ஆரோக்கிய உணவுஆரோக்கியம்

உடல்பருமனில் இருந்து விடுபட்டு, உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க… எடை குறைப்பு உணவு 30 வகைகளை இங்கே

குறைந்த கலோரிகள்கொண்ட உணவு வகைகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். உடல்பருமனில் இருந்து விடுபட்டு, உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க…

சிறுதானிய பிரெட் சாண்ட்விச்

தேவையானவை: சிறுதானிய பிரெட் ஸ்லைஸ்கள் – தேவையான அளவு, வெங்காயம் – ஒன்று (துருவவும்), முளைகட்டிய பச்சைப் பயறு – அரை கப், தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை (சேர்த்து) –  ஒரு கைப்பிடியளவு,  பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லித்தழை, தோல் சீவிய இஞ்சி சேர்த்து அரைத்த விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்,  மிளகு – சீரகத்தூள் – கால் டீஸ்பூன், இந்துப்பு – கால் டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் – கால் டீஸ்பூன்.

3 1

செய்முறை: முளைகட்டிய பயறுடன் தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழை, வெங்காயம், இந்துப்பு, மிளகு – சீரகத்தூள், ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து பிரெட் ஸ்லைஸ்களை டோஸ்ட் செய்து எடுக்கவும். அதன்மீது அரைத்த விழுதைத் தடவவும். பிறகு, சிறிதளவு பயறு கலவையைப் பரப்பி மேலே மற்றொரு பிரெட் ஸ்லைஸ் வைத்து மூடி, மீண்டும் தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் டோஸ்ட் செய்து எடுக்கவும். இதை பிரெட் டோஸ்டரிலும் செய்யலாம்.

பயன்: காலை உணவாக உண்ணும்போது அன்றைய நாள் முழுவதற்கும் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.

புதினா – கொத்தமல்லி மணப்பாகு

தேவையானவை: புதினா, கொத்தமல்லித்தழை –  தலா ஒரு கட்டு (ஆய்ந்து எடுக்கவும்), துருவிய வெல்லம் – ஒரு கப், தோல் சீவிய இஞ்சி – ஒரு இஞ்ச் துண்டு, எலுமிச்சைப்பழம் – 2 (சாறு பிழியவும்), இந்துப்பு – கால் டீஸ்பூன்.

 

4

செய்முறை: புதினா, கொத்தமல்லித்தழையுடன் இஞ்சி சேர்த்து தண்ணீர்விட்டு நைஸாக அரைத்து வடிகட்டவும். வெல்லத்துடன் அரை கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். வெல்லம் கரைந்த பின் வடிகட்டிய சாறு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். அதனுடன் இந்துப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்து சேகரிக்கவும். இதை வாரம் ஒரு முறை தயார் செய்து பயன்படுத்தலாம்.

பயன்: தினமும் காலை வெறும் வயிற்றில்  2 டேபிள்ஸ்பூன் மணப்பாகுடன் முக்கால் டம்ளர் வெந்நீர் சேர்த்துக் கலந்து குடித்துவர… ஊளை சதை குறையும்.

டயட் ஸ்பெஷல் தால் வித் ரொட்டி

தேவையானவை: சிறுதானிய ரெடி மிக்ஸ் (சாமை, வரகு, குதிரைவாலி கலந்த மாவு), கோதுமை மாவு – தலா ஒரு கப், இந்துப்பு – தேவையான அளவு.

தால் செய்ய:  கொள்ளு – ஒரு கப், தோலுரித்த சின்ன வெங்காயம் – 10, தக்காளி, பச்சை மிளகாய் – தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்), சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், எலுமிச்சைப்பழம் – ஒன்று (சாறு பிழியவும்), புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

5

தாளிக்க: கடுகு, சீரகம், எண்ணெய் – சிறிதளவு.

