ஆரோக்கிய உணவு

கொய்யாவை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா? அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

கொய்யாப்பழம் நம்மூர்களில் மிகவும் சர்வ சாதரணமாக கிடைத்திடும் ஓர் பழமாக இருக்கிறது. ஒவ்வொரு பழத்தின் நிறத்திற்கு ஏற்ப அவற்றின் குண நலன்கள் மாறுபடும் ஏனென்றால் பழத்தில் இருக்கக்கூடிய தாதுக்கள், சத்துக்கள்,ஃபைட்டோ கெமிக்கல்களினால் தான் பழத்தின் நிறம் வேறுபடுகிறது.

கொய்யாவில் மிகவும் சுவையுடையது என்றால் சிகப்பு கொய்யாவைச் சொல்லலாம். குறைவான கலோரி,அதிக நார்ச்சத்து கொண்டது இந்த கொய்யாப்பழம். உலகின் பல்வேறு நாடுகளில் இந்த கொய்யாப்பழம் கிடைக்கிறது. இந்த சிகப்பு கொய்யாவில் இருக்கக்கூடிய சிறப்பம்சங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.

கரோடினாய்டு : கரோடினாய்டு என்பது ஒரு வகை ஆண்ட்டி ஆக்ஸிடண்ட். இது பழங்கள் மற்றும் காய்கறிகளில் தான் அதிகமிருக்கும். ஆரஞ்சுப்பழம்,கொய்யாப்பழம் , கேரட்,சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றில் இந்த கரோடினாய்டு அதிகமிருக்கிறது. இதைத் தான் நாம் விட்டமின் ஏ என்றும் சொல்கிறோம். ஆரோக்கியமான சருமத்திற்கும் கண்பார்வைக்கும் விட்டமின் ஏ மிகவும் அவசியமான ஒன்றாகும்.

விட்டமின் சி : பலவிதமான பழங்களில் விட்டமின் சி இருக்கிறது அவற்றை விட கொய்யாப்பழம் ஒரு படி மேலேயே சென்றிருக்கிறது. எப்படித் தெரியுமா? ஒரு கொய்யாவிலிருந்து நமக்கு 209 சதவீதம் விட்டமின் சி கிடைக்கும். செல்களின் வளர்ச்சிக்கு விட்டமின் சி மிகவும் முக்கியம். அதே போல சருமத்திற்கு நிறமளிக்கும் கொலாஜனுக்கும் விட்டமின் சி அவசியம்.

ஃபைபர் : நல்ல நார்ச்சத்துக்கள் கிடைக்க ஒரே வழி பழங்கள், காய்கறிகள்,பருப்பு வகைகள்,நட்ஸ்,முழு தானியங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்வது தான். அதுவும் ஒரே விதமான உணவாக இல்லாமல் பல்வேறு வகையான உணவு வகைகளை எடுத்துக் கொள்வதால் உங்களுக்கு அனைத்து விதமான சத்துக்கள் கிடைப்பதுடன் உங்களுக்கு தேவையான நார்ச்சத்து கிடைத்துவிடும்.

ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உங்களுக்கு மூன்று கிராம் அளவு ஃபைபர் கிடைத்திட வாய்ப்புண்டு. ஒரு நாளைக்கு பெண்களாக இருந்தால் உங்களுக்கு 25 கிராம் ஃபைபரும், ஆண்களாக இருந்தால் 38 கிராம் ஃபைபரும் அவசியமாகும்.

பொட்டசியம் : கொய்யாப்பழத்தை அதிகம் எடுத்துக்கொள்வதால் உங்களுக்கு பொட்டாசியம் சத்து அதிகரிக்கும். உடலில் இருக்கும் திரவங்களை பேலன்ஸ் செய்ய பொட்டாசியம் மிகவும் தேவையாய் இருக்கிறது. அதோடு இது நம் நரம்புகளுக்கும் தசைகளுக்கும் தேவையாய் இருக்கிறது.

ஒரு கொய்யாப்பழத்திலிருந்து 230 மில்லிகிராம் பொட்டாசியம் கிடைத்திடும். தினமும் கொய்யாப்பழத்தை எடுத்துக் கொள்வது அதைத்தாண்டி பொட்டாசியம் அதிகமிருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்வது ஆகியவற்றினால் ஒரு நாளைக்கு உங்களுக்கு தேவைப்படும் அளவினை எளிதாக எட்ட முடியும். ஒரு நாளைக்கு உங்களுக்கு 4,700 மில்லிகிராம் அளவு பொட்டாசியம் தேவைப்படுகிறது.

ஃபோலேட் : பழங்களில் விட்டமின் ஏ, சி இருப்பதைக் காட்டிலும் பயனுள்ள விட்டமின் இன்னொன்று இருக்கிறது என்றால் அது பி விட்டமின்ஸ் தான். இதனை ஃபோலேட் என்றும் சொல்லப்படுகிறது.

