மருத்துவ குறிப்பு

பல் சொத்தை, பல் உடைதல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட சூப்பர் டிப்ஸ்!

பல் சொத்தை ஏற்படுவதற்கு முக்கியக் காரணம், இனிப்புகளை அதிகமாகச் சாப்பிடுவது. குறிப்பாக, பற்களில் ஒட்டக்கூடிய இனிப்பு மாவு, பிஸ்கட், மிட்டாய், சாக்லேட்டு, ஐஸ்கிரீம், கேக், பேக்கரிப் பண்டங்கள் போன்றவற்றில் உள்ள சர்க்கரைப் பொருள், பல் இடுக்குகளில் ஒட்டிக்கொள்ளும்போது, வாயில் உள்ள பாக்டீரியா இவற்றுடன் வினைபுரிந்து, லேக்டிக் அமிலத்தைச் சுரக்கின்றன. இந்த அமிலம் பல்லின் வெளிப்பூச்சான எனாமலை அரித்துச் சிதைக்கிறது. இதன் விளைவால் பற்கள் சொத்தையாகின்றன.

பற்களைச் சுத்தமாகப் பராமரிக்கத் தவறினாலும் பாக்டீரியா வளர்ந்து பல் சொத்தையை உண்டாக்கும். புகைப்பிடிப்பது, வெற்றிலைப் பாக்குப் போடுவது போன்றவற்றால் பற்களில் கரை படியும். இதில் பாக்டீரியா குஷியாக வாழும். இந்த நிலைமை நீடித்தால், பற்களில் சொத்தை விழும்.

சொத்தை பற்கள் சொத்தைப் பல்லை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால், எனாமலை அடுத்துள்ள டென்டைன் பகுதிக்கும் சொத்தை பரவிவிடும். அப்போது பற்களில் கறுப்புப் புள்ளி தெரியும். அங்கு குழி விழும். இந்த நிலைமையிலும் சிகிச்சை பெறாவிட்டால், பல் கூழ் மற்றும் வேர்களும் பழுதாகிவிடும். நாளடைவில் இந்த வேர்கள் வலுவிழந்து போகும். அப்போது பற்கள் ஆட்டம் கண்டு தாமாகவே விழுந்துவிடும்.

கூர்மையான பொருட்கள் பல் இடைவெளிகளில் உணவுத் துகள்கள் தங்கினாலும், குச்சி, குண்டூசி போன்றவற்றால் பல் குத்தினாலும், கிருமித் தொற்று ஏற்பட்டு ஈறுகள் வீங்கி வலிக்கும். பல் துலக்கும்போது இந்த ஈறுகளிலிருந்து ரத்தம் கசியும். வாய் நாற்றம் ஏற்படும். பல் ஆட்டம் கண்டு விரைவில் விழுந்துவிடும். ‘பயோரியா’ என்று இதற்குப் பெயர். பற்களிலிருந்து பாக்டீரியா இதயத்துக்குப் பரவினால், இதய வால்வில் பிரச்சினை வரும் என்பது உண்மைதான்.

பற்கள் மற்றும் ஈறுளைப் பாதுகாக்க…. பற்சுத்தம் மிக முக்கியம். காலையில் எழுந்ததும் ஒருமுறை, இரவு தூங்கச் செல்லும் முன்பு ஒருமுறை என இருமுறை பல் துலக்க வேண்டும். பல் கரை அதிகமிருந்தால், மருத்துவரைச் சந்தித்து ‘ஸ்கேலிங்’ முறையில் அதை அகற்றிவிடலாம். அதன் பின்பு ‘பிளீச்சிங்’ முறையில் பற்களைச் சுத்தம் செய்து இதைச் சரிப்படுத்திவிடலாம்.

சாப்பிட வேண்டியவை தினமும் ஒரு காரட் அல்லது ஒரு வெள்ளரி சாப்பிட்டால், பல் சுத்தமடைந்து ஆரோக்கியத்துடன் இருக்கும். பற்களில் ஒட்டும் தன்மையுள்ள சாக்லேட், மிட்டாய், பிஸ்கட், இனிப்பு மாவு, சூயிங்கம், ஐஸ்கிரீம் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட நேர்ந்தால், உடனே தண்ணீரால் வாயை நன்றாகக் கொப்பளித்துவிட வேண்டும்.

