கால்கள் பராமரிப்பு

பாதங்களின் நலனில் முக்கியத்துவம் செலுத்துவதும் அவசியம்

உடல்நலன் காப்பதில் பாதம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. காரணம், உடலில் உள்ள எலும்புகளின் மொத்த எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்குக்கும் மேலான எலும்புகள் பாதங்களில்தான் அமைந்திருக்கின்றன. அதேபோல், உடலின் அனைத்து நரம்புகளும்
பாதங்களில்தான் இணைகின்றன.

நாம் நடப்பதற்கும், ஓடுவதற்கும், குதிப்பதற்கும், நடனமாடுவதற்கும் என அனைத்து அன்றாட முக்கிய வேலைகளைச் செய்யும் பாதங்களின் நலனில் முக்கியத்துவம் செலுத்துவதும் அவசியம். இதனால்தான், ‘பாதங்கள் ஒருவரின் ஆரோக்கியத்தை எடுத்துக்காட்டும் கண்ணாடி’ என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்படி முக்கியத்துவம் பெற்ற பாதங்களின் நலன் காக்கவும், அழகைப் பேணவும் நிபுணர்கள் கூறியிருக்கும் ஆலோசனைகளைப் பார்ப்போம்…

பாதப்பராமரிப்பில் மசாஜ் முக்கியப் பங்கு வகிக்கிறது. தினமும் இரவில் படுக்கும்முன், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் கொண்டு பாதங்களை 5 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரித்து, பாதங்கள் வறண்டு போகாமல் இருக்கும். மசாஜ் செய்வதால் தலைவலி, மைக்ரேன் தலைவலி, மன அழுத்தம், பதற்றமும் குறைகிறது.

வீட்டுக்குள்ளும் வெறும் கால்களில் நடப்பதைத் தவிர்த்து, வீட்டுக்குள் உபயோகிப்பதற்கென்றே தனியாக செருப்பு வைத்துக்கொள்ளலாம். வெளியில் செல்லும்போது கண்டிப்பாக வெறும் காலில் செல்லக்கூடாது. பூஞ்சைத்தொற்று, பாக்டீரியா தொற்று ஏற்பட்டு கால்களில் சிவப்பு கொப்புளங்கள் தோன்றும். போதுமான தண்ணீர் அருந்தாவிட்டால் கால்களின் தோலிலும் வறட்சி ஏற்படும். சிலருக்கு பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு, சிலநேரங்களில் ரத்தம் கூட வெளியேறும். இதுபோன்ற பிரச்னைகளிலிருந்து விடுபட கால்களை பராமரிப்பது அவசியம்.

ஒரு டப்பில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் Tea tree oil அல்லது ஏதாவது ஒரு ஆர்கானிக் ஆயிலுடன் எலுமிச்சைச் சாறு ஒரு ஸ்பூன் மற்றும் ராக்சால்ட் சேர்த்து கலக்க வேண்டும். டப் நீரில் கால்களை 5 – 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். ஊறியபின் சுத்தமான டவலால் ஈரம் போக துடைத்துவிட்டு மாய்சரைசிங் க்ரீம் தடவி ரிலாக்ஸாக உட்கார வேண்டும்.

ஆர்கானிக் ஆயில் சேர்ப்பதால் விரல்களுக்கிடையே உள்ள பூஞ்சைத் தொற்று மறையும். எலுமிச்சைச்சாறும், ராக்சால்ட்டும் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி மிருதுவாக்கும். இதுபோல் வாரம் ஒரு முறை செய்து பாருங்கள். பட்டுப் போன்ற பாதங்களைப் பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

இப்போது தண்ணீரில் நகங்கள் நன்றாக ஊறியிருப்பதால் நகங்களிலுள்ள அழுக்கை எடுப்பதும், நகங்களை வெட்டி ட்ரிம் பண்ணுவது எளிதாக இருக்கும். ஸ்க்ரப்பரால் பாதங்களின் பின்புறம் மற்றும் விரல் இடுக்குகளில் தேய்த்துவிட வேண்டும். ஸ்க்ரப்பர் கொண்டு தேய்ப்பதால் தோல் சொரசொரப்பாகிவிடும். இதற்கு Pumice stone கொண்டு அழுந்த தேய்ப்பதன் மூலம் தோல் சொரசொரப்பு நீங்கி நன்றாக மிருது ஆகிவிடும்.
மீண்டும் கால்களை சுத்தமாக துடைத்துவிட்டு, வீட்டில் நாமே தயாரித்த லோஷன் தடவலாம்.

தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில், பாதாம் ஆயில், வீட் ஜெர்ம் ஆயில் மூன்றையும் சம அளவு எடுத்துக்கொண்டு, அதில் சில துளிகள் யூகலிப்டஸ் ஆயில் கலந்து பாதங்களில் தேய்க்க வேண்டும். இந்தக் கலவையை ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் ஊற்றி ஃபிரிட்ஜில் வைத்துக் கொண்டு தினமும் இரவில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும்.

ஆலிவ் ஆயில் வெயிலால் கருத்துப்போன பாதங்களை வெண்மையாக்கும். பாதாம் எண்ணெயும், வீட் ஜெர்ம் ஆயிலும் பாதத்திற்கு மிருதுத்தன்மையைக் கொடுக்கும். யூக்கலிப்டஸ் ஆயில் பாதத்தில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கும்.

