உங்களுக்கு தெரியுமா நீங்கள் போதுமான அளவு காய்கறிகளை சாப்பிடுவதில்லை என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்!

ஒருவரது உணவில் காய்கறிகள் எப்போதும் முக்கிய பங்கை வகிக்கும். அம்மாவின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் வரை, நாம் உண்ணும் உணவில் போதுமான காய்கறிகள் இருக்கும். ஆனால் வெளியே வேலைக்கு என்று வரும் போது, நாம் சாப்பிடும் காய்கறிகளின் அளவு குறைந்து, ஜங்க் உணவுகளை அதிகம் சாப்பிட ஆரம்பிப்போம். இதனால் நாம் சாப்பிடும் காய்கறிகளின் அளவு குறைந்துவிடும். இப்படி உட்கொள்ளும் காய்கறிகளின் அளவு குறைந்து, வறுத்த உணவுகள், புரோட்டீன் உணவுகள், பாஸ்தா போன்றவற்றை சாப்பிடுவதால், உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் கிடைக்காமல், உடல் ஆரோக்கியம் பலவாறு பாதிக்கப்பட ஆரம்பிக்கும்.

ஒருவர் காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்து வந்தால், அவர்களுக்கு சில நாள்பட்ட நோய்களின் அபாயம் குறையும். அதுவும் நாள்பட்ட நோய்களான இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் குறிப்பிட்ட வகையான புற்றுநோய்கள் போன்றவற்றின் அபாயம் தடுக்கப்படும். அதிலும் காய்கறிகளில் இருந்து பெறப்படும் டயட்டரி நார்ச்சத்து, இரத்த கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுவதோடு, இரத்தத்தில் ஃபோலிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். ஒருவர் ஒரு நாளைக்கு 5 முதல் 13 வரையான பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும் என USDA கூறுகிறது. அதாவது ஒரு நாளைக்கு 2 1/2 முதல் 6 1/2 கப் காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதன் மூலம், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும்.

இப்போது ஒருவர் போதுமான அளவு காய்கறிகளை சாப்பிடுவதில்லை என்பதை காட்டும் சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

எளிதில் காயங்கள் ஏற்படும் ஒருவரது உடலில் குறைவான அளவில் வைட்டமின் சி இருந்தால், அவர்களுக்கு எளிதில் காயங்கள் ஏற்படும். ஈறுகளில் இரத்தக்கசிவு, உடல் பலவீனம், சோர்வு, அரிப்பு மற்றும் காயங்கள் மற்றும் வெட்டுக்காயங்கள் குணமாவது தாமதமாகும். உங்களுக்கு இப்பிரச்சனை இருந்தால், வைட்டமின் சி நிறைந்த குடைமிளகாய், கேல், கீரைகள், ப்ராக்கோலி, தக்காளி போன்றவற்றை அதிகம் சாப்பிடுங்கள்.

இதய பிரச்சனைகள் உங்களுக்கு இதய பிரச்சனை இருப்பது பரிசோதனையில் தெரிந்தால், நீங்கள் உங்கள் டயட்டில் காய்கறிகளை போதுமான அளவில் சேர்ப்பதில்லை என்ற அர்த்தம். கரோனரி இதய நோய்களான மாரடைப்பு மற்றும் வேகமாக இதயத் துடிப்பு போன்றவற்றால் அவஸ்தைப்படக்கூடும். யாரெல்லாம் காய்கறிகளை குறைவான அளவில் சேர்த்துக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு இதய நோய் விரைவில் வரும் அபாயம் உள்ளது.

எந்நேரமும் களைப்பை உணர்வது நீங்கள் எந்நேரமும் களைப்பை உணர்ந்தால், உங்கள் உடலில் ஃபோலேட் அல்லது ஃபோலிக் அமிலம் குறைவாக உள்ளது என்று அர்த்தம். ஃபோலேட் குறைபாடு களைப்பு மற்றும் இரத்த சோகையை உண்டாக்கும். ஃபோலேட் டிஎன்ஏ சேர்க்கை மற்றும் சரிசெய்வதில் முக்கிய பங்கை வகிக்கிறது. ஃபோலேட் அல்லது ஃபோலிக் ஆசிட் என்பவை வைட்டமின் பி9 ஆகும். இது பச்சை இலைக் காய்கறிகள், காராமணி, அஸ்பாரகஸ், பருப்பு வகைகள், பசலைக்கீரை போன்றவற்றில் அதிகம் இருக்கும்.

ஞாபக மறதி அனைத்து வயதினருக்கும் ஞாபக மறதி வரும். ஆனால் உங்களால் சிறு விஷயங்களைக் கூட சரியாக நினைவு வைத்துக் கொள்ள முடியாவிட்டால், அவர்களது உடலில் போதுமான ஊட்டச்சத்து இல்லை என்று அர்த்தம். லுடீன் என்னும் சத்து தான் நினைவாற்றல் மற்றும் கற்கும் திறனை அதிகரிக்கும். இந்த சத்து கேரட், பச்சை இலைக் காய்கறிகள், ப்ராக்கோலி, சோளம், தக்காளி போன்றவற்றில் அதிகம் இருக்கும். மேலும் இந்த சத்து கண் புரை மற்றும் மாகுலர் திசு சிதைவு போன்ற கண் பிரச்சனைகளைத் தடுக்க உதவும்.

