மருத்துவ குறிப்பு

வடக்கு திசையில் ஏன் தலைவைத்துப் படுக்கக் கூடாது?

வடக்கு திசை என்பது வழிபாட்டுக்கு உரிய திசையாகச் சொல்லப்படுகிறது. குரு உபதேசம் பெறுவதற்கும் வடக்கு திசையே உகந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதனால்தான் தெற்கு நோக்கி தட்சிணாமூர்த்தி அமைந்திருக்க, வடக்கு நோக்கி அமர்ந்தபடி சனகாதி முனிவர்கள் உபதேசம் பெறுகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை வடக்கு மிகவும் முக்கியமானதாகப் போற்றப்படுகிறது. பரம்பொருளான ஈசன் உறையும் திருக்கயிலாயம் வடக்கு புறமாகத்தான் அமைந்திருக்கிறது. இவை போன்ற காரணங்களால் வடக்கு திசை என்பது வழிபாட்டுக்கு உரிய திசையாக நம் முன்னோர்களால் சொல்லப் பட்டிருக்கிறது.


வழிபாட்டுக்கு உரிய திசையாகச் சொல்லப்படும் வடக்கு திசையில் தலை வைத்துப் படுக்கக் கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் சொல்லிச் சென்றதில் ஆன்மிக உண்மை மட்டுமல்ல, அறிவியல் காரணமும் இருக்கவே செய்கிறது. பூஜை வழிபாடுகளுக்கு வடக்கு திசை உகந்தது என்று சொல்லும் அதே நேரத்தில், அக்காலங்களில் போரில் தோற்ற மன்னர்களும், பழிச் சொல்லுக்கு ஆளானவர்களும் வடக்கு பார்த்து அமர்ந்து உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த சம்பவங்கள் பல நம் இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆக, வடக்கு பக்கம் உண்மையில் நல்லதா அல்லது கெடுபலன் தருவதா என்ற சந்தேகம் நமக்குத் தோன்றும். சற்று விரிவாகப் பார்ப்போம்.

புராண ரீதியாகப் பார்த்தால், வடக்கு திசை என்பது குபேரனுக்கு உரிய திசையாகும். எனவே, நாம் வடக்குப் பக்கமாக தலை வைத்து படுப்பது குபேரனை அவமதிப்பதுபோல் ஆகும். அதனால், நமக்கு குபேரனின் அருள் கிடைக்காமல் வறுமையில் வாட நேரிடும். இதனால்தான், ‘தாழ்ந்தாலும் வாழ்ந்தாலும் வடக்கே தலை வைத்துப் படுக்கக்கூடாது’ என்ற பழமொழி ஏற்பட்டது.

மற்றொரு வகையில் பார்த்தால், நாம் வடக்கில் தலை வைத்துப் படுத்தால், நம் கால்கள் தெற்கே இருக்கும். தென் திசை யமனுக்கு உரிய திசை என்பதால், யமனை அவமதிப்பதுபோல் ஆகும். நமக்கு எதற்கு யமனின் பொல்லாப்பு என்றுதான் அக்காலத்தில் நம் முன்னோர்கள் வடக்கே தலை வைத்துப் படுக்கக்கூடாது என்று சொல்லிச் சென்றிருக்கிறார்கள். இப்படி நம் முன்னோர்கள் ஆன்மிகத்தின் அடிப்படையில் நமக்குக் கூறினாலும், இதன் பின்னணியில் அமைந்திருக்கும் அறிவியல் உண்மையையும் அவர்கள் உணர்ந்தே இருந்தனர். ஆனால், அறிவியல் பின்னணியில் சொன்னால் நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று எண்ணியே ஆன்மிகக் காரணம் சொல்லினர். வடக்கில் தலை வைத்துப் படுக்கக்கூடாது என்று சொல்வதற்கு அறிவியல் பூர்வமான காரணம் பற்றியும் நாம் தெரிந்துகொள்வோம்.

வடக்கு திசையில்தான் மின்னணு காந்தக் கதிர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால்தான் திசை காட்டும் கருவியின் முள் முனை வடக்கு நோக்கியே காட்டுகிறது. மின்னணு காந்தக் கதிர்களின் தாக்கம் அதிகம் இருக்கும் வடக்கு திசையில் தலை வைத்துப் படுக்கும்போது, மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டி இருக்கிறது. காந்த சக்தியை பற்றிய அறிவியல் வளராத காலத்திலேயே நம் பெரியவர்கள் வடக்கு பக்கம் தலை வைக்காதே என்று அழகாக பதிவு செய்து இருக்கிறார்கள். தெற்கு கிழக்கு பகுதிகளில் சரியான அளவு ஈர்ப்பு சக்தி உள்ளதால் தூங்கி எழும் போது சுறுசுறுப்பாகவும் மனது ரிலாக்ஸாகவும் உடல் நலக்குறைவு இல்லாமலும் எழுந்திருக்க முடிகிறது. வடக்கு பக்கம் தலை வைத்து படுப்பதால் நோய்கள் உருவாகி மூளையை மந்தமாக்குவதாகவும் சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மேலும் வடக்கில் தலைவைத்து படுத்தால் எடுத்ததற்கெல்லாம் கோபம் வரும். விரக்தி நிலையால் எரிச்சலும் உண்டாகும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

ஆன்மிகம் சார்ந்த வழிபாடுகள், வாஸ்து போன்றவற்றுக்கு வடக்கு உகந்த திசையாக இருந்தாலும், படுப்பதற்கு மட்டும் வடக்கு திசை ஆகாது என்று நம் முன்னோர்கள் சொன்னதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. அவர்கள் உண்மையைத் தவிர வேறு எதுவும் சொன்னதில்லை.1444074328 2237

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button