ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்கள் நாப்கின் இன்றி தங்களது மாதவிடாய்க் காலத்தைக் கடக்க வேண்டி உள்ளது

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி ஜர்மீனா இஸ்ரார் கான் டெல்லி உயர்நீதிமன்றத்தில் சானிட்டரி நாப்கின்களுக்கு 12 சதவீதம் வரி விதிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை வைத்துள்ளது. பொட்டு, கண் மை, குங்குமம் போன்ற அலங்காரப் பொருட்களுக்கு சரக்கு மற்றும் சேவைக் கட்டண வரியில் இருந்து விலக்கு அளித்திருக்கும்போது பெண்களின் அடிப்படை தேவையான சானிட்டரி நாப்கின்களுக்கு ஏன் விலக்கு அளிக்கக் கூடாது என விளக்கம் கேட்டுள்ளது உயர்நீதிமன்றம்.Periods pain 13012

மாதவிடாய் தருணம் எல்லாக் காலத்திலும் பெண் தன் உடலில் துயரத்தை சுமப்பது போன்ற அனுபவத்தையே தந்துள்ளது. சானிட்டரி நாப்கின்கள் புழக்கத்தில் வருவதற்கு முன்பு மாத விடாயின்போது பயன்படுத்திய துணியை பாதுகாப்பற்ற இடங்களில் வைத்துப் பயன்படுத்தியதால் பெண்கள் பிறப்புறுப்பில் தேள், பூரான் போன்ற விஷ  ஜந்துகள் கடித்து துன்புறும் அளவுக்கான அவஸ்தைகளை அனுபவித்தனர்.

விவசாய நிலங்கள், கட்டடங்கள் ஆகியவற்றில் வேலை செய்யும் பெண்கள் தங்கள் சேலையின் ஒரு பகுதியை மாதவிடாய் ரத்தம் சேகரிக்கப் பயன்படுத்தினர். காலை முதல் மாலை வரை வீடு, வேலையிடத்தில் இவ்விதம் பணியாற்றுவது மிகவும் கொடுமையானது. இன்று பெரும்பான்மைப் பெண்களின் வேலைக்களம் மாறியுள்ளது. ஆனால் மாதவிடாய்க் காலத் துயரங்கள் தொடர்கின்றன. பெண்கள் பணியாற்றும் இடங்களில் சானிட்டரி நாப்கின்களை முறையாக எரியூட்டி அப்புறப்படுத்தவும், தேவைப்படும் போது எளிதில் நாப்கின் பெற்றுக் கொள்ளவும் வழிவகைகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஒரு சில நிறுவனங்களில் மட்டுமே பெண்களின் மாதவிடாய்க் காலம் கணக்கில் கொள்ளப்பட்டு அதற்கான சிறப்பு வசதிகள் வேலையிடங்களில் செய்யப்பட்டுள்ளன. இன்னும் நாப்கின்களை செய்தித் தாளில் சுற்றி, கருப்பு கவர்களில் மறைத்து வாங்கிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் பெண்கள் உள்ளனர். இன்றளவும் இந்தியாவின் சாலை ஓரங்களிலும், நாப்கின்களே தெரியாத ஊர்களிலும் பெண்கள் வாழ்ந்து வருகின்றனர்.

நாப்கின் வாங்க வழியற்று எத்தனை பெண்கள் தங்களது மாதவிடாய் காலத்தை வலியுடன் கடக்கின்றனர் என்று நினைத்தால் மனம் நடுங்குகின்றது. உணவுக்கே வழியற்ற நிலையில் அந்தப் பெண்கள் சானிட்டரி நாப்கின்கள் பற்றிக் கனவு காண்பது கூட ஆடம்பரமாகவே உள்ளது. இவர்கள் அழுக்குத்துணிகள், செய்தித்தாள் போன்றவற்றையும் தங்களது மாதவிடாய்க் காலத்தில் பயன்படுத்துகின்றனர்.

துணி பயன்பாட்டுக்கு முன்னர் மணல் குவித்து அதில் மாதவிடாய் காலத்துப் பெண்ணை அமர வைத்துள்ளனர். இன்றளவும் வசதியற்ற பெண்கள் செய்தித் தாள்களில் மணலையும், சாம்பலையும் மடித்து மாதவிடாய்க் காலத்தில் பயன்படுத்துவதாக ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. நமது மவுனத்தின் பின்னால் இத்தனை வலிகள், வேதனைகள் உறைந்து கிடக்கின்றன.

ஒருபுறம் சானிட்டரி நாப்கின் மீதான வரி விதிப்பை எதிர்க்கையில், மறு புறம் சானிட்டரி நாப்கின்களில் உள்ள சுகாதாரப் பிரச்னைகளை ஆராய்ச்சி செய்து பெண்களுக்கு கருப்பை வாய்ப்புற்று நோய் போன்ற கொடிய நோய்களை உண்டுபண்ணாத சானிட்டரி நாப்கின்களை நாம் கண்டறிந்து பரவலாக்க வேண்டிய பொறுப்பில் உள்ளோம். தனியார் நிறுவனங்கள் விற்கும் சானிட்டரி நாப்கின்கள் தரமானவைதானா என்பதை அறிந்தே பயன்படுத்த வேண்டும்.

மீண்டும் பயன்படுத்தும் வகையிலான துணி பேட்களும் ஒரு சிலரால் முயற்சிக்கப்படுகின்றன. இந்த சிறிய முயற்சியின் பின்னால் நாம் ஆழ்ந்து சிந்தித்தோமானால் பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கின்கள் ஒரு புறம் மலையென வளர்ந்து வருகின்றது. ஏற்றுமதி ஆடை நிறுவனங்கள் மற்றும் தையல் நிறுவனங்களில் இருந்து வெட்டப்பட்ட துணி ரகங்கள் டன் கணக்கில் குப்பையில் கொட்டப்படுகின்றன.

இவ்வாறு கழிக்கப்படும் துணிகளில் காட்டன் துணித் துண்டுகளைத் தைத்து நாப்கின்களாக உருவாக்குவதன் வழியாக பல பெண்களின் வேதனைகளைத் தவிர்க்க முடியும். இது போல் தயாரிக்கும் நாப்கின்களை துவைத்தும் பயன்படுத்த வாய்ப்புள்ளதால் பெரிய செலவும் ஏற்படப் போவதில்லை. சாலையோரப் பெண்கள் மற்றும் நாப்கின் வாங்க வாய்ப்பற்ற நிலையில் உள்ள பெண்களுக்கும் இந்தக் காட்டன் பேட்கள் பேருதவியாய் மாறும். கைகளால் தைக்கத் தெரிந்த பெண்கள் கூட இது போன்ற மாற்றுக்களை உருவாக்க முடியும். காட்டன் வேஸ்ட் துணிகளை மட்டும் தையல் கடைகளில் தனியாக சேகரித்துப் பெற்று இது போன்ற முயற்சிகளை சாத்தியப்படுத்தலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button