அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

பூக்கள் தரும் புது அழகு

Facial-Lady-flower

‘பூக்கள் பூக்கும் தருணம்…’ பாடலைக் கேட்கும் போதும், நம்மைக் கடந்து செல்கிற பூ வாசத்தை நுகரும் போதும், பூக்கள் மலர்ந்து சிரிக்கிற தோட்டத்தைப் பார்க்கும் போதும், நம்மையும் அறியாமல் நம் மனதுக்குள் பூ வாசம் வீசுமல்லவா? அதுதான் மலர்களின் சிறப்பம்சம். பூக்கள் ரசிப்பதற்கு மட்டும் அழகல்ல… அழகுக்கே அழகு சேர்க்கும் அற்புத குணங்கள் கொண்டவை!கோடையில் ஏற்படுகிற அழகுப் பிரச்னைகளை, அழகழகான மலர்கள் கொண்டு சரியாக்குகிற சிகிச்சைகள் பற்றிய விளக்கம். 

சாமந்திப்பூ

சாமிக்கு மட்டுமே உபயோகிக்கிற சாமந்திப்பூவில், அழகை மேம்படுத்தும் ஏராளமான குணங்கள் அடங்கியுள்ளன தெரியுமா?ஃப்ரெஷ்ஷான சாமந்திப்பூவின் இதழ்களை மட்டும் உதிர்த்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும். அதில் சாமந்திப் பூக்களைப் போட்டு, அடுப்பை அணைத்து, அப்படியே மூடி வைத்து விடவும். ஒரு இரவு முழுக்க அப்படியே வைக்கவும். மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை வடிகட்டி, அதில் முகம் கழுவினால், முகம் பொலிவு பெறும். இந்தத் தண்ணீரை இரண்டு நாட்களுக்கு ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம். சருமத்தின் கருமை நீங்கும். இளமையான தோற்றம் கிடைக்கும்.

சாமந்திப்பூ கலந்த டீ கிடைக்கிறது. மருத்துவ மற்றும் அழகு அம்சங்கள் பொருந்தியது இது. மாதவிலக்கின் போதான தசைவலிகள், களைப்பு, வயிற்றுவலி போன்றவற்றுக்கு இந்த டீ மிகவும் நல்லது. தவிர, வெளிப்புறப் பூச்சுக்கும் இதை உபயோகிக்கலாம். சாமந்திப்பூ கலந்த டீ டிகாக்ஷனை குளிர வைத்து, அதில் பஞ்சை நனைத்து, கண்களின் மேல் வைத்து ஓய்வெடுத்தால் கண்களுக்கு அடியில் உள்ள கருமை நீங்கும். கண்களின் வீக்கம் குறையும். இந்த டிகாக்ஷனை நீர்க்கச் செய்து, பஞ்சில் தொட்டு முகம் முழுக்கத் தடவி, சிறிது நேரம் கழித்துக் கழுவினால் வெயில் பட்டுக் கருத்துப் போன சருமம் நிறம் மாறும்.

ரோஜா

பன்னீர் ரோஜாவின் இதழ்களுடன், வேப்பிலை சேர்த்து அரைக்கவும். அத்துடன் சில துளிகள் எலுமிச்சைச்சாறு கலந்து முகத்தில் தடவி, கண்களுக்கு மேல் பன்னீரில் நனைத்த பஞ்சை வைத்துக் கொண்டு 15 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும். இது முகத்திலுள்ள பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை நீக்கி, சருமத்தைப் பளபளப்பாக்கும்.ரோஜா இதழ்களைப் பால் விட்டு அரைத்து, உதடுகளின் மேல் தடவி வந்தால் உதடுகள் இயற்கையான நிறம் பெறுவதுடன், பளபளப்பாகவும் மாறும்.

மல்லிகைப்பூ

ஒரு கப் மல்லிகைப்பூவுடன் 4 லவங்கம் சேர்த்து அரைக்கவும். அதில் சுத்தமான சந்தனம் சேர்த்து, வெதுவெதுப்பான தண்ணீர் விட்டுக் குழைக்கவும். இதை முகம், நெற்றி, கழுத்து, முதுகுப் பகுதிகளில் தடவி, 20 நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த தண்ணீரால் கழுவினால், வெயிலினால் ஏற்பட்ட கருமை, சின்னச் சின்ன கட்டிகள் சரியாகி, சருமம் ஒரே சீரான நிறத்துக்குத் திரும்பும்.