செய்முறை: கொள்ளுப் பயறை எட்டு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, குக்கரில் ஊறவைத்த கொள்ளுடன் சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, சாம்பார் பொடி, 2 கப் தண்ணீர் சேர்த்து 4 விசில் விட்டு இறக்கவும். ஆறியதும் உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துச் சேர்க்கவும். மாவு வகைகளுடன் இந்துப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். மாவைச் சிறிய உருண்டைகளாக்கித் திரட்டவும். தோசைக்கல்லைக் காயவைத்து ரொட்டிகளைப் போட்டு, எண்ணெய்விடாமல் இருபுறமும் சுட்டு எடுக்கவும். ரொட்டிகளுடன் தால் சேர்த்துப் பரிமாறவும்.

பயன்: இடுப்புப் பகுதி சதை குறையும். தேவையற்ற கொழுப்புகள் நீங்கும்.

பூண்டு கஞ்சி

தேவையானவை: பூண்டு – 10-15 பல் (தோலுரிக்கவும்), வறுத்து, உடைத்த புழுங்கல் அரிசி – ஒரு கப், சீரகம், மிளகு – தலா கால் டீஸ்பூன் (உடைக்கவும்), வெந்தயக்கீரை – ஒரு கைப்பிடி அளவு, இந்துப்பு – தேவையான அளவு, மோர் – ஒரு கப், தண்ணீர் – 4 கப்.

6

செய்முறை: உடைத்த புழுங்கல் அரிசி, பூண்டு, மிளகு, சீரகம், இந்துப்பு, வெந்தயக்கீரை, தண்ணீர் ஆகியவற்றை குக்கரில் சேர்த்து, மூடி 4 விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் நன்கு மசித்து, மோர் சேர்த்து அருந்தலாம்.

பயன்: மதிய உணவாகச் சாப்பிடலாம். கொழுப்பைக் குறைக்கும். ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.

தானிய பிரட்டல்

தேவையானவை: முளைகட்டிய தானியக் கலவை (பச்சைப் பயறு, கொள்ளு, காராமணி)  – ஒரு கப், பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் அல்லது வெள்ளரி – ஒரு கப், தோல் சீவிய துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், பூண்டு – 5 பல், சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், கடுகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, ஆலிவ் எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

7

செய்முறை: குக்கரில் தானியங்களுடன் முட்டைகோஸ் அல்லது வெள்ளரி துண்டுகள், பூண்டு, இஞ்சித் துருவல், சாம்பார் பொடி, உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து மூடி 3 முதல் 5 விசில் விட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து வேகவைத்த கலவையுடன் சேர்க்கவும்.

பயன்: உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, தேவையற்ற கொழுப்பைக் கரைக்க உதவும்.

எடை குறைப்பு சாலட்

தேவையானவை: ஆவியில் வேகவைத்த பூசணி, கேரட், பறங்கிக்காய், வெள்ளரிக் கலவை – ஒரு கப், சீரகத்தூள், மிளகுத்தூள் – தலா கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்,  இந்துப்பு – சிறிதளவு.

செய்முறை: வேகவைத்த  காய்கறிகளுடன் சீரகத்தூள், மிளகுத்தூள், இந்துப்பு, புதினா, கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.

8

பயன்: தினமும் இதை ஒரு கப் அளவு காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம். எடையைக் குறைக்க மிகவும் உதவும்.

கொள்ளு கஷாயம்

தேவையானவை: கொள்ளு – ஒரு கப், சீரகம் – ஒரு டேபிள்ஸ்பூன், இந்துப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் கொள்ளு, சீரகத்தைத் தனித்தனியாக  வறுத்து எடுக்கவும்.  ஆறிய பிறகு மிக்ஸியில் பொடியாக அரைக்கவும். ஒரு கப் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் இந்தப் பொடியைச் சேர்த்துக் கொதிக்கவைத்துப் பருகலாம் (தேவைப்பட்டால் மட்டும் இந்துப்பு சேர்க்கவும்).

9

பயன்: வயிற்றுப் பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பு நீங்கி, சதை குறையும். காலை, மாலை என இருவேளையும் குடிக்கலாம் (மாதவிடாய் நேரங்களில் பருக வேண்டாம்).

