கறிகாய்களினுடைய சத்தோ உடலில் சிறிதும் சேரவில்லை. இது ஏன்?????? எப்படிச் சமைத்தால் உடலுக்கு நல்லது?

உடம்பில் நிறைய சத்து சேர வேண்டுமே என்றெண்ணி நான் நிறைய கீரைகள், வாழைப்பூ, கிழங்குகள், கறிகாய்கள் என்றெல்லாம் ஒரு வாரத்திற்கான பட்டியல் தயாரித்துச் சாப்பிட்டு வருகிறேன். இருந்தாலும் கீரையினுடைய சத்தோ, கறிகாய்களினுடைய சத்தோ உடலில் சிறிதும் சேரவில்லை. இது ஏன்??????

Preparing food, Canon 1Ds mark III

கறிகாய்களை கீரை, பூ, காய், தண்டு, கிழங்கு என பொதுவாக ஐந்து வகையில் பிரிக்கலாம். அவற்றில் கீரை எளிதாகவும், விரைவாகவும், ஜீரணம் ஆகக் கூடியது. அதை விட வரிசையாக பூவும், காயும், கீரைத் தண்டும், கிழங்கும் ஜீரணமாக தாமதமாகக் கூடியவை. உண்ட உணவு வயிற்றுக்குள் சென்றவுடன் நான்குவிதமாகப் பிரிகிறது. குடலில் நோய் விளைவிக்காமல் ஜீரணத்திற்கு உதவக் கூடியவையும், குடல் மலத்தை புளிக்கவிடாமல் அதிக கெட்ட வாடை ஏற்படாமல் வெளியேற்றக் கூடியவையுமான கிருமிகள் இயற்கையாகவே இருக்கின்றன. இவற்றினுடைய வளர்ச்சிக்கு நீங்கள் சாப்பிடும் உணவில் நான்கில் ஒரு பகுதி பயன்படுகிறது. இரண்டாவதாக ஜீரண சக்தியைத் தருகிற வயிற்று சூட்டிற்கு எரிபொருளாக ஊட்டம் தருவதாக ஆகிறது. மூன்றாவது பங்கு உணவின் சத்தாக மாறி உடல் தாதுக்களுக்கு உணவாகி அவைகளைப் போஷிக்கிறது. மீதியுள்ள பகுதி மலமாக மாறி மற்ற வெளியேற வேண்டிய மலப்பொருட்களைத் தாங்கி வெளியேறுகிறது.
இந்த நான்கு நிலைகளுக்கும் உதவக் கூடியவகையில் உணவுப் பொருளை சமைத்து தயாரிப்பதே பூரண உணவு. காய்கறிகள் இந்த நான்கு நிலைகளுக்கும் முழுவதுமாக உதவக்கூடியவையே. இருப்பினும் கீரையில் இயற்கையாக உள்ள ஜீரணக் கிருமிகளுக்கு உணவாவதிலும் மலத்தை உருண்டையாக்கி எளிதில் வெளியேறச் செய்வதிலும் உள்ள தன்மை அதிகம். மற்ற இருவகையான போஷணைகளுக்கு கீரை அதிகம் பயன்படுவதில்லை. அதனால் தனியாக பெருமளவு கறிகாய்களையோ கீரை வகைகளையோ உணவில் சேர்ப்பதை ஆயுர்வேத நூல்கள் வரவேற்கவில்லை.
கீரையின் சத்து உடலில் சேர அதை நன்கு அலம்பி நறுக்கி நன்றாக வேக வைத்துக் கடைந்து அதிலுள்ள வெந்த நீரை வடிகட்டி எண்ணெய்யை விட்டு வதக்கி மிளகு, உப்பு, பெருங்காயம், சுக்கு, இஞ்சி போன்றவற்றில் சிலவற்றையாவது சேர்த்து தாளித்து பின்னர் உட்கொள்வதே நல்லது. எண்ணெய் சேர்க்க முடியாத நிலையில் பயத்தம் பருப்பு, துவரம் பருப்பு இவற்றை வேக வைத்த நீரையோ அல்லது வெந்த பருப்பைக் கடைந்தோ சேர்த்துக் கொள்ளலாம். கீரையை அதிக அளவில் இரவில் சாப்பிடக்கூடாது என்பார்கள். அதற்கு காரணம் இரவின் குளிர்ச்சி மற்றும் தூக்கத்தால் மந்தமாகிப் போன ஜீரண சக்தியால் கீரை சரியானபடி செரிக்காமல் பூச்சிகளுக்கு குடலில் இடமளிக்கலாம் அல்லது பெருமலப்போக்கு ஏற்பட்டு வயிற்று உப்புசம் வயிறு இரைச்சல் போன்றவற்றிற்கு காரணமாகலாம். சிலர் கீரை வேக வைத்த தண்ணீரை வடிகட்டிவிட்டால் சத்து போய்விடுமே என்று அஞ்சுகின்றனர். ஆனால் இந்த நீரை வடிகட்டாமல் அப்படியே சமைத்தால் கீரை கனத்த உணவாக மாறிவிடும். அதனால் அதிலுள்ள சத்து அனைத்தும் உடலில் சேராமல் பெருமலமாகி வெளியேறிவிடும். ஜீரண சக்தியையும் அது பாதித்துவிடும். சுருக்கமாகச் சொன்னால் குடலின் உறிஞ்சக்கூடிய சக்தியைப் பொருத்தே, உடலில் சத்து சேருவதும் வீணாகி வெளியாவதும் ஏற்படுகின்றன. அதனால் நீங்கள் சத்து சத்து என்று ஒன்றையும் வீணடிக்காமல் பச்சையாகவும், தோலுடனும், வேகாமலும், வெந்துள்ள தண்ணீரை அகற்றாமலும் சாப்பிட்டு வயிற்றை குப்பைத் தொட்டியாக மாற்றிவிட்டதாகத் தோன்றுகிறது.
ஆயுர்வேதம் கீழ்காணும் வகையில் கறிகாய்களைப் பற்றிய ஒரு விவரத்தை எடுத்துரைக்கிறது. கீரை, கறிகாய்களை பொடிப் பொடியாக நறுக்குவாய், தண்ணீர் சேர்த்து வேக வைப்பாய், பிழிந்து நீரை அகற்றி எண்ணெய் சேர்த்து கடுகு, பெருங்காயம், மிளகு, சுக்கு, புளிப்பு மாதுளை ஆகியவை சேர்த்து மறுபடி சுண்ட வைப்பாய், இது கேடு விளைவிக்காது. வயிற்றில் மல அடைசலை ஏற்படுத்தாது சுவையூட்டும்.
கிழங்கு, காய் முதலிய காய்கறிகளை நன்றாக வேக வைத்து சமைப்பது நல்லது. அதிலும் கீரையை மிக நன்றாக வேக வைப்பதே செரிமானத்திற்கு உதவும். கறிகாய்கள் அனைத்துமே குளிர்ச்சி தருபவை. மலத்தையும், சிறுநீரையும் அதிக அளவில் வெளியாக்குபவை. குடலை அடைத்துக் கொண்டு தாமதமாகச் செரிக்கக் கூடியவை. அதனால் வாக்படர் எனும் முனிவர் கூறும் ஒரு சிறந்த அறிவுரை என்னவென்றால், இவை அனைத்தையும் வேக வைத்து அதிலுள்ள நீரைப் பிழிந்துவிட்டு எண்ணெய் சேர்த்து பக்குவப்படுத்தியது அதிகம் கேடு விளைவிக்காது என்பதே.

Leave a Reply