மருத்துவ குறிப்பு

ஊழியர்களுக்கு நிம்மதியான பணியிடம் அவசியம்

வீட்டிலும் வெளியிலும் பொறுப்புகளை சுமக்க வேண்டிய பெண்கள் எப்படி அந்தச் சுமைகளை வலி தெரியாமல் சுமக்கலாம், நிறுவனங்கள் எந்தெந்த வகையில் அவர்களுக்கு உதவலாம் என்று பார்த்து வருகிறோம். இந்தப் பகுதியில் மேலும் சில யோசனைகள்…

நிலையான அலுவலகச் சூழல்

எல்லா நிறுவனங்களிலும் திட்ட மேலாளர் (Project Manager) என்று ஒருவர் இருப்பார். அவர் நிறுவனத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையில் பாலமாக இருப்பார். குழுக்கள் பல இணைந்து செய்யும் வேலையில் சிக்கல்கள் வரலாம். அவை தனிப்பட்ட பகையை ஊழியர்களிடையே ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்வதும் இவருடைய பொறுப்புதான். நிறுவனத்தின் கட்டமைப்பு எப்போதும் ஒரே நிலைத்தன்மை உடையதாக இருக்கட்டும். திட்டங்களை ஒருங்கமைப்பதிலும் ஒழுங்கு இருக்கட்டும். இதனால் தினமும் அலுவலகத்தில் என்னென்ன நடக்கும் என்று ஊழியர்களுக்குத் தெரிந்திருக்கும். அவ்வப்போது ஒழுங்குமுறைகளை மாற்றி அமையுங்கள், தவறில்லை. ஆனால், தினசரி மாற்றங்கள் என்பது ஊழியர்களுக்கு மனஅழுத்தத்தைக் கொடுக்கும்.

அமைதிக்கு ஓர் இடம்

ஊழியர்கள் எல்லோருக்குமே எல்லா தினங்களுமே நல்ல தினங்களாக அமையும் என்று சொல்லமுடியாது. பணியிடத்தில் மனஉளைச்சல் தரும் வகையில் ஏதாவது நடந்திருக்கலாம். அதற்காக விடுமுறை எடுத்துக் கொண்டு செல்ல முடியாது, இல்லையா? உடனடியாக அவர்களுக்கு சிறிது தனிமை தேவைப்படலாம். அலுவலகத்தின் உள்ளே ஒரு அமைதிப் பகுதியை அமைத்துக் கொடுங்கள். ஊழியர்கள் சற்று நேரம் அங்கே சென்று மனஅழுத்தத்தைக் குறைத்துக் கொண்டு வரலாம். இந்த இடத்தில் நிறைய பசுமையான செடிகொடிகள், பூக்கள் நிறைந்து இருக்கட்டும். அலுவலகச் சூழலை நினைவுபடுத்தும் வகையில் எந்த பொருளும் இல்லாமல் மெல்லிய இசையுடன் வசதியான இருக்கைகளுடன் இருத்தல் மிகவும் முக்கியம். இது ஊழியர்கள் வந்து கூடி அரட்டை அடிக்கும் இடமல்ல. எல்லோரும் சேர்ந்து கூடிக் களிக்கும் இடமில்லை இது என்பதை தெளிவு படுத்தி விடவேண்டும். ஊழியர்களின் மன அமைதியை அவர்களது தனிமையை மதித்து அவர்களுக்கு சற்று ஆசுவாசம் ஏற்படுத்திக் கொள்ள ஏற்பட்ட இடம் இது என்பதை ஊழியர்கள் ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

வீட்டிலிருந்து வேலை

அலுவலகத்திற்கு ஊழியர்கள் சரியான நேரத்திற்கு வருவது சிறந்த விஷயம். அந்த ஒழுங்குமுறையை எல்லா நிறுவனங்களும் கண்டிப்பாக கடைபிடிப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், ஏதோ அவசர நிலைமை. ஊழியர் குறிப்பாக பெண் ஊழியர் வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை; குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை அல்லது வீட்டில் இருக்கும் பெரியவர்களை கவனித்துக் கொள்ள வேண்டிய சூழல் என்றால் அவர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதியை செய்து கொடுக்க வேண்டும். இப்போது இந்த வசதியை எல்லா நிறுவனங்களும் கடைபிடிக்கின்றன. சில பெரிய நிறுவனங்கள் மாதத்திற்கு இத்தனை நாட்கள் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என்ற விதியை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வசதி பெண் ஊழியர்களுக்கு மிகவும் முக்கியம். உடல்நிலை சரியில்லாத குழந்தையையும் பார்த்துக் கொண்டு அலுவலக வேலையையும் மனஅழுத்தம் இல்லாமல் முடிக்கலாம். ஊழியர்களும் இந்தச் சலுகையை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஊழியர்களிடையே குழு உணர்வை வளர்த்தல்

குழுவாக வேலை செய்பவர்கள் இடையே குழு உணர்வை வளர்க்க உதவலாம். ஒரு திட்டத்திற்காக வேலை செய்பவர்கள் அந்தத் திட்டத்திற்காக மட்டும் இணைந்திருக்காமல் மனதாலும் நாம் எல்லோரும் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற மனப்பான்மையுடன் இருக்க உதவலாம். மகிழ்ச்சி வேளைகளில் மட்டுமல்ல துன்பத்திலும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருப்பது நிறுவனங்களுக்கும் பலவகைகளிலும் உதவும்.

