உங்களுக்கு தெரியுமா நீங்க விடும் மூச்சைக் கொண்டே உங்க நோய்களை குணப்படுத்தலாம்!

நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் எனும் பஞ்ச பூதங்கள் நாம் வாழும் இந்த உலகின் ஆற்றலாக, இயக்கமாக எங்கும் பரவி இருக்கிறது. இதில் நமது உடல் என்பதும் பஞ்ச பூதங்களின் கலவையே. உடம்பில் ஏற்படும் பாதிப்புகளை, தானே சரிசெய்து கொள்ளும் வண்ணம், உடல் அமைப்பின் ஆற்றல் அமைந்திருக்கும். நமது சுவாசத்தில் உட்செல்லும் காற்றிலும், உண்ட உணவினால் உடலில் ஏற்படும் திரவ சக்திகள் மூலமும், உடலில் தோன்றும் பாதிப்புகள் யாவும் நீங்கிவிடும். உடலுக்கு தேவையான இயக்கத்தை அளித்து, உடல் உறுப்புகளுக்கு வலுவூட்டி, சரியான உணவுகளை உட்கொள்வதன் மூலம், உள் உறுப்புகளுக்கு ஆற்றலை அளித்து, உடலை, உயிர் வாழும் காலம் வரை, பாதுகாத்து வருவது, அவசியம்.

ஆயினும், அப்படியா இருக்கிறது, தற்கால வாழ்க்கை முறைகள் எல்லாம்? உடலுக்கு நன்மை தருவன என்று தேடித்தேடி வாங்கிய காய்கறிகள், பழங்கள், கீரைகள் எல்லாம் இன்று குறைந்துபோய், கண்ணில் கிடைக்கும் பொருட்களை எல்லாம், வாங்கிப் பயன்படுத்தி வருகிறோம். செயற்கை உரங்கள் இல்லாத காய்கறிகள் இன்று எங்கும் இல்லை, செயற்கை நச்சுக்கள் இல்லாத உணவுகள் எங்கும் இல்லை, அனைத்திலும் கலந்திருக்கும் கெடுதல் உப்புக்கள், உடலுக்கு மிகப் பெரிய பாதிப்புகளை உண்டாக்குகின்றன. விளைவுகள்?, எல்லா வயதினரும் இன்று பரவலாக, ஏதாவது ஒரு வகையில் உடல் நலக்குறைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் மக்கள் தொகை, அதனால் உணவின் தேவைகளும், அதிகரிப்பதால், பேராசை, பெரும் பொருளீட்ட வேண்டும் என்ற எண்ணத்தில், விளைச்சலை அதிகரிக்க, செயற்கை உப்புக்கள், தாதுக்களை இட்டு வளர்க்கப்படும் பயிர்களால், இத்தகைய உடல் நல பாதிப்புகள் இன்று அனைவருக்கும் பொதுவாகி விட்டது.

1. நோய்கள் : இதனால், பல்வேறு வியாதிகள், உலகில் தோன்றுகின்றன. அவற்றை அழித்து ஒழிக்க முடியாமல், நவீன மருத்துவமும், திணறி வருகிறது. இதுபோன்ற உடல் நல பாதிப்புகள் வரும் சமயத்தில்தான், நமக்கு, பாரம்பரிய மருத்துவத்தின் மேல் உள்ள ஈடுபாடு அதிகரித்து, எப்படியேனும் நமது மருத்துவ முறைகளைக் கடைபிடித்து, வியாதிகள் தரும் பாதிப்பில் இருந்து, மீண்டு விட வேண்டும் என்ற எண்ணம் வலுவாகிறது, ஆயினும், மூலிகைகளை சேகரித்து, அவற்றை முறையாக எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை இருப்பதால், எந்த வித மருந்தும் எடுத்துக் கொள்ளாமல், உடல் நலனை சீராக்கும் வாய்ப்புகள் உள்ள மாற்று முறைகளை எதிர்நோக்குகின்றனர்.