வெந்தய – மல்லி பானம்

தேவையானவை: வெந்தயம், சுக்கு, மல்லி (தனியா) – தலா 100 கிராம், கொம்பு மஞ்சள் (விரலி மஞ்சள்) – 50 கிராம், சீரகம் – 100 கிராம், பட்டை –  50 கிராம், எலுமிச்சைப்பழம் – ஒன்று (சாறு பிழியவும்).

செய்முறை: வெறும் வாணலியில் வெந்தயம், சுக்கு, மல்லி (தனியா), மஞ்சள், சீரகம், பட்டை ஆகியவற்றைத் தனித்தனியாக வாசம் வரும் வரை வறுத்து எடுக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் பவுடராக அரைத்து எடுக்கவும். 200 மில்லி தண்ணீரில் ஒரு டீஸ்பூன் இந்தப் பொடியைச் சேர்த்து 100 மில்லியாகக் குறையும் வரை கொதிக்கவைத்து இறக்கி வடிகட்டவும். அதனுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்து, காலை வேளையில் பருகலாம் (தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்கவும்).

10

பயன்: உணவு உண்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு குடிக்கலாம். நாம் சாப்பிடும் உணவில் உள்ள அதிக கலோரிகளை எரிக்கவும். கொழுப்பைக் குறைக்கவும் உதவும்.

வெண்பூசணி கேரட் சாலட்

தேவையானவை:  வெண்பூசணித் துருவல் – ஒரு கப், வெள்ளை மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், கேரட் துருவல் – கால் கப், இந்துப்பு – கால் டீஸ்பூன், எலுமிச்சைப்பழம் – அரை மூடி (சாறு பிழியவும்).

செய்முறை: பூசணித் துருவலுடன், கேரட் துருவல், மிளகுத்தூள், இந்துப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

11

பயன்: தேவையற்ற கொழுப்பு கரையும். உடலில், ரத்தத்தில் உள்ள நச்சுகள் சிறுநீரகம் மூலம் வெளியேறு வதால் இந்த சாலட் சாப்பிட்டால் உடல் லேசானதுபோல உணரலாம்.

ஆளி விதை பொடி ஜூஸ்

தேவையானவை:  வறுத்துப் பொடித்த ஆளிவிதை – ஒரு டீஸ்பூன், கடைந்த மோர் – அரை கப், தோலுடன் அரைத்த வெள்ளரிக்காய் சாறு – அரை கப், சீரகத்தூள், இந்துப்பு – தலா கால் டீஸ்பூன்.

செய்முறை: மோருடன் வெள்ளரிச்சாறு, ஆளிவிதைப் பொடி, சீரகத்தூள், இந்துப்பு சேர்த்துக் கலந்து பருகலாம்.

12

பயன்: உடலைச் சோர்வடையாமல் பாதுகாக்கும். தேவையற்ற கொழுப்பைக் கரைப்பதுடன், உடலின் எடையைக் சீராக ஒரே அளவில் குறைக்க உதவும்.

வாழைத்தண்டு மோர் பச்சடி

தேவையானவை: பொடியாக நறுக்கிய இளம்வாழைத்தண்டு – ஒரு கப், பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கவும்), காய்ந்த மிளகாய் – தலா ஒன்று, சீரகத்தூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு, தோலுரித்த சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கவும்), கடைந்த தயிர் – ஒரு கப், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் – தலா கால் டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் – 2 டீஸ்பூன்.

13

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு வாழைத்தண்டு, உப்பு, சீரகத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து, மூடி போட்டு வேகவிட்டு இறக்கவும். ஆறிய பிறகு மோர் சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

பயன்: கொழுப்பைக் கரைக்கும். சிறுநீரகச் செயல்பாட்டுக்கும் நல்லது.

திரிபலா பானம்

தேவையானவை: திரிபலா பொடி (நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்), தேன் – தலா  ஒரு டீஸ்பூன்,  முட்டைகோஸ் சாறு  – ஒரு கப்.

