மருத்துவ குறிப்பு

பசியின்மையைப் போக்க பல வழிகள்

பசியின்மையைப் போக்க பல வழிகள்

* சமைக்கும் உணவு புதுமையாக, சுவையாக இருந்தால்தான் நம்மால் விரும்பிச் சாப்பிட முடியும். எனவே வழக்கமான காய்கறிகள் என்றாலும் கொஞ்சம் வித்தியாசமான தயாரிப்பு முறையில் சமைத்துச் சாப்பிடுங்கள். சமையல் புத்தகங்கள் அல்லது விதவிதமாக சமைக்கும் அனுபவமுள்ளவரின் உதவியை நாடுங்கள்.

* நல்ல உடல்நலத்துக்கு 40-க்கு மேற்பட்ட ஊட்டச்சத்துகள் அவசியம். எனவே உங்கள் உணவு தினமும் ஒரே வகையானதாகவோ, ஒரு வேளையில் ஒரே வகை உணவு மட்டுமோ இருக்கக்கூடாது. தினசரி உணவுடன் கூடுதலாக பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள், இறைச்சி, கோழி, மீன் மற்றும் பிற தானிய உணவுகள் இவற்றில் ஏதாவது ஒன்றிரண்டை கூடுதலாகச் சேர்த்துச் சாப்பிடுங்கள்.

* ஒரு குறிப்பிட்ட பகுதியில் பொதுவாகச் சாப்பிடப்படும் உணவு நமக்கு ஒத்துக்கொள்ளுமா என்று யோசித்தபிறகே சாப்பிட வேண்டும்.

* உங்கள் எடை சரியானதா என்பது பாலினம், உயரம், வயது மற்றும் பாரம்பரியம் உட்பட பல விஷயங்களை சார்ந்திருக்கிறது. உடல் எடை அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் பல வியாதிகள் ஏற்படும். சராசரியான உடல் எடையைப் பராமரிப்பதே உடல் நலத்துக்கும், உணவுப் பழக்கவழக்கத்துக்கும் நல்லது.

* உடல் ஆரோக்கியமாக இருக்க மிதமான அளவில் உணவு சாப்பிடுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். அளவாகச் சாப்பிடுவதுதான் சரியான நேரத்துக்குப் பசியைத் தூண்டும். உங்களுக்குப் பிடித்த உணவை கூடுதலாகச் சாப்பிடுவதும், மற்ற உணவுகளை தேவையைவிட குறைவாக எடுத்துக்கொள்வதும் உடலுக்குத் தீங்கு தரும். இது பசியின்மையையும், உணவின் மீது வெறுப்பையும் ஏற்படுத்தக்கூடும்.

* சிலருக்கு புதுப்புது உணவுகளை சுவைத்துப் பார்ப்பது பிடிக்கும். அடிக்கடி புதிய உணவுகளைச் சேர்த்தால் ஜீரண நேரம் மாறுபடுவதால் பசியெடுப்பதில் பிரச்சினைகள் வரலாம். வழக்கமான உணவுகளை சுழற்சி முறையில் சாப்பிடுவது எளிதான செரிமானத்துக்கு வழிவகுக்கும். வழக்கமான நேரத்திற்கு பசியையும் தூண்டும்.

* சேர்க்க வேண்டிய உணவுகளைச் சேர்ப்பதும், தவிர்க்க வேண்டிய உணவுகளைத் தவிர்ப்பதும் சிறப்பான உணவுப் பழக்கமாகும். உடல் நலத்தில் அக்கறை காட்டும் பலரும் அதிக ஊட்டச்சத்துள்ள உணவை விரும்பிச் சாப்பிடுகிறார்கள். ஒவ்வொருவர் உடலுக்கும் தேவையான சத்துக்கள் மாறுபடும். எனவே உணவு ஆலோசகரின் பரிந்துரைப்படி சத்தான உணவுகளைச் சேர்க்கவும், அவசியமற்ற நொறுக்குத் தீனி போன்ற உணவுகளைக் குறைக்கவும், தவிர்க்கவும் செய்யுங்கள்.

* எல்லா உணவுகளும் அவசியமானதும், சத்தானதும் அல்ல. ஒருமுறை கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை நீங்கள் உட்கொண்டால் மறுமுறை அந்த சத்துக்கள் குறைவாக உள்ள உணவை உண்ண வேண்டும். அதேபோல ஒரு சத்தான உணவை தவிர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் அடுத்த முறை அந்த உணவை அவசியம் சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் சாப்பிடும் உணவுகள் நீண்ட காலத்துக்கு உங்கள் ஆரோக்கியத்திற்கும் பக்க பலமாக இருக்க வேண்டுமல்லவா?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button