2. பிராணிக் சிகிச்சை : அப்படி அவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது தான், இன்று நாடெங்கிலும் பரவலாக தோன்றிக் கொண்டிருக்கும் பிராணிக் சிகிச்சை முறைகள். எந்த வித மருந்துகளின்றி, கைகளின் மூலம், உடலைத் தொடாமல் அளிக்கும் சிகிச்சையாக உருவெடுத்திருப்பதால், இந்த சிகிச்சைக்கு மக்களிடையே ஒரு ஈர்ப்பு ஏற்படுவது, இயற்கையே.

3. சித்தர்களின் ஆதி மருத்துவம் : நமது பண்டைச் சித்தர்கள், மனிதர்களின் உடல் மன பாதிப்புகளைக் களைய அக்காலங்களில், வெறும் பார்வையினாலும், பிராண ஆற்றலை அவர்களின் கைகளின் வழியே, உடல் நலம் பாதிக்கப்பட்ட பாகங்களில் செலுத்தியும், மக்களின் வியாதிகளை குணமாக்கி வந்தார்கள். இந்தக் கலையே, நம் நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி, பின்னர் அங்கிருந்து, பிராணிக் ஹீலிங் என்ற பெயரில், பிலிப்பைன்ஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறி, மீண்டும் நம்மிடம் வந்திருக்கிறது.

4. பிராணிக் ஹீலிங் : நாம் சுவாசிக்கும் மூச்சே, நமக்கு உயிர்வாழத் தேவையான ஆக்சிஜன் எனும் பிராண வாயுவை உடலுக்கு அளித்து, உடல் சீராக இயங்க வழிவகை செய்கிறது, என்பதை நாம் அறிந்திருப்போம். உடலில் பிராண வாயு நிரம்பி உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது, உடலைச்சுற்றி, ஒரு ஒளிவட்டம் தோன்றி, வியாதிகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது என்கிறது, இந்த பிராணிக் ஹீலிங் சிகிச்சை முறை.

5. வியாதிகள் நீக்கம் : உடலில் ஏதாவது பாதிப்பினால், வியாதிகள் உருவாகும் நிலை ஏற்படும் போது, இந்த ஒளிவட்டம் பாதிப்படைகிறது. அப்போது, நம்மைத் தொடாமல், அவர்களின் பிராண சக்தியைப் பயன்படுத்தி, பாதிப்புகளை நீக்கி, இந்த ஒளிவட்டத்தை, சீரடைய வைப்பார்கள். இதன்மூலம், உடலின் ஒளிவட்டம் மீண்டும் முழுமையடையும்போது, உடலில் ஏற்பட்ட வியாதிகளின் பாதிப்புகள் யாவும் விலகுகிறது.

6. தீராத வியாதிகளும் குணமாகும் : இந்த பிராணிக் ஹீலிங் சிகிச்சைகளின் மூலம், நாள்பட்ட இதய வியாதி, இரத்த அழுத்தம், சர்க்கரை பாதிப்பு, மன நிலை பாதிப்பு, புற்று வியாதிகள் மற்றும் சுவாசக் கோளாறுகளையும் எளிதாக குணப்படுத்த முடியும் என்கிறார்கள். மேலும் நாள்பட்ட வியாதிகள் உள்ளவர்கள், எந்த விதமான பக்க விளைவுகளும் இன்றி, எக்ஸ்பிரஸ் வேகத்தில், குணமடையலாமாம்.

7. எப்படி செய்யப்படுகிறது? நம்முடைய உடல், தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் கொண்டது தானே, அதுதான், இந்த சிகிச்சை முறையின் சூட்சுமம். மூச்சிலே, இருக்குது வாழ்க்கை எனும் முன்னோர் வாக்குக்கேற்ப, மூச்சில் உள்ள பிராண வாயுவை, உயிர் ஆற்றல் சக்தியாக மாற்றி, அதன் மூலம், உடல் நலம் பாதிக்கப்பட்டோரின் உடலுக்கு இந்த ஆற்றலை, செலுத்துவதன் மூலம், அவர்களின் பாதிப்புகளை விரைவில் தீர்க்க முடியும் என்கிறார்கள். இதன் மூலம், தற்கால மருத்துவத்தால், கைவிடப்பட்ட மோசமான வியாதிகள் உள்ளவர்களையும், விரைவில் குணமாக்க முடியும் என்கிறார்கள் பிராணிக் நிபுணர்கள்.. உடலில், வியாதிகள் தோன்றிய இடத்திற்கு நேரே, தங்கள் கைகளை நீட்டிக் கொண்டு, தியானம் மூலம், தங்கள் ஆற்றலை, மற்றவர்களின் பாதிப்பு உள்ள இடத்தில் செலுத்தி, விரைவாக, குணமடைய வைக்கிறார்கள்.