செய்முறை: முட்டைகோஸ் சாற்றுடன் திரிபலா பொடி, தேன் சேர்த்துக் கலந்து பருகவும். தினமும் இந்தப் பானத்தை காலை வேளையில் அல்லது  11 மணி அளவில் குடித்து வரலாம்.

14

பயன்: இதை அருந்தி வந்தால், உடல் எடை சரசரவென குறைவது நன்றாகத் தெரியும். ஒரு கப் முட்டைகோஸில் வெறும் 14 கலோரிகள்தான் உள்ளன.  திரிபலா ஒரு காயகல்பமாகும்.  இது உள்ளுறுப்பு இயக்கத்தைச் சீர்செய்யவும் உதவும்.

முழு பயறு வெள்ளரி சாலட்

தேவையானவை: முளைக்கட்டிய கொள்ளு (அ) காராமணி, பச்சைப் பயறு – தலா கால் கப், பொடியாக நறுக்கிய வெள்ளரித் துண்டுகள் – கால் கப், கேரட் துருவல், வெங்காயத் துருவல் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு – சீரகத்தூள் – கால் டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், ஆரிகானோ – சிறிதளவு, புதினா, கொத்தமல்லித்தழை – தலா ஒரு கைப்பிடி அளவு, இந்துப்பு – தேவையான அளவு.

15

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்துக் கலந்து உடனே பரிமாறவும்.

பயன்: உடலின் தேவையற்ற கொழுப்பைக் கரைக்கவும், முக வசீகரத்துக்கும் உதவும். நச்சுகள் உடலிலிருந்து வெளியேறவும் உதவும்.

பைனாப்பிள் டயட் சூப்

தேவையானவை: அன்னாசிப்பழத் துண்டுகள் – ஒரு கப், ஓமம், சீரகம் – தலா 10 கிராம்.

செய்முறை: முதல் நாள் இரவே அன்னாசிப்பழத் துண்டுகளுடன் ஓமம், சீரகம் சேர்த்து மூடி வைக்கவும். மறுநாள் அரைத்து வடிகட்டி பருகவும்.

16

பயன்: தொப்பைக் குறையும்.  நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும். ரத்தச் சுத்திகரிப்புக்கு உதவும்.

புரோக்கோலி சூப்

தேவையானவை:  நறுக்கிய புரோக்கோலித் துண்டுகள் – ஒரு கப், பூண்டு –  8-10 பல், தோல் சீவி, துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் – ஒரு டேபிள்ஸ்பூன், அரிசி கழுவிய நீர் – 4 கப், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா கலவை – ஒரு கைப்பிடி அளவு, வெள்ளை மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், சீரகத்தூள் – அரை டீஸ்பூன், ஆரிகானோ அல்லது காய்ந்த துளசி இலை – ஒரு டீஸ்பூன், எலுமிச்சைப்பழம் – அரை மூடி (சாறு பிழியவும்), மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், தோலுரித்த சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கவும்), பட்டை – கிராம்புத்தூள் – கால் டீஸ்பூன், சிறுதானிய மாவு – ஒரு டீஸ்பூன், இந்துப்பு – கால் டீஸ்பூன்.

17

செய்முறை: குக்கரில் புரோக்கோலியுடன் பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா, வெங்காயத்தாள், வெங்காயம், 2 கப் அரிசி கழுவிய தண்ணீர், இந்துப்பு சேர்த்து மூடி 3 விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் இதை அரைத்து மீதமுள்ள 2 கப் அரிசி கழுவிய தண்ணீர், மஞ்சள்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், ஆரிகானோ, பட்டை – கிராம்புத்தூள்,  சிறுதானிய மாவு சேர்த்துக் கரைத்து 10 நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கவும். எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்துச் சூடாகப் பருகவும். டயட்டில் இருப்பவர்கள் காலை உணவுக்குப் பதிலாக இந்த சூப் பருகலாம். விருப்பப்பட்டால், இதனுடன் பிரவுன் பிரெட் சாண்ட்விச் சேர்த்துக்கொள்ளலாம்.

பயன்: எடையைக் குறைக்கவும், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் உதவும்.