ஒரு கப் சிவப்பு கொய்யாவிலிருந்து உங்களுக்கு 20 சதவீத ஃபோலேட் கிடைத்திடும். உங்கள் உடலில் இருக்கக்கூடிய டிஎன்ஏ,ஆர்.என்.ஏ மற்றும் புதிய செல்களுக்கு ஃபோலேட் மிகவும் அவசியமாகும். உங்கள் உடலில் போதுமான அளவு ஃபோலேட் கிடைக்கவில்லை என்றால் மெகலோப்ளாஸ்டிக் அனீமியா எனப்படுகிற குறைபாடு ஏற்படக்கூடும் அதோடு உங்களது சருமம்,தலைமுடி, நகங்கள் ஆகியவை பாதிக்கப்படும். ஃபோலேட் பெண்களின் தாய்மை பேருக்கும் முக்கிய பங்காற்றுகிறது.

புற்றுநோய் : சிவப்பு கொய்யாப்பழத்தில் லைகோபென், க்வர்செடின், விட்டமின் சி மற்றும் பிற பாலிஃபினால்கள் இருக்கின்றன இவை நம் உடலில் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் போல செயல்படுகிறது. இவை போதுமான அளவு இருந்தால் மட்டுமே நம்முடைய செல் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது. இதனைச் சாப்பிடுவதால் மார்பக புற்றுநோய்,கேன்சர் புற்றுநோய் வராமல் தவிர்க்க முடியும்.

சர்க்கரை நோயாளிகள் : இதில் அதிகப்படியான நார்ச்சத்துக்களும் குறைந்த க்ளைசமிக் இண்டெக்ஸும் இருக்கின்றன. இதனைச் சாப்பிடுவதால் நம் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுவதை தவிர்க்க முடியும். அதனால் சர்க்கரை நோயாளிகள் இந்த பழம் சாப்பிட்டவுடன் சர்க்கரை அளவு கூடிடுமோ என்கிற அச்சம் கொள்ளத் தேவையில்லை.

இதயம் : சிவப்பு கொய்யாப்பழம் சாப்பிடுவதினால் அது நம் உடலில் சோடியம் மற்றும் பொட்டாசியத்தினை பேலன்ஸ் செய்திடும். அதோடு ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளும், இதனால் ஹைப்பர் டென்சன் குறைந்திடும்.

அதோடு சிவப்பு கொய்யாப்பழம் ட்ரிக்ளிசிரைட்ஸ் மற்றும் கெட்டக் கொழுப்பினை நீக்கவும் துணை நிற்கிறது. இதனால் இதயம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தவிர்க்க முடியும். கெட்டக்கொழுப்பை குறைப்பதுடன் நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது இந்த சிவப்பு கொய்யா.

கர்ப்பம் : இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான விட்டமின் பி 9 இடம்பெற்றிருக்கிறது. இவை, குழந்தையின் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவிடும்.இதனால் குழந்தை கருவில் உருவாகும் போது ஏற்படுகிற குறைபாடுகளை நாம் தவிர்க்க முடியும். கர்ப்பிணிகள் இதனை தாரளமாக சாப்பிடலாம்.

ஸ்ட்ரஸ் : இன்றைக்கு பெரும்பாலானோருக்கு இருக்கக்கூடிய மிக முக்கியமான பிரச்சனைகளில் ஸ்ட்ரஸ் முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. சிவப்பு கொய்யாப்பழம் நம் தசைகளையும் நரம்புகளையும் அமைதிப்படுத்த உதவிடும். நாள் முழுவதும் களைப்பாக வேலை செய்துவிட்டு சோர்வாக இருக்கும் போது, உங்களை புத்தாக்கம் செய்து கொள்ள சிவப்பு கொய்யா பெரிதும் உதவிடுகிறது.

மூளை : சிவப்பு கொய்யாவில் விட்டமின் பி3 மற்றும் விட்டமின் பி6 இருக்கும். இதனை நியாசின் மற்றும் பைரிடாக்சின் என்று குறிப்பிடுவார்கள். இது மூளையின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் இதனால் தலைவலி, டென்ஷன் ஆகியவை ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

இருமல் : மற்ற பழங்களை விட கொய்யாப்பழத்தில் விட்டமின் சி மற்றும் இரும்புச் சத்து நிறையவே இருக்கிறது. இவை நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்திடும். இதனால் வைரஸ் தொற்றுகளினால் உங்களுக்கு ஏற்படக்கூடிய காய்ச்சல், இருமல், சளித்தொல்லை ஆகியவற்றிலிருந்து எளிதாக தப்பிக்க முடியும்.3 1519881115

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button