இதை செய்யாதீர்கள் குண்டூசி, குச்சி போன்றவற்றால் பல் ஈறுகளைக் குத்தி அழுக்கு எடுக்கக்கூடாது. நகம் கடிக்கக் கூடாது. குளிர்பானங்களை அதிகம் குடிக்கக்கூடாது. மது, புகையிலை, வெற்றிலை, பான்மசாலா போன்றவை பற்களுக்கு எதிரிகள்.

இது அவசியம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் ஆலோசனை பெறும் பழக்கம் இருந்தால், பல்லில் ஏற்படுகிற பல பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே தடுத்துவிட முடியும்.

பல் வேர் சிகிச்சை பலருக்கு பல் வலி அதிகமாகி, பல்லை அகற்றும் நிலை வரலாம். பல்லை அகற்றாமல், பல்வேர் சிகிச்சை ( ரூட் கனால்) முறையை செய்து குணப்படுத்தலாம். பல் ஈறுகளில் கரை படிதல், சுண்ணாம்பு போன்று கிருமிகள் தங்குவதால், ஈறுகள் வீக்கம் அடைந்து பல் வலி ஏற்படும். சில, நேரங்களில் ரத்தக்கசிவால் சீழ் வரலாம். இதற்கு சரியான சிகிச்சை எடுக்காவிட்டால், பல்லை தாங்கி நிற்கும் எலும்பைத் தாக்கி, கரைத்து விடும்.இதனால், பல் ஆட்டம் கொண்டு விழ வாய்ப்புள்ளது. இதைத் தடுக்க, ‘ஸ்கேலிங்’ என்ற நடைமுறையில் காரை, சுண்ணாம்பு போன்ற படியும் கிருமியும் அகற்றப்படுகிறது. ஈறு நோய் பாதிப்பு அதிகமாகி, பல் ஈறு கீழே இறங்கிவிட்டால், ‘பெரியடான்டல் பிளாப்’ எனும், அறுவை சிகிச்சை மூலம்,(எப்.எல்.ஏ.பி.,) சரி செய்ய முடியும். எலும்பு கரைந்து விட்டால், செயற்கை எலும்பு துகள்கள் கொண்டு, சரிப்படுத்த முடியும்.

செயற்கை பற்கள் பல்லை கழற்றி மாட்டிக் கொள்வது பழைய நடைமுறை. அருகில் உள்ள இரு பற்களின் துணையுடன், ‘பிக்ஸ்டு பிரிட்ஜ்’ முறையில் பல் கட்டுவது, இன்னொரு நடைமுறை. பல்லின் கலரிலேயே, ‘செராமிக்’ பற்களை கட்டிக் கொள்ளலாம். பல் இல்லாத பகுதியில், எலும்பில் துளை போட்டு, ‘டைட்டானியம் இன்பிளான்ட்’ முறையில், பல் கட்ட முடியும். இது, தற்போதுள்ள அதி நவீன முறை.

கீழே விழுந்த பல்லை ஒட்ட வைக்கலாமா? நிச்சயமாக முடியும். பல் விழுந்த அரை மணி நேரத்திற்குள், எச்சிலில் வைத்தோ, பாலில் போட்டோ, அருகில் உள்ள பல் டாக்டரிடம் செல்ல வேண்டும். அப்படிச் சென்றால், அதே பல்லைப் பொருத்தலாம். இதுபற்றிய விவரம் பலருக்கும் தெரிவதில்லை. பற்கள் முன், பின் வளைத்து, சரியான வரிசையில் இல்லாமல் இருப்பது உண்டு. இவர்கள், ‘கிளிப்’ போடுவதன் மூலம், பல் சீரமைப்பு செய்து அழகாக்க முடியும்.

பல் கூச்சம் பற்களின் நரம்புகளில் சூடாகவோ, குளிர்ச்சியாகவோ சாப்பிடும்போது, அது நரம்பில்பட்டு ‘ஷாக்’ அடித்தது போன்று வலி ஏற்படும். டாக்டரை ஆலோசித்து, அதற்கான பற்பசைகளை பயன்படுத்தினால், பல் கூச்சம் போய்விடும். பொதுவாக, அதிக சூடான, குளிர்ச்சியான உணவுகளை தவிர்ப்பது நல்லது.