சளி விரைவில் குணமாகாமல் இருப்பது ஒருவரது டயட்டில் காய்கறிகள் மிகவும் குறைவாக சேர்க்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் திறன் குறையும். அதாவது நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையிழந்து இருக்கும். இந்நிலையில் இவர்கள் பச்சை இலைக் காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டியது அவசியம். இவைகளில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும், இரும்புச்சத்தும் வளமான அளவில் உள்ளது.

மன அழுத்தத்தை சமாளிக்க முடியாமல் இருப்பது குறிப்பிட்ட சில உணவுகள் மன அழுத்த அளவைப் பாதிக்கும். அதிலும் ஜங்க் உணவுகளை உட்கொண்டால், உடலினுள் அழற்சியின் அளவு அதிகரிப்பதோடு, மன அழுத்ததும் குறையாமல் பெரும் அவஸ்தைக்கு உள்ளாக நேரிடும். இந்நிலையில் சால்மன், டூனா, குடைமிளகாய், தக்காளி, ஆலிவ் ஆயில், பச்சை இலைக் காய்கறிகள், நட்ஸ், பழங்களான ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, செர்ரி மற்றும் ஆரஞ்சு போன்றவற்றை சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

உடல் பருமன் காய்கறிகளில் டயட்டரி நார்ச்சத்துக்கள் ஏராளமான அளவில் இருக்கும். காய்கறிகளை அதிகம் சாப்பிட்டால், வயிறு நிறைந்து, அடிக்கடி பசி எடுப்பது தடுக்கப்படும். பெரும்பாலான காய்கறிகளில் கலோரிகள் மிகவும் குறைவு, ஆனால் இதர அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களோ ஏராளம். ஆகவே காய்கறிகளை அதிகம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிப்பதைத் தடுத்து, உடல் எடையை கட்டுப்பாட்டில் பராமரிக்கலாம்.

தசைப் பிடிப்புக்களால் கஷ்டப்படுவது காய்கறிகளில் உள்ள பொட்டாசியம், அடிக்கடி ஏற்படும் தசைப் பிடிப்புக்களைத் தடுக்கும். குறிப்பாக உடற்பயிற்சி செய்த பின் தசைப் பிடிப்பு ஏற்படாமல் தடுக்கும். பொட்டாசியம் தசைகளில் ஏற்படும் பிடிப்புக்கள் மற்றும் வயிற்று உப்புசத்தைத் தடுக்க உதவும் அத்தியாவசிய சத்தாகும். மேலும் பொட்டாசியம், உயர் இரத்த அழுத்தம், இதயம் மற்றும் சிறுநீரக பிரச்சனைகள், மனக்கவலை மற்றும் மன அழுத்தத்தையும் தடுக்கும். அதோடு, இது தசைகளை வலிமைப்படுத்தவும், மெட்டபாலிசத்தை மேம்படுத்தவும் உதவும். இத்தகைய பொட்டாசியம் பசலைக்கீரை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, ப்ராக்கோலி, உருளைக்கிழங்குகள், கேல், காளான், பூசணிக்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

செரிமான பிரச்சனைகள் செரிமான பிரச்சனைகள் மற்றும் வயிற்று உப்புசத்தால் ஒருவர் அதிகம் அடிக்கடி அவஸ்தைப்பட்டு வந்தால், அவர்கள் போதுமான அளவு காய்கறிகளை சாப்பிடுவதில்லை என்று அர்த்தம். காய்கறிகளில் உள்ள நார்ச்சத்து செரிமான செயல்பாட்டிற்கு உதவி, முறையான குடலியக்கத்தைப் பராமரிக்க உதவும்.

அடிக்கடி நோய்த்தொற்றுகள் ஒருவரது உடலில் அடிக்கடி நோய்த்தொற்றுகள் ஏற்பட்டால், அது பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலத்தின் அறிகுறி மற்றும் போதுமான அளவு காய்கறிகளை உட்கொள்வதில்லை என்றும் அர்த்தம். முறையான ஊட்டச்சத்து உடலில் இல்லாவிட்டால், நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகி, உடல் தீங்கு விளைவிக்கும் கிருமிகளின் தாக்குதலுக்கு அதிகம் உட்படும். ஆகவே நீங்கள் அடிக்கடி நோய்த்தொற்றுக்களால் அவஸ்தைப்பட்டு வந்தால், காய்கறிகள் மற்றும் பழங்களை டயட்டில் அதிகம் சேர்த்து வாருங்கள். இதனால் நிச்சயம் விரைவில் ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

Leave a Reply