குளிர்காலத்திலும், ஏசி அறையில் படுப்பவர்களும் காலுக்கு சாக்ஸ் அணிந்துகொண்டு படுப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் தோல் வறண்டு விடும். வெளியே செல்வதற்கு முன் பாதங்களுக்கும் சன்ஸ்க்ரீன் லோஷன் மற்றும் மாய்சரைஸ் க்ரீம் தடவிக் கொள்ளலாம். மழைக்காலங்களில் வெளியில் தண்ணீரில் கால் படுவதால் பாதங்களை மிகவும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். இல்லையெனில் சேற்றுப்புண் ஏற்பட்டு பாதம் பார்ப்பதற்கே அருவெறுப்பாகிவிடும் என்பதால் கவனம் அவசியம்.

மெனிக்யூர் பண்ணலாமா?
மூளைக்கு அடுத்தபடியாக கைகளைத்தான் அதிகமாக பயன்படுத்துகிறோம். அதிலும் பெண்களின் வீட்டு வேலைகளில், பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல், வீட்டை சுத்தம் செய்வது என ரசாயனப் பொருட்களின் பயன்பாடு அதிகம் என்பதால் கைளில் உள்ள தோல் வறண்டு கடினமாகிவிடுகிறது. ‘பியூட்டி பார்லர் சென்று கைகளுக்கு மெனிக்யூர் சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கெல்லாம் எங்களுக்கு நேரம் இல்லை’ என்று சொல்பவர்கள் வீட்டிலேயே சில எளிய வழிகளை பின்பற்றினால் ஆரோக்கியமான, அழகிய கைகளைப் பெறலாம்.
pedicure and manicure
கைகள் பராமரிப்பில் நகம் முதலிடம் பெறுகிறது. பழைய நெயில்பாலீஷை ரிமூவர் கொண்டு முழுவதுமாக நீக்கவேண்டும். நகத்தை கட் செய்வதற்குமுன் நீரில் ஊறவைப்பதால் உடைவதைத் தவிர்க்கலாம். கூர்மையான கட்டர், கத்தரிக்கோல் கொண்டு வெட்டாமல், நெயில் பைண்டர் உதவியுடன் உங்களுக்கு பிடித்தமான வட்டவடிவிலோ, ஓவல் வடிவத்திலோ நகத்தை ஷேப் செய்யவேண்டும்.

ஒரு டப்பில் வெதுவெதுப்பான நீரை எடுத்து அதில் முகத்துக்குப் போடும் க்ளென்சர் ஒரு டீஸ்பூன் அளவு கலக்க வேண்டும். மற்ற சோப்பு நீரை கலந்தால் அதில் உள்ள கெமிக்கல் கைகளையும், நகங்களையும் மேலும் வறண்டு போகச்செய்துவிடும். அந்த நீரில் இரண்டு கைகளையும் 3 நிமிடங்கள் ஊற வையுங்கள். அதிகநேரம் ஊறினால் நகங்கள் ட்ரிம் செய்யமுடியாமல் உடைந்துவிடும். ஸ்க்ரப்பரால் விரல்கள் மற்றும் புறங்கைகளை நன்றாக சுத்தம் செய்யவும்.

இப்போது நக அழுக்கை எடுப்பதற்கு பயன்படும் க்யூடிகல் ரிமூவர் கொண்டு மிக மென்மையாக நக இடுக்குகளில் உள்ள அழுக்கை எடுக்க வேண்டும். அதிகமாக அழுத்தம் கொடுத்தால் நகத்திற்கு அடியில் உள்ள தோல் உறிந்துவிடும். பாக்டீரியா தொற்றுகளிலிருந்து இந்த தோல்தான் நகக்கண்களை பாதுகாக்கிறது. அதில் நீர் கோர்த்துக் கொண்டு நகசுத்தி ஏற்படக் காரணமாகிவிடும்.

இப்போது உங்கள் கைகள் சுத்தமாகவும் மிருதுவாகவும் இருக்கும். ஒரு நல்ல மாய்சரைசரை கைகளில் தடவி நன்றாக மசாஜ் செய்வதால் கைகளில் உள்ள வறட்சி நீங்கும். இப்போது தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை கைகளில் தடவினால் கைகளின் தோலுக்கு ஊட்டம் அளிக்கும்.
பாத்திரம் துலக்குவது, துணிதுவைப்பது போன்ற வீட்டு வேலைகள் செய்யும்போது பாதுகாப்பாக கைகளுக்கு கிளவுஸ் போட்டுக் கொண்டு செய்தால் கைகளின் தோலுக்கு தீங்கு ஏற்படாது.

படுக்கைக்கு போவதற்கு முன் 2 துளிகள் கிளிசரினோடு நீர் சேர்த்து கைகளுக்கு தடவிக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு இரவும் ஒரு 5 நிமிடம் ஒதுக்கி கைகளை பராமரித்தால் தோலின் துளைகளில் உள்ள அடைப்புகள் நீங்கி தோலுக்கு நல்ல சுவாசம் கிடைக்கும். மெனிக்யூர் சிகிச்சையை வார இறுதி நாட்களில் செய்து கொண்டால் கைகளை நன்றாகப் பராமரிக்கலாம்.

முக்கியமாக, குளிர் பிரதேசங்களில் இருப்பவர்கள் கைகளுக்கு சாக்ஸ் அணிந்து கொள்ள வேண்டும். அதிக வெப்பம் உள்ள இடங்களில் இருப்பவர்கள் வெளியில் செல்வதற்குமுன் கைகளுக்கு சன்ஸ்க்ரீன் தடவிக் கொள்ள வேண்டும். சூரியக்கதிர்களால் தோலில் நேரடி தாக்குதல் ஏற்பட்டு விரைவிலேயே சுருக்கம் ஏற்படும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button