மகிழம்பூ

கைப்பிடி அளவு மகிழம் பூவை ஊற வைத்து அரைக்கவும். அத்துடன் அதே அளவு பயத்தம் மாவு கலந்து கோடைக்காலம் முழுவதும் தினசரி குளிப்பதற்கு சோப்புக்கு பதில் உபயோகித்து வரலாம். இது வெயில் படுவதால் உண்டாகும் சருமப் பிரச்னைகளைத் தவிர்க்கும். ஏற்கனவே வெயிலில் அலைந்ததால் உண்டான வேர்க்குரு, வேனல் கட்டிகள் போன்றவற்றையும் விரட்டும். தினமும் இதை உபயோகித்துக் குளிப்பதால் வியர்வை நாற்றமே இருக்காது. நாள் முழுவதும் புத்துணர்வுடன் உணர்வீர்கள். சருமமும் மென்மையாகும்.

மரிக்கொழுந்து

மரிக்கொழுந்து பூவின் சாறு 2 டீஸ்பூன், சந்தனத் தூள் 2 டீஸ்பூன் இரண்டையும் கலந்து முகம், கை, கால்களில் தேய்த்து மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், வியர்வை கட்டுப்படும். சரும நிறம் கூடும்.

ஆவாரம் பூ

ஃப்ரெஷ்ஷான ஆவாரம்பூ கிடைத்தால் ரொம்பவும் நல்லது. கிடைக்காதவர்கள் நாட்டு மருந்துக் கடைகளில் விற்கிற காய்ந்த ஆவாரம் பூவையும் பயன்படுத்தலாம். 100 கிராம் ஆவாரம் பூவுடன், 50 கிராம் வெள்ளரி விதையும், 50 கிராம் கசகசாவும் சேர்த்து பால் விட்டு விழுதாக அரைத்து முகம், கழுத்து, கை, கால்களுக்கு பேக் மாதிரி போடலாம். அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு தண்ணீர் தொட்டு, விரல்களால் வட்ட வடிவில் மசாஜ் செய்து விட்டுக் கழுவவும். இயற்கையான சன் ஸ்கிரீன் மாதிரிச் செயல்படும் இது.

ஜாதிமல்லியும் முல்லையும்

ஜாதிமல்லி மற்றும் முல்லையில் தலா 10 பூக்கள் எடுக்கவும். அத்துடன் 2 டீஸ்பூன் பால் சேர்த்து நைசாக அரைத்து முகம், உடம்பு முழுக்கவே தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்து, பிறகு கடலை மாவு, பயத்த மாவு கலந்த குளியல் பொடி உபயோகித்துக் குளிக்கலாம். இது வெயில் காலத்தில் உண்டாகிற அத்தனை சருமப் பிரச்னைகளுக்கும் தீர்வு தரும்.

செம்பருத்தி

ஒற்றைச் செம்பருத்திப் பூவுடன், 2 பாதாம் பருப்பு சேர்த்து ஊற வைத்து அரைத்து வெயில் படும் சருமப் பகுதிகளில் எல்லாம் தடவவும். அரை மணி நேரம் ஊறியதும், குளியல் பொடி உபயோகித்துக் குளித்தால், கோடையினால் உண்டாகிற சரும வறட்சி நீங்கி, தோல் வெண்மையாகவும் மென்மையாகவும் மாறும்.

தாமரைப்பூ

தாமரை இதழ்களை சிறிது பால் விட்டு அரைத்து, உடல் முழுவதும் தடவவும். சிறிது நேரம் கழித்து சோப் உபயோகிக்காமல் குளிக்கவும். இது சருமத் துவாரங்களை டைட் செய்து, உடனடியாக சருமத்துக்கு ஒருவித மென்மையைக் கொடுக்கும். வெயில் காலத்தில் வாரம் 2 முறையாவது இதைச் செய்து வந்தால், சருமத்தை ஒரே சீரான நிறத்துடனும், மென்மையுடனும் பராமரிக்கலாம்.

குங்குமப்பூ

ஒரு சிட்டிகை குங்குமப் பூவுடன் சிறிது அதிமதுரம் கலந்து, முதல் நாள் இரவே சிறிது தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் அதைக் கை விரல்களால் நசுக்கி, அதன் சாரத்தை முகம், கழுத்துப் பகுதியில் தடவி சிறிது நேரம் ஊற விடவும். பிறகு மென்மையாக மசாஜ் செய்து
விட்டுக் கழுவினால், சருமம் சிவப்பழகு பெறும். வெயிலில் அலைவதால் கருத்துப் போவதையும் தவிர்க்கும்.

ட்ரிபுள் பேக்

ரோஜா, மரிக்கொழுந்து மற்றும் மல்லி மூன்றையும் சம அளவு எடுத்து சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து உடலுக்கான பேக் மாதிரிப் போட்டுக் குளிக்கலாம். நாள் முழுவதும் உடல் நல்ல நறுமணத்துடன் இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button