டயட் தேநீர்

தேவையானவை: பட்டை – 100 கிராம், மல்லி (தனியா) – 50 கிராம், சுக்கு – 30 கிராம், கிராம்பு – 20 கிராம், எலுமிச்சைப்பழம் – அரை மூடி (சாறு பிழியவும்), தேன் – ஒரு டீஸ்பூன், தண்ணீர் – 100 மில்லி.

செய்முறை: வெறும் வாணலியில் பட்டை, தனியா, சுக்கு, கிராம்பு ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்துப் பொடிக்கவும். இதைக் காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். தண்ணீரைச் சூடாக்கி, ஒரு டீஸ்பூன் அரைத்த பொடி சேர்த்து நன்றாகக் கொதிக்கவைத்து இறக்கி வடிகட்டவும். அதனுடன் எலுமிச்சைச் சாறு,  தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரவும்.

18

பயன்: கொழுப்பைக் கரைக்கும். உடல் எடை குறைய உதவும். இந்தத் தேநீர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே அருந்தவும்.

சுரைக்காய் சாரம்

தேவையானவை:  சுரைக்காய்த் துண்டுகள் – ஒரு கப், தக்காளி – 2 (பொடியாக நறுக்கவும்), தோலுரித்த சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கவும்), கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு, புதினா, கறிவேப்பிலை (சேர்த்து) – ஒரு கைப்பிடி அளவு, ஆலிவ் எண்ணெய் – ஒரு டீஸ்பூன், இந்துப்பு – தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன்.

19

செய்முறை: குக்கரில் சுரைக்காய், தக்காளி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, புதினா, கறிவேப்பிலை, இந்துப்பு சேர்த்து, அரை கப் தண்ணீர்விட்டு மூடி 2 விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். வாணலியில் ஆலிவ் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் தாளித்து அரைத்த விழுதுடன் கலக்கவும். இதைச் சிறுதானியச் சாதத்துடன் சாப்பிடலாம்.

பயன்: சுரைக்காயில் உள்ள நீர்ச்சத்து, கனிமச்சத்து, உயிர் சத்துகள் அனைத்தும் உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்கும்.

முள்ளங்கி பராத்தா

தேவையானவை: முள்ளங்கித் துருவல் – ஒரு கப், கோதுமை மாவு – 2 கப், சீரகம், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் – தலா கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:  முள்ளங்கித் துருவலுடன் சீரகம், உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கோதுமை மாவு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். மாவைச் சிறிய உருண்டைகளாக்கி, பராத்தாக்களாக திரட்டவும். தோசைக்கல்லை காயவைத்து பராத்தாக்களைப் போட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். சூடாகச் சாப்பிட்டால், அருமையாக இருக்கும். சைட் டிஷ் தேவையில்லை. விரும்பினால் தயிர்ப் பச்சடி சேர்த்துப் பரிமாறலாம்.

20

பயன்: முள்ளங்கி எடை குறைப்புக் கேற்ற சிறந்த உணவாகும். ஒரு வேளைக்கு இரண்டு பராத்தாக்கள் மட்டுமே சாப்பிடவும்.

முருங்கைக்கீரை தண்ணீர் சாறு

தேவையானவை: முருங்கைக்கீரை – ஒரு கப், சின்ன வெங்காயம் – 12 (தோலுரித்து நறுக்கவும்), தக்காளி – 2 (பொடியாக நறுக்கவும்), மிளகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன், பூண்டு – 5 பல், அரிசி கழுவிய தண்ணீர் – 2 கப், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: குக்கரில் முருங்கைக்கீரையுடன் சின்ன வெங்காயம், தக்காளி, சீரகம், மிளகு, பூண்டு, உப்பு, தண்ணீர் சேர்த்து மூடி 3 விசில்விட்டு இறக்கவும். ஆறிய பிறகு மசிக்கவும். இதை வடிகட்டாமல் அப்படியே எடுத்துக்கொள்ளலாம். காலை அல்லது மதிய உணவாகப் பருகலாம்.