பிறவி பல் பிரச்சனை? பிறக்கும் குழந்தைகளில் சிலருக்கு, மேல் அண்ணத்தில் ஓட்டை இருப்பது உண்டு. பால் கொடுக்கும்போது வயிற்றுக்கு போகாமல், ஓட்டை வழியாக நுரையீரலுக்குச் சென்று சிக்கலாகும்; உயிருக்கு ஆபத்தாக அமையும். இவர்களுக்காக, ‘பீடிங் பிளேட்’ உள்ளது. இதை பயன்படுத்துவதால், மேல் ஓட்டை மூடப்பட்டு, பால் குழந்தையின் வயிற்றுக்குச் செல்லும். ஒன்றரை ஆண்டு காலம் முடிந்ததும், குழந்தை நிபுணரை ஆலோசித்து, அறுவை சிகிச்சை செய்வது அவசியம்.

வாய் புற்றுநோய் மற்றும், பல் நோய் பல் உடைந்து, கூர்மையான பற்கள் சதைகளில் குத்தி ஏற்படும் காயத்தை, நீண்ட காலம் பொருட்படுத்தாமல் விட்டால், புற்றுநோயாக வாய்ப்புள்ளது. புகையிலை, குட்கா பழக்கத்தால் வாய் புற்றுநோய் வந்து, பல் மற்றும் தாடைகளை அறுவை சிச்சை செய்து, அகற்றும் சூழல் ஏற்படலாம். உயிருக்கு ஆபத்து என்பதால் புகை, குட்கா போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

தப்பிக்க வலி? தினமும் இரண்டு வேலைகளில், (காலை, இரவு) பல் துலக்க வேண்டும். இரவு சாப்பிட்டதும், பல் துலக்கிவிட்டு படுக்கும் பழக்கம் பலரிடம் இல்லை; பல் துலக்கிவிட்டு படுப்பது அவசியம். சாப்பிட்டவுடன், வாயை நன்கு தண்ணீரில் நன்றாக கொப்பளித்து, துப்ப வேண்டும். பல் துலக்கியதும், விரல்களால் ஈறுகளை மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.உணவில் கீரை, காய்கறி, பழங்களை சரிவிகிதமாக சேர்த்துக் கொண்டால், பல் சார்ந்த பிரச்னைகளில் இருந்து பெருமளவு தப்பலாம்.

ஆயில் புல்லிங் ஆயில் புல்லிங் என்பது தினமும் காலையில் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி, 10 நிமிடம் வாயினுள் வைத்து கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்வதால், வாயில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களும் வெளியேறி, வாயின் ஆரோக்கியம் மேம்படும். குறிப்பாக இப்படி தினமும் செய்து வந்தால், சொத்தைப் பற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

கிராம்பு 2-3 துளிகள் கிராம்பு எண்ணெயை 1/4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயுடன் கலந்து, காட்டனில் அந்த எண்ணெயை தொட்டு, இரவில் படுக்கும் போது அந்த காட்டானை சொத்தைப் பல் உள்ள இடத்தில் வைத்து தூங்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சொத்தைப் பற்கள் விரைவில் குணமாகும்,

பூண்டு 3-4 பற்கள் பூண்டை தட்டை, அதில் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து, அக்கலவையை பாதிக்கப்பட்ட பற்களின் மீது வைத்து 10 நிமிடம் கழித்து, அக்கலவையை சொத்தைப் பல்லின் மீது அழுத்தவும், இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், சொத்தைப் பற்களை உருவாக்கிய பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு, நாளடைவில் சொத்தைப் பற்களை போக்கிவிடும்.

மஞ்சள் மஞ்சள் தூளை பாதிக்கப்பட்ட பற்களில் தடவி 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இது சிறந்த கிருமிநாசினியாக செயல்பட்டு, கிருமிகளை அழித்துவிடும்.

15 1516035133 xcover 28 1498658738 jpg pagespeed ic 5zgmwhlkgi

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button