கட்டாய விடுமுறை தினங்கள்

வழக்கமாக எல்லா நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு வருடத்திற்கு 14 தினங்கள் விடுமுறை என்பதை விதியாக வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த 14 தினங்கள் அலுவகப்பணிகுடும்பப் பொறுப்பு சமநிலையை அடையப் போதுமானதாக இல்லை என்று பல ஆராய்ச்சிகளும் சுற்றாய்வுகளும் சொல்லுகின்றன. சிறிய நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களும், புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நிறுவனங்களின் ஊழியர்களும் தினம் எதிர்கொள்ளும் மனஅழுத்தத்தினால் பாதிக்கப்படுகிறார்கள். தங்களுக்கென்று நேரம் ஒதுக்காமல் தங்களை உற்சாகப்படுத்திக் கொள்ள முடிவதில்லை.விடுமுறைகளை சில ஊழியர்கள் வேலைப்பளுவின் காரணமாக எடுத்துக் கொள்வதே இல்லை. அப்படி எடுத்துக்கொள்ளாவிட்டால் அந்த விடுமுறை அதே வருடத்தில் காலாவதியாகிவிடும், ஊழியர்கள் கட்டாயம் அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சட்டம் கொண்டு வரலாம்.

ஊதியமில்லாத விடுமுறை நாட்கள்

பெண்களுக்கு பிரசவ நேரத்தில்தான் அதிகமான விடுமுறை தேவைப்படும். அவர்களுக்கு வழக்கமான பிரசவகால விடுமுறையுடன்் கூடுதலாக 2 மாதங்கள் விடுமுறை கொடுக்கலாம். இந்த நாட்களில் ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்று முதலிலேயே சொல்லிவிடலாம். அதேபோல மேல்படிப்பிற்காக அல்லது தங்களது திறமைகளை வெளிப்படுத்திக் கொள்ள சில போட்டிகளில் பங்கு பெற விருப்பப்படுபவர்களுக்கு இப்படிப்பட்ட விடுமுறையை வழங்கி அவர்களை
ஊக்கப்படுத்தலாம்.

நிறுவனங்களுக்கு இன்னுமொரு ஆகச்சிறந்த யோசனை

நீங்கள் உங்கள் ஊழியர்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்று நினைப்பது மிகப்பெரிய விஷயம். அவர்களது குடும்ப நலனிலும் நீங்கள் அக்கறை கொண்டுள்ளீர்கள் என்பது இந்தச் செயல்கள் மூலம் தெரியவரும். அதனால் அவர்களையே அழைத்துப் பேசுங்கள். அவர்களை விட மேம்பட்டவர்கள் வேறு யார் இருக்கமுடியும் இந்த விஷயத்தைப் பற்றிப்பேச? என்னென்ன மாற்றங்கள் கொண்டு வந்தால் அவர்களுக்கும் உங்களுக்கும் நன்மை பயக்கும் என்று அவர்களிடம் கேட்டால் பல நல்ல நல்ல யோசனைகள் கிடைக்கும்.
அவர்களின் ஆலோசனைகளில் எல்லாவற்றையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. முடிந்தவைகளை செய்து கொடுத்துவிட்டு அவ்வப்போது அலுவலகத்தில் மூன்று மாத, 6 மாத இடைவெளிகளில் இவைகளைப் பற்றிப் பேச ஊழியர்களை சந்திக்கலாம்.

தனிப்பட்ட ஊழியர் ஒருவரின் வேலைத் திறன் திடீரெனக் குறைந்திருக்கிறது என்றால் அவரால் குடும்பப்பொறுப்பு அலுவலகப்பணி இரண்டையும் சமநிலையில் செய்ய முடியவில்லை என்று பொருள். அவரைத் தனியாகக் கூப்பிட்டுப் பேசலாம். அவர் சொல்வதை அவரது நிலையில் இருந்து உணர முயலுங்கள். ஒரு நிறுவனம் நல்ல நிலையில் இயங்குகிறது என்பதை அதில் வேலை செய்யும் ஊழியர்களின் போக்கிலிருந்து அறிந்து கொள்ளலாம். நீண்ட நாட்களாக ஒரே நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் அந்த நிறுவனத்திற்கு பெரிய சொத்து. நிறுவனத்திற்கு நல்ல பெயரை வாங்கித்தருபவர்கள் இவர்கள்தான். ஓர் ஊழியர் நீண்ட நாட்களாக ஒரே நிறுவனத்தில் பணிபுரிகிறார் என்றால் அவருக்கு அந்த நிறுவனத்தின் மேல் ஒரு பிடிப்பு இருக்கிறது; அவருக்கு வேண்டிய பணத்தேவையை மட்டுமல்ல; மனதிற்கும் வேண்டிய சக்தியையும் அவர் அங்கிருந்து பெறுகிறார் என்றே பொருள்.
ஊழியர்கள் இல்லாமல் நிறுவனம் இல்லை. நிறுவனத்தை நடத்திச் செல்பவர்கள் அதன் ஊழியர்கள். இருவரும் ஒருவர் மேல் ஒருவர் சார்ந்து இருக்கிறார்கள். நிறுவனத்திற்கும், ஊழியர்களுக்கும் இடையில் நல்ல புரிதல் இருப்பது மிகவும் முக்கியம். ஊழியர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தருவது நிறுவனத்தின் கடமை. அதே போல நிறுவனம் தரும் வசதிகளை நல்லபடியாக பயன்படுத்திக் கொள்வது ஒவ்வோர் ஊழியரின் கடமை. வீட்டில் அமைதி இருந்தால் அலுவலகத்தில் நமது திறமையைக் காட்டுவது சுலபம். அதே போல அலுவலகச் சூழல் மனதிற்கு இசைவாக இருந்தால் வீட்டில் அமைதி நிலவும் என்பதும் நிஜம்.அலுவலகப்பணிகுடும்பப் பொறுப்பு இரண்டிலும் சமநிலை இருந்தால் வாழ்வு மகிழ்ச்சியுடன் இருக்கும்.
ld45968
நன்றி குங்குமம் தோழி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button