பெண்களுக்கு வயது அதிகரிக்கும்போது அதற்கேற்ற ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்

வயது அதிகரிக்கும்போது பெண்களுக்கு உடலில் பிரச்சினைகளும் அதிகரிக்கும். இதற்கு காரணம், உடலில் உள்ள சத்துக்களின் அளவு குறைவதுதான். ஆகவே வயது அதிகரிக்கும்போது அதற்கேற்ற ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதிலும் இறுதி மாதவிடாய் நெருங்க நெருங்க உடலின் செயல்பாடுகள் குறையும். 

ஹார்மோன் சமச்சீரின்மையால் உடல் பலமும் குறையும். இதனால் மூட்டு வலி, கால் வலி மற்றும் பல்வேறு உடல்நல பிரச்சினைகள் தோன்றும். இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்ள சரியான வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். பெண்களின் உடலுக்கு நலன் செய்யும் வைட்டமின்கள் பற்றி பார்ப்போம்!

வைட்டமின் பி-12

40 வயதான பெண்களுக்கு இன்றியமையாதது, வைட்டமின் பி-12. அதிலும் அறுவை சிகிச்சை நடந்திருந்த அல்லது இதயத்தில் பிரச்சினை இருந்தால் இச்சத்து மிகவும் முக்கியமானது. இறைச்சி மற்றும் முட்டையில் வைட்டமின் பி-12 அதிகம் உள்ளது.

வைட்டமின்- பி

இது மற்றொரு அவசியமான வைட்டமின். குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கு முக்கியமான வைட்டமினாகும். ஏனெனில் இவை தான் உடலுக்கு தேவைப்படும் சக்தியை கொடுக்கிறது. பசலைக்கீரை, சால்மன் மீன்கள், உருளைக்கிழங்கு மற்றும் பருப்பு வகைகளில் இருந்து இச்சத்துக்களைப் பெறலாம்.

வைட்டமின்- டி

தினமும் காலையில் 15 நிமிடம் சூரிய ஒளி உடலில் படுமாறு இருந்தால், அது உடலில் ஏற்படும் சோர்வை போக்கி விடும். அதுமட்டுமல்லாமல் சால்மன் மீன், பால், பால் வகை உணவுகளை அதிகமாக எடுத்துக்கொண்டால் உடலுக்கு தேவையான வைட்டமின்-டி கிடைத்து விடும். பெண்கள் குளுகுளு அறைக்குள்ளே வாழ்க்கையை நகர்த்தினால் அவர்கள் உடலில் வைட்டமின் டி பற்றாக் குறை உருவாகும். அதனால் காலை வெயில் சிறிது நேரம் உடலில்படட்டும்.

வைட்டமின் கியூ-10

இந்த வைட்டமின் 40 வயதைக் கடந்த பெண்களுக்கு அவசியம். இந்த சத்து மீன் மற்றும் நவதானியங்களில் உள்ளது.

இரும்புச்சத்து

இறுதி மாதவிடாய் காலங்களில் பெண்களின் உடலில் இரும்புச் சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் பல பெண்கள் ரத்தசோகைக்கு உள்ளாவார்கள். எனவே இந்த நிலையை தவிர்க்க, பெண்கள் கீரைகளையும், ப்ராக்கோலியையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வைட்டமின்- சி

இந்த சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டால், வயதான காலத்தில ஏற்படும் பார்வைக் கோளாறு பிரச்சினை ஏற்படாமல் தவிர்க்கலாம். ஆரஞ்சு பழத்தில் இந்த சத்து உள்ளது. ஆரஞ்சு பழச்சாறும் அடிக்கடி பருகலாம்.

வைட்டமின்- ஏ

இந்த சத்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கேரட் போன்றவற்றில் இது அதிகம் இருக்கிறது.

மக்னீசியம்

அவகேடோ மற்றும் வாழைப்பழத்தில் மக்னீசியம் சத்து அதிகம் உள்ளது. இந்த சத்துள்ள உணவை உட்கொண்டால், நரம்பு மண்டலமானது ஆரோக்கியமாக இயங்கும்.

ஜிங்க்

ஜிங்க் சத்து ஆண்களுக்குதான் மிக முக்கியமானது என்ற கருத்து நிலவுகிறது. இது பெண்களுக்கும் இன்றியமையாதது. காளான், பீன்ஸ் போன்றவற்றில் இந்த சத்து காணப்படுகிறது.

வைட்டமின்- ஈ

பருப்பு வகைகளிலும், ப்ராக்கோலியிலும் வைட்டமின் ஈ அளவுக்கு அதிகமாக இருப்பதால், வாரத்திற்கு ஒரு முறை பெண்கள் அவைகளை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். வயதாவதால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் பதற்றம் அதன் மூலம் குறையும்.

Leave a Reply