21

பயன்:  தினசரி அல்லது வாரத்தில் 3 முதல் 4 நாள்கள் பருகினால் தொப்பைக் குறையும். இது, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவும். தைராய்டு ஹார்மோன்களைச் சமன் செய்யும். எடைக்குறைப்பின்போது ஏற்படும் சோர்வைத் தடுக்கும்.

கேரட் டயட் ஜூஸ்

தேவையானவை: கேரட் – 2 (துண்டுகளாக்கவும்), எலுமிச்சைப்பழம் – அரை மூடி அல்லது ஆரஞ்சுப்பழம் – ஒன்று (சாறு பிழியவும்), புதினா – ஒரு கைப்பிடி அளவு.

செய்முறை: கேரட் துண்டுகளுடன் புதினா, தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும். அதனுடன் எலுமிச்சைச் சாறு அல்லது ஆரஞ்சு சாறு சேர்த்துக் கலந்து பருகலாம். இனிப்பு சேர்க்கத் தேவையில்லை.

22

பயன்: ரத்தச் சுத்திகரிப்புக்கு உடவும்.  வயிற்றுப் பகுதியில் உள்ள சதை குறையும். கொழுப்பைக் கரைக்கும். முடிந்தவரை ஜூஸ் வகைகளை வடிகட்டாமல் அப்படியே பருகினால், நார்ச்சத்து மிகுந்து விரைவான பலனளிக்கும்.

வெங்காயத்தாள் இஞ்சி துவையல்

தேவையானவை: நறுக்கிய வெங்காயத்தாள் – ஒரு கப், தோல் சீவிய இஞ்சி – ஒரு இஞ்ச் துண்டு, தோலுரித்த சின்ன வெங்காயம் – 5-8, பச்சை மிளகாய் – 2, புளி – கோலி குண்டு அளவு,  கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயத்தாள், இஞ்சி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், புளி ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் போட்டு உப்பு, தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, அரைத்து வைத்த துவையலுடன் கலக்கவும். இதை பிரவுன் பிரெட்டுக்குத் தொட்டுக்கொள்ளலாம். சிறுதானியச் சாதத்துடன் சாப்பிடலாம்.

23

பயன்: இது, டயட் கன்ட்ரோலுக்குச் சிறந்த உணவாக அமையும்.

மாதுளை டயட் ஜூஸ்

தேவையானவை: மாதுளை முத்துகள் – ஒரு கப், வெள்ளை மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், தேன் – அரை டீஸ்பூன், எலுமிச்சைப்பழம் – அரை மூடி (சாறு பிழியவும்), தண்ணீர் – தேவையான அளவு.

செய்முறை: மாதுளம்பழத்துடன் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும். அதனுடன் எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள், தேன் சேர்த்துப் பருகலாம்.

24

பயன்: டயட்டில் இருப்பவர்கள் காலை 11 மணியளவில் அல்லது மாலை 4 மணி அளவில் பருகலாம். இது, பித்தத்தைக் குறைக்கும். மலச்சிக்கலைத் தீர்க்கும். மாதவிடாய் கோளாறுகளைச் சரிசெய்யும்.

தர்பூசணி டயட் ஜூஸ் அண்ட் சாலட்

தேவையானவை: தர்பூசணி சிவப்புப் பகுதி –  ஒரு பெரிய துண்டு, தர்பூசணியின் வெள்ளைப் பகுதி ஒரு துண்டு, சீரகத்தூள் – கால் டீஸ்பூன், வெள்ளை மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், பட்டைத்தூள் – கால் டீஸ்பூன், இந்துப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: சிவப்புத் துண்டுடன் சீரகத்தூள், இந்துப்பு, பட்டைத்தூள், மிளகுத்தூள் சேர்த்து அரைத்து வடிகட்டாமல் பருகலாம் (விரும்பினால் நாட்டுச் சர்க்கரை ஒரு டீஸ்பூன் சேர்க்கலாம்).
தர்பூசணியின் வெள்ளைப் பகுதியை ஆவியில் வேக வைத்து எடுக்கவும். அதன் மீது சீரகத்தூள், இந்துப்பு, பட்டைத்தூள், மிளகுத்தூள் தூவி சாப்பிடலாம். காலை உணவாக இந்த சாலட் மற்றும் ஜூஸ் சாப்பிட்டு வரலாம்.

