ஆரோக்கிய உணவு

அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகளால் புற்றுநோய் அபாயம்

அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொண்டவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளால் புற்றுநோய் அபாயம்
அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு இருப்பதாக பிரெஞ்சு ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கேக்குகள், தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ரொட்டிகள் போன்றவற்றை, அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்று அவர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.

ஒரு லட்சத்து ஐந்தாயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில், அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொண்டவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக அவர்கள் கண்டறிந்தனர்.

தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ரொட்டிகள், பன்கள், மொறுமொறு நொறுக்குத் தீனிகள், இனிப்புப் பண்டங்கள் மற்றும் பிற தின்பண்டங்கள், சோடா மற்றும் குளிர்பானங்கள், இறைச்சி உருண்டைகள், உடனடி நூடுல்ஸ் மற்றும் சூப் வகைகள், குளிர்பதன வசதியில் சேமிக்கப்பட்ட இறைச்சி, சர்க்கரை, எண்ணெய் மற்றும் கொழுப்பில் செய்யப்பட்ட உணவுகள் ஆகியவை எல்லாம், அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகள் பட்டியலில் வருகின்றன.

இந்த ஆய்வு முடிவுகள் அச்சத்தைத் தந்தாலும், ஆரோக்கியமான உணவுமுறையால் புற்றுநோயை கூடியமட்டும் தவிர்க்கலாம் என்பது நிபுணர்களின் கருத்து.

புகையிலைப் பொருட்களை உட்கொள்ளும் பழக்கத்துக்கு அடுத்தபடியாக புற்றுநோய் வருவதற்கு இரண்டாவது முக்கிய காரணியாக, பதப் படுத்தப்பட்ட இறைச்சியை உண்பது உள்ளது. இது, புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை ஓரளவு அதிகரிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

பாரீசில் உள்ள சோர்போன் பாரிஸ் சைட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வில், நடுத்தர வயதில் உள்ள பெண்களின் உணவுமுறை ஐந்து ஆண்டு காலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.

பிரிட்டீஷ் மெடிக்கல் ஜர்னல் இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு முடிவுகளில், அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகள், குறிப்பிட்ட பெண்கள் உண்ணும் உணவுகளின் விகிதத்தில் 10 சதவீதம் அதிகரித்தது என்றும், அப்போது கண்டறியப்பட்ட புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை 12 சதவீதம் அதிகரித்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

சராசரியாக 18 சதவீத மக்கள் உட்கொண்ட உணவுகள் அதிக அளவு பதப்படுத்தப்பட்டிருந்தன. அவர்களில் சராசரியாக, ஆண்டொன்றுக்கு 10 ஆயிரம் பேரில் 79 பேருக்கு புற்றுநோய் வந்தது.

உட்கொள்ளும் உணவுகளில் அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை 10 சதவீதம் அதிகரித்தால், ஆண்டுக்கு 10 ஆயிரம் பேரில் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கையில் ஒன்பது கூடியது.

பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணும் வழக்கம் வேகமாக அதிகரித்துவரும் நிலையில், வரும் ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்பதாக ஆய்வாளர்களின் கணிப்பு உள்ளது.

அதேநேரம், இன்னும் பெரிய அளவில் ஆய்வு செய்யப்பட்டு இந்த முடிவுகளை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

“பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உண்பது உடல் பருமனுக்கு வழிவகுக்கும். உடல் பருமன், புற்றுநோயை உண்டாக்கும்” என்று கூறியுள்ள இங்கிலாந்தைச் சேர்ந்த புற்றுநோய் ஆராய்ச்சி நிபுணர் பேராசிரியர் லிண்டா பால்ட், “ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவதற்கான எச்சரிக்கை மணியாகவே இந்த ஆய்வு முடிவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்” என் கிறார்.

நார்விச்சில் உள்ள குவாட்ரம் இன்ஸ்டிட்யூட்டை சேர்ந்த அயான் ஜான்சன், இந்த ஆய்வுகள் சில வலுவற்ற தொடர்புகளையே முன்வைக்கின்றன என்று சொல்கிறார்.

அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்பதற்கான வரையறை தெளிவாக இல்லை என்பது அவர் கருத்து. எது எப்படியிருந்தாலும், பதப்படுத்தப்பட்ட உணவு விஷயத்தில் கொஞ்சம் கட்டுப்பாட்டோடு இருப்பதே நல்லது!201803030821584217 1 Cancerris. L styvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button