8. நமக்கு நாமே, செய்துகொள்ளலாம் : மூச்சை கவனித்து,. முறையாக சுவாசித்து வர, உயிர் சக்தி மேம்படும், தியானத்தின் மூலம், உயிர் ஆற்றலை நம்மில் உணர முடியும். இந்த நிலையில், நமக்கு ஏற்பட்ட பாதிப்புகளை நாமே, களைந்துவிட முடியும். உடலில் பாதிப்புகள் ஏற்படுத்திய வியாதியை, நமது சுவாசத்தின் வழியே, நாம் வெளியேற்றுவது போல, எண்ணிக் கொண்டு சிறிது நேரம் அமர்ந்திருந்தால் போதும். மனம் முழுவதும், நேர்மறை எண்ணங்களின் மூலம், நல்ல சிந்தனையில், மனம் ஒன்றி, பாதிப்புகள் தந்து வந்த வியாதியை, உடலில் இருந்து வெளியேற்றுவது போல, உறுதியுடன் மனக் கண்ணில் கண்டு வர, வெகு விரைவில், அவை உடலில் இருந்து அகன்று விடும். இதன்மூலம், உடலில் புத்துணர்வையும் ஒரு அமைதியையும், நாம் உடனடியாக உணர முடியும்.

9. மற்றுவர்களுக்கும் அளிக்கலாம் : இந்த முறையில் பயிற்சி பெற்றவுடன், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இவர்களின் பாதிப்பை கேட்டறிந்து, பாதிப்பு உள்ள இடத்தில், நம் உள்ளங்கைகளை நீட்டிக் கொண்டு, அதன் வழியே வெளிப்படும் நமது உயிராற்றல் சக்தியானது, பாதிப்புகளை, அவர்களின் மூச்சின் மூலம் வெளியேற்றுவதாக, உறுதியுடன் எண்ணி வர வேண்டும். அவ்வளவு தான், ஒரு வாரத்தில், அவர்களின் நெடு நாள் பாதிப்புகள் நீங்கி, நலமுடன் நல்ல பயனை அடைவார்கள்.

10. அனுபவம் உள்ளவர்களால் மட்டுமே : பிராணிக் ஹீலிங்கில் அதிக அனுபவம் உள்ளவர்கள், உடல்நல பாதிப்புக்குள்ளானவர்களை கண்டே, அவர்களின் உடலில் எங்கு பாதிப்பு என்பதை, ஒளிவட்டத்தைக் கண்டே அறிந்து, அதன் மூலம், அவர்களின் வியாதிகளைக் குணப்படுத்தி விடுவார்கள்.

11. நேர்மறை எண்ணங்கள் : நேர்மறை எண்ணங்கள், பிறர்க்கு இறங்கும் மனநிலை, ஆழமான நம்பிக்கை ஆகிய உயர்வான ஒழுக்கங்களே, ஒருவரை எப்போதும், முகப் பொலிவுடனும், புத்துணர்வுடனும் உயிராற்றல் மிக்கவர்களாகத் தோன்ற வைக்கின்றன. இதை, நாம் உறுதியுடன் கடைபிடித்து வந்தாலே, உடல் நலமும், மன நலமும் ஒருங்கே சீரடையப் பெற்று, ஒளிவட்டத்தின் ஜுவாலையோடு, நலமுடன் வாழலாம்.

Leave a Reply