25

பயன்: உடல் எடை நன்றாகக் குறையும். சோர்வை நீக்கி  புத்துணர்ச்சி தரும். `கெட்ட கொழுப்பு’ நீக்கும். காயங்கள், புண்கள் விரைவில் ஆறும். உடல் சூடு தணியும். எளிதில் செரிமானமாகும். தர்பூசணி நீர் சத்து அதிகம் உள்ள பழமாகும்.

வெயிட் லாஸ் பவுடர்

தேவையானவை: தனியா (மல்லி), சோம்பு – தலா 2 டேபிள்ஸ்பூன், சீரகம் – ஒரு டேபிள்ஸ்பூன், பட்டை – 10 துண்டுகள், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், கொள்ளு, ஆளிவிதை – தலா ஒரு டேபிள்ஸ்பூன், கல் உப்பு – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:  வெறும் வாணலியில் தனியா, சோம்பு, சீரகம், வெந்தயம், பட்டை, கொள்ளு, ஆளிவிதை ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். அதனுடன்  உப்பு சேர்த்து பவுடராக அரைக்கவும். ஒரு கப் தண்ணீருடன் அரைத்த பொடி ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கி வடிகட்டவும். தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு 2 மாதங்கள் தினமும் குடித்து வர… எடை குறைப்பில் நல்ல வித்தியாசத்தை உணர முடியும்.

26

பயன்: முறையாக டயட் மேற்கொள்ள முடியாத சூழ்நிலையில், இந்த வெயிட் லாஸ் பவுடர் உறுதுணைபுரியும்.

சிறுதானிய கஞ்சி

தேவையானவை: சிவப்பரிசி, குதிரைவாலி அரிசி (சேர்த்து) – ஒரு கப், கொள்ளு – அரை கப், பூண்டு – 7 பல், சீரகம் – 2 டீஸ்பூன், மிளகு – கால் டீஸ்பூன், எலுமிச்சைப்பழம் – அரை மூடி (சாறு பிழியவும்), உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சிவப்பரிசி, குதிரைவாலி, கொள்ளு, பூண்டு, மிளகு, சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து, வறுத்துப் பொடிக்கவும். 250 மில்லி தண்ணீரில் அரைத்த பொடி 2 டீஸ்பூன் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு வெந்ததும் எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்துக் கலந்து மிதமான சூட்டில் அருந்தவும்.

27

பயன்: அதிகப்படியான கொழுப்பை எரித்துக் கரைத்துவிடும். மூட்டுவலி, கால்வலி குறையும். எலும்பு வலுபெறும். காய்ச்சல் நேரத்திலும் கபம் இருக்கும்போதும் இதைச் சாப்பிடலாம்.

பசலைக்கீரை சூப்

தேவையானவை: பசலைக்கீரை – ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்), மிளகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன், தோல் சீவி, துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், பாசிப்பருப்பு – ஒரு டீஸ்பூன், தோலுரித்த சின்ன வெங்காயம் – 5 (பொடியாக நறுக்கவும்), தக்காளி –  ஒன்று (பொடியாக நறுக்கவும்), தண்ணீர் அல்லது அரிசி களைந்த தண்ணீர் – 2 கப், பூண்டு – 5 பல், உப்பு – தேவையான அளவு.

28

செய்முறை: குக்கரில் கீரையுடன் பாசிப்பருப்பு, மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி,  வெங்காயம், தக்காளி , தண்ணீர் சேர்த்து மூடி, 3 விசில்விட்டு இறக்கவும். ஆறிய பிறகு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து  எடுத்துப் பருகவும்.

பயன்: இந்த சூப்பில் இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது.  பருமனான உடல் உள்ளவர்கள் இளைக்க துணைபுரியும்.

