​பொதுவானவை

குழந்தைகளை விரட்டும் கொடிய மிருகங்கள்

குழந்தைகளை விரட்டும் கொடிய மிருகங்கள்

நம் குழந்தைகளுக்கு நாம் வாழும் சூழ்நிலை பாதுகாப்பானதாக இல்லை என்கிற விஷயம் நம்மை தலை குனிய வைக்கிறது, பாதுகாப்பான ஒரு சமூகத்தை நம்மால் உருவாக்கிக் கொடுக்க முடியவில்லை என்பது வெட்கக்கேடான விஷயம்.‘உள்ளக் கிளர்ச்சியைத் தூண்டும் உடைகளை பெண்கள் அணியக் கூடாது. அதுதான் இதைப்போன்ற வன்முறை சம்பவங்கள் நடக்கக் காரணம்’ என்று அரசியல் பெரிய தலைகள் எல்லாம் வாய்க்கு வந்தபடி உளறிக்கொண்டிருக்கின்றன.

ஆறு வயது பள்ளிக் குழந்தை என்ன மாதிரி உடை அணிந்திருக்கும் உள்ளக் கிளர்ச்சியைத் தூண்ட என்று தோன்றினாலும், எங்கேயோ பார்த்த காட்சிகளின் தினவை சொறிந்துகொள்ள குழந்தைகள் அகப்படுகிறார்கள் இந்தக் கயவர்களுக்கு. குழந்தைகளின் உடலை ஒருவன் காமக்கண் கொண்டு பார்க்கிறான் என்றால் அவன் நிச்சயம் மனிதனல்ல; கொடிய மிருகம்.

• குழந்தைகளை (ஆண், பெண் இருபாலரையுமே) யாருடனும் – எத்தனை தெரிந்தவர்களாக இருந்தாலும் வெளியே தனியாக அனுப்பக் கூடாது. நீங்கள் இல்லாமல் காரில் ஓட்டுனருடன் கூட அனுப்பாதீர்கள். இப்போதெல்லாம் குழந்தைகள் பள்ளி விட்டு வந்தபின் விதம்விதமான வகுப்புகளுக்குப் போய்வருகிறார்கள்.

ரொம்பவும் தெரிந்த ஓட்டுனர், பல வருடங்களாக உங்கள் வீட்டில் வேலை செய்கிறார் என்றாலும் கூட, பெற்றோர்களே, குழந்தைகளை அவர்களுடன் அனுப்பாதீர்கள். யார் எந்த சமயத்தில் எந்த சந்தர்ப்பத்திற்காகக் காத்திருப்பார்கள் என்றே தெரியாது. நமக்கு நன்கு தெரிந்தவர்கள்தான் நம் குழந்தைகளுக்கு எதிரி. அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

நன்கு அறிமுகம் ஆனவர் என்ற தகுதியே விபரீதம் நிகழ சந்தர்ப்பத்தை அளிக்கிறது. நாம் என்ன செய்தாலும் குழந்தை தன் பெற்றோர்களிடம் சொல்லாது; சொன்னாலும் அவர்கள் நம்மை சந்தேகப்பட மாட்டார்கள் என்ற எண்ணம் தவறு செய்யத் தூண்டுகிறது. இவர்களைப் பற்றிக் குழந்தைகள் நம்மிடம் சொன்னாலும், ‘ச்சே! அவர் அப்படியெல்லாம் செய்யமாட்டார்’ என்று நாம் குழந்தைகளை நம்ப மாட்டோம். இதுதான் ஆபத்தில் முடிகிறது.

• குழந்தைகள் பள்ளியிலிருந்து வந்தவுடன் அன்றைய தினம் என்ன நடந்தது என்று விவரமாகக் கேட்டுக் தெரிந்து கொள்ளுங்கள். சின்ன சின்ன விவரங்களையும் கவனமாகக் கேளுங்கள்.

• குழந்தை வழக்கத்துக்கு மாறாக சோர்வாக இருந்தாலோ, கவனக் குறைவுடன் இருந்தாலோ உடனே விசாரியுங்கள். இந்த சமயங்களில் குழந்தைகளை திட்டாதீர்கள். நீங்கள் திட்டினால் குழந்தைகள் பயந்துகொண்டு தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை பேச மாட்டார்கள். குழந்தைகளிடம் இதுபோல நடக்கும் கொடுமைகள் பற்றி பொதுவாகச் சொல்லி எச்சரிக்கை செய்யுங்கள்.

எதற்காகவும், யாரும் உங்கள் குழந்தையின் மேல் கைவைக்கக் கூடாது. தொட்டுப் பேசவும் கூடாது. அசிங்கமான ஜோக்குகள் சொல்லக்கூடாது. குழந்தை யாரையாவது ‘bad uncle’ என்று சொன்னால் பொறுமையாகக் குழந்தையின் பேச்சைக் கேளுங்கள். ஏன் அப்படிச் சொல்லுகிறது, எந்த விஷயத்தில் அங்கிள் பேட் ஆக நடந்து கொண்டார் என்று விசாரியுங்கள்.

• பரவலாக எல்லா இடங்களிலும் குழந்தைகள் சிறார்கள், சிறுமிகள் பேதமின்றி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகின்றனர். நகரம், கிராமம் வேறுபாடில்லை. உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், தந்தை, சகோதரன், ஆசிரியர், அறிமுகமற்றவர்கள் என்று எங்கிருந்தும் யாரும் அத்துமீறல் செய்யமுடியும்.

இப்படிப்பட்ட குற்றவாளிகள் தூக்கிலிடப்படவேண்டும் என்று பொதுவாகச் சொல்லிவிடுகிறோம். ஆனால் இவர்களில் பலர் நம் வீட்டுக்குள் இருப்பவர்கள் என்னும் உண்மைமையை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்? குடிசைப்பகுதிகளில் வாழும் குழந்தைகள் இந்த மாதிரியான வன்முறைகளுக்கு அதிகம் ஆளாகிறார்கள்.

பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்றுவிடும்போது குழந்தைகள் தனிமையில் விடப்படுவது ஒரு காரணம். நடுத்தர, மேல் வர்க்கக் குழந்தைகள்கூட இத்தகைய துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள். இவர்கள் மிகவும் நெருக்கமான குடும்ப வலைக்குள் இருப்பதால் இதைப்பற்றி பேச யாரும் இருப்பதில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button