தேடுபவர்களே புதிய சாதனையுடன், தன் வாழ்க்கைக் கனவுகளை நிறைவேற்றிக் கொள் கிறார்கள். எனவே உங்கள் பலம், சிறப்புத் திறன்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். என்ன சாதிக்க வேண்டும் என்று தீர்மானித்துவிட்டு அதற்கேற்ற துறையில் வேலை பெறுவதற்காக முயற்சி செய்யுங்கள்.

வேலைத் தேடலுக்கு பயன்படுத்தும் உத்திகள் என்ன?

தகவல் தொடர்புத்திறன் பெற்றவர்களுக்கு என்றுமே வாய்ப்புகள் பிரகாசமாக அமையும். விளம்பரத்தைப் பார்த்தோம், அப்ளிகேசன் போட்டுவிட்டு காத்திருக்கிறேன் என்பவர்கள் சாதாரண ரகம். நீங்கள் விரும்பும் துறையில் பணிபுரியும் உறவினர்கள், உடன் படித்த நண்பர்கள் மற்றும் நட்பு வட்டாரம், இணைய குழுக்கள் என பல பக்கங்களிலும் அதிகமாக தகவல் தொடர்பு வைத்திருப்பவர்கள், தாங்கள் விரும்பும் துறையில் நிகழும் மாற்றத்தை உன்னிப்பாக கவனிப்பவர்கள், எளிதில் விரும்பிய பணியை அடைவதுடன், லட்சியத்தையும் எட்டுவார்கள்.

மற்றவர் மத்தியில் உங்களை எப்படி முன்னிலைப்படுத்துவீர்கள்?

வேலை உலகில் போட்டி அதிகம். நீங்கள் விரும்பும் பணிக்கு உங்களைப்போல ஆயிரம் பேர், ஏன் லட்சம் பேர்கூட போட்டியிடும் நிலை இருக்கிறது. அப்படி இருக்கும்போது மற்றவர் மத்தியில் உங்களை எப்படி வேறுபடுத்தி காட்டப்போகிறீர்கள், வேலை வழங்குபவர்கள் தேடும் நபர் நீங்கள்தான் என்பதை எப்படி மெய்ப்பிக்கப் போகிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது சூட்சுமம். இதை சிறப்பாக செய்வதற்கு முதல் வழி நேர்த்தியான ரெஸ்யூம் (சுயவிவர பட்டியல்) தயாரிப்பது, இரண்டாவதாக நேர்காணலில் எளிமையும், திறமையையும் மெய்ப்பிப்பது. இதற்கான வியூகங்களை வகுத்துக் கொண்டால் வெற்றி உங்களுடையதே.

உங்கள் நேர நிர்வாகம் எப்படி?

நேரத்தை வீணாக்கியவர்கள், வருத்தத்தையே அறுவடை செய்கிறார்கள். தினமும் எவ்வளவு நேரம் வேலை தேடுகிறீர்கள், வேலைக்கான திறமையை வளர்த்துக் கொள்ள எவ்வளவு நேரம் செயல்படு கிறீர்கள்? என்பதை அளவிட்டுப் பாருங்கள். இலக்கை அடைவதற்காக காலத்தையும் தீர்மானித்து செயல் படுங்கள். வெற்றி தேடி வரும்.

201705131022281192 job looking self examination for women SECVPF

சிறந்த வேலையை பெறுவதற்கான வழிகள் என்ன?

உங்களுக்கு சிறந்த பணி கிடைக்க உதவுபவர்கள் யார்? குடும்பத்தினரா, உறவினரா, நண்பர்களா? இவர்கள் உதவி இல்லாமல் கிடைத்த வேலையில் இருந்து கொண்டு, உங்கள் கனவுத் துறையைப் பற்றிய பரந்த அறிவு மற்றும் திறமையால் பணி பெற முடியும் என்று நம்புகிறீர்களா? அதற்கு ஆகும் காலம் எவ்வளவு? என்பது போன்ற தீர்மான முடிவுகளால் வெற்றிப் பாதை வசமாகும்.

விரும்பும் துறையில் நிகழும் மாற்றங்களை அறிவீர்களா? எதிர்கால மாற்றம் பற்றிய விழிப்புணர்வு உண்டா?

வேலை பெறுவதற்கு மட்டுமல்லாது, எதிர் காலத்திலும் உங்கள் துறையில் சிறந்து விளங்க, இந்த கேள்வியை அவசியம் எழுப்ப வேண்டும். அன்றாட நிகழ்வுகளை கவனித்தல், செய்திகளை படித்தல், சக ஊழியர்கள், அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதில் இருந்து இந்தத் திறனை வளர்த்துக் கொள்ளலாம். நடக்கும் மாற்றங்களை அறிந்து கொண்டால் அதற்கேற்ப அனுபவங்களையும், திறமைகளை வளர்த்துக் கொண்டு என்றும் சிறந்து விளங்கலாம்.

செயல்பாடுகள் சரிதானா?

நம் ஒவ்வொரு செயல்பாடும் சரிதானா? என்று அவ்வப்போது கேள்வி எழுப்பிக் கொள்வது, வெற்றியை நோக்கி சீராக செயல்பட உதவியாக இருக்கும். சரியான வழிகாட்டி மற்றும் கூட்டாளியுடன் கலந்தாலோசித்து அவ்வப்போது உங்கள் இலக்கை நோக்கிய பயணத்தை அலசி ஆராயுங்கள். சரியாக திட்டமிட்டு, குறித்த காலத்தில் அந்தந்த இலக்கை அடைந்துவிட்டோமா? என பரிசோதித்துக் கொள்ளுங்கள். வெற்றி வெகு தூரமில்லை!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button