கிரேப்ஸ் ஹெர்பல் ஜூஸ்

தேவையானவை: விதையுள்ள நாட்டு திராட்சை – ஒரு கப், சீரகத்தூள், மிளகுத்தூள், ஓமம் – தலா கால் டீஸ்பூன்.

செய்முறை:  கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, வடிகட்டாமல் பருகவும்.

29

பயன்: குடற்புண், கல்லீரல் கோளாறுகளைச் சரிசெய்யும். குழந்தைப் பிறப்புக்குப் பிறகு அதிகரிக்கும் எடையைக் குறைக்கும்.

எடை குறைப்பு சூப்

தேவையானவை: கொள்ளு – ஒரு டீஸ்பூன், பார்லி – ஒரு டீஸ்பூன், சீரகத்தூள், மிளகுத்தூள் – தலா கால் டீஸ்பூன், வெண்பூசணித் துண்டுகள் – கால் கப், வெள்ளரிக்காய்த் துண்டுகள் – கால் கப், ஏதேனும் ஒருவகை கீரை – ஒரு கைப்பிடி அளவு, சுரைக்காய்த் துண்டுகள் – கால் கப், எலுமிச்சைப்பழம் – அரை மூடி (சாறு பிழியவும்), அரிசி கழுவிய தண்ணீர் – 2 கப், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: குக்கரில் கொள்ளு, பார்லியை எண்ணெய்விடாமல் வறுக்கவும். பிறகு, அதனுடன் வெண்பூசணி, வெள்ளரிக்காய், சுரைக்காய், கீரை, அரிசி கழுவிய தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி, 5 விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்து சூடாகப் பருகவும்.

30

பயன்: எடை குறைப்புக்கு இந்த சூப் முழு பலனளிக்கும். இடுப்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதி சதையைக் குறைக்கும்.

அவல் – காய்கறி  கிச்சடி

தேவையானவை: அவல் – ஒரு கப், வெங்காயம் –  ஒன்று (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் – 2 (நீளவாக்கில் நறுக்கவும்), நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி கலவை – ஒரு கப், புதினா, கொத்தமல்லித்தழை – தலா ஒரு கைப்பிடி அளவு, எலுமிச்சைப்பழம் – ஒன்று (சாறு பிழியவும்), மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: எண்ணெய் – சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன்.

31

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள்தூள், காய்கறி கலவை, தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.  பிறகு அவல், உப்பு  சேர்த்து நன்றாகக் கிளறி, மூடி போட்டு 5 நிமிடங்கள்  வேகவைக்கவும். இறுதியாக கொத்தமல்லித்தழை, புதினா, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும். டயட்டில் இருப்பவர்கள் காலை அல்லது மதிய உணவாக எடுத்துக்கொள்ளலாம்.

பயன்: இது `பேலன்ஸ்டு டயட்’டாக அமைவதுடன், தேவையான புத்துணர்ச்சியுடன் இருக்கவும் உதவும்.

பார்லி – காய்கறி சூப்

தேவையானவை: பார்லி – அரை கப், பொடியாக நறுக்கிய (கேரட், பீன்ஸ், வெள்ளரிக்காய், பூசணி) காய்கறிக் கலவை – ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் – ஒரு கைப்பிடி அளவு, புதினா, கொத்தமல்லித்தழை (சேர்த்து) – ஒரு கைப்பிடி அளவு , மிளகு – சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், அரிசி கழுவிய தண்ணீர் – 4 கப்,  உப்பு – தேவையான அளவு, எலுமிச்சைப்பழம் – அரை மூடி (சாறு பிழியவும்).

செய்முறை: பார்லியை வெறும் வாணலியில் வறுத்து உடைக்கவும். குக்கரில் பார்லியுடன் காய்கறிக் கலவை, வெங்காயத்தாள், புதினா, கொத்தமல்லித்தழை, அரிசி கழுவிய தண்ணீர் சேர்த்து மூடி, 4 விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் மிளகு – சீரகத்தூள், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துச் சூடாக அருந்தவும்.

32

பயன்: ஊளை சதை குறையும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button