ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

கறுப்பு நிற உள்ளாடை அணிந்தால் அறிவியல் ஆதாரம் இல்லாத பயமுறுத்தல்…..

”இன்றைக்கு அறிவியல் தொடர்பான தகவல்கள் பலருக்கும் தெரிந்துள்ளது. ஆனால், அவற்றில் எது சரி, எத்தனை சதவிகிதம் சரி என்கிற துல்லியமான தகவல்களைத் தெரிந்துவைத்திருப்பதில்லை. மேம்போக்காக சொல்லிவிட்டுப் போகிறார்கள். அதனால்தான், இதுபோன்ற ஆதாரமில்லாத விஷயங்கள் பரவுகின்றன. இதைப் படிப்பவர்கள் தானும் பயந்து, மற்றவர்களுக்கும் ஃபார்வேர்ட் செய்து பயமுறுத்திவிடுகிறார்கள். இந்த வதந்திகள் உருவாகக் காரணமான விஷயங்களை ஆராய்ந்து பார்த்தால் புரியும்.

1 1
Woman with a pink breast cancer awareness ribbon

முதல் வதந்தி, கறுப்பு நிற பிரா அணிந்தால், மார்பக புற்றுநோய் வரும் என்பது. இது உருவான பின்னணியைக் கொஞ்சம் யோசியுங்கள். கறுப்பு நிறத்துக்குச் சூரிய ஒளியில் இருக்கும் யு.வி.கதிர்களை இழுக்கும் தன்மை உண்டு. இன்னொரு விஷயம், வெயிலில் அதிக நேரம் நின்றால் ஸ்கின் கேன்சர் வரலாம் என்கிறது மருத்துவம். இவை இரண்டையும் இணைத்து, மார்பக புற்றுநோய் வந்துவிடும் என்று பரப்பியிருக்கிறார்கள். கறுப்பு நிற ஆடை அணிந்தாலே மார்பக புற்றுநோய் வரும் என்றால், இத்தனை காலங்களில் எத்தனையோ பேருக்கு கேன்சர் வந்திருக்க வேண்டும். அதனால், வெயில் காலங்களில் கறுப்பு நிற உள்ளாடை அணிந்தால், பிரெஸ்ட் கேன்சர் வரும் என்பதில் மருத்துவ உண்மை முற்றிலும் கிடையாது.

அடுத்த வதந்தி, அண்டர்வயர் பிரா போட்டால் மார்பக புற்றுநோய் வரலாம் என்பது. இந்த வதந்தி உருவான பின்னணி இதுதான். நம் உடம்பின் ஒரு பகுதியில் ஏதோ ஒரு பொருள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துகொண்டே இருந்தால், அங்கிருக்கும் செல்களின் பிரிதலில் மாற்றங்கள் நிகழும். அதனால், அந்த இடத்தில் கேன்சர் வர வாய்ப்புள்ளது. இந்த அடிப்படையில்தான் அண்டர்வயர் பிராவால், மார்பக கேன்சர் வரும் என்று பரப்பி இருக்கிறார்கள். ஆனால், அண்டர்வயர் பிராவால் புற்றுநோய் வரும் அளவுக்கு ஆபத்து கிடையாது. தொடர்ந்து அணிந்தால், அது அழுத்தும் இடத்தில் ரேஷஸ் வருவதற்கு ஒரு வாய்ப்பு உண்டு. ஒருவேளை இந்த வதந்தி உங்களைப் பயமுறுத்தினால், அண்டர்வயர் பிரா அணிவதைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

 

மூன்றாவது வதந்தி, இறுக்கமான பிரா அணிந்தால், கேன்சர் வரும் என்பது. இது முற்றிலும் தவறு. இறுக்கமான பிரா அணிவதால், மார்பகங்களில் வலி வரும் என்பது மட்டுமே உண்மை. ஆண்களும் இறுக்கமான ஜட்டி அணிந்தால், உறுப்பில் வலி வரும். சில நேரங்களில் வீக்கம் ஏற்படும். இதற்குக் காரணம், தொடர்ந்து ஓர் உறுப்பை ஆடை அழுத்துவதால் ஏற்படும் எஃபெக்ட். இதனால், நிச்சயம் கேன்சர் வராது. எனவே, இதுபோன்ற தகவல்களைப் படித்து அநாவசியமாகப் பயப்படாதீர்கள். சம்பந்தபட்ட மருத்துவர் அல்லது நிபுணர்களிடம் விளக்கம் பெறுங்கள். நிம்மதியாக இருங்கள்” என்கிறார் டாக்டர் கங்காதரன்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button