ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

எலும்பு தேய்மானத்தை தடுக்க வழிமுறைகள்

 

எலும்பு தேய்மானத்தை தடுக்க வழிமுறைகள் வயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம் வருவது இயற்கை. ஆனால் உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்த்தல், கால்சியம் சத்துக்குறைபாடான உணவு பழக்கம், பாஸ்ட் புட் உணவுகள் சாப்பிடும் பழக்கம் என எலும்புத் தேய்வுக்கு மேலும் பல காரணங்கள் உள்ளன.

எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா. மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகளில் மாற்றங்கள் தொடர்ச்சியாக இருக்கும். எலும்புகளுக்கான அடிக்கட்டமைப்பை புரதங்கள் வலுவாக்குகின்றன.

கால்சியம், பாஸ்பேட் போன்ற மினரல்கள் எலும்புகளுக்கு இடையில் பரவி மேலும் வலு சேர்க்கிறது. இந்த இயக்கம் உடலில் தொடர்ந்து இருப்பதால் உணவில் அதிக கால்சியம் தேவைப்படுகிறது.

இதற்கு சிறு வயது முதல் பால் மற்றும் பச்சைக் காய்கறிகள் போதுமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உடல் உட்கிரகித்துக் கொள்வதற்கான உணவு மற்றும் உடற்பயிற்சிகளை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

எலும்பைப் பொறுத்தவரை அளவுக்கு மீறி அழுத்தம் கொடுப்பது மற்றும் விபத்துக்களினால் எலும்பு முறிவு ஏற்படும். காயங்களினால் ரத்தக்கட்டு உண்டாகும். மினரல்கள் இழப்பு காரணமாக எலும்புத் தேய்வு ஏற்படும். எலும்புத் தேய்வின் அறிகுறியாக உடலில் வலி ஏற்படுகிறது.

எலும்பு வலுவிழக்கும் போது உடல் எடை முழுவதையும் தசைப்பகுதி தாங்குகிறது. இதனால் தசையும் பலவீனம் அடையும். உடல் சோர்வு, வலி, வீக்கம் ஏற்படலாம். மூட்டுப்பகுதியில் வீக்கம் உண்டாகும். உடலை அசைப்பதே கடினமாக இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய துவங்கும்.

எலும்புத் தேய்மானம் ஏற்படுவதை தடுக்க கால்சியம் உள்ள உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும்.

மேலும் உடற்பயிற்சி செய்யும் போது எலும்புக்கு தேவையான தாதுக்கள் தசைப்பகுதியில் இருந்து உட்கிரகிக்கப்படும். இதனால் சத்தான உணவு சாப்பிட்டாலும் உடற்பயிற்சி கட்டாயம் அவசியம்.

இதில் எலும்பின் வலிமைக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைத்து விடுகிறது. இதனால் எளிமையான நடைப்பயிற்சி, வீட்டு வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும்.

எலும்பு மற்றும் மூட்டுக்களில் வலி காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி எலும்பு உறுதித் தன்மை குறித்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் எலும்பில் தாதுக்களின் குறைபாடு அளவு அறிந்து அதற்கு தகுந்த சிகிச்சை செய்து கொள்ளலாம்.

பாதுகாப்பு முறை: சிறு வயது முதல் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்ளலாம். உட்கார்ந்த நிலையில் வேலை செய்பவர்கள் நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி மூலம் தங்கள் எலும்பை உறுதி செய்து கொள்ளலாம்.

உடல் எடை அதிகரிப்பின் காரணமாக எலும்பின் உறுதித் தன்மை குறையும். எலும்பின் உறுதி குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு மற்ற நோய்கள் உடலை எளிதில் தாக்க வாய்ப்புள்ளது.

பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்பட்ட பின்னர் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப்பு குறையும். இதனால் எலும்புத் தேய்வு ஏற்படும். கால்சியம் குறைபாடு ஏற்படும்.

எனவே இந்த சமயத்தில் பெண்கள் முழு கவனத்துடன் இருந்து கால்சியம் சத்துள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வயதானவர்களுக்கு ஆஸ்டியோபீனா எனப்படும் எலும்பு கொழகொழப்புத் தன்மை அடைகிறது. இதனால் உடல் எடையை தாங்க முடியாமல் கால்கள் வளைந்து விடும்.

ஆஸ்டியோபோரசிஸ் என்ற பாதிப்பால் கீழே விழுந்தால் கூட எலும்பு உடைந்து விடும். எனவே எலும்பின் உறுதியைப் பாதுகாப்பது மிகவும் அவசியம்.

ரெசிபி

பொன்னாங்கன்னிக் கீரை கட்லட்: பொன்னாங்கன்னிக் கீரை இரண்டு கட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி எண்ணெய்யில் வதக்கி கொள்ளவும். பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ் பூன், கரம்மசாலா ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு எடுத்து அவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும்.

பின்னர் கீரையுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடை பதத்துக்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டி பிரட் தூளில் உருட்டி தோசைக்கல்லில் வேக வைத்து எடுக்கவும். பொன்னாங்கன்னி கீரையில் கால்சியம் சத்து உள்ளது.

ஓட்ஸ் குருமா: 

பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சோம்பு உள்ளிட்ட மசாலா பொருட்கள் 1 டீஸ்பூன் எடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 2 வெங்காயம், தக்காளி, 2 கப் ஓட்ஸ் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

இத்துடன் அரைத்த விழுது, கொத்தமல்லி தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கொதித்த பின் இறக்கவும். சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். கால்சியம் சத்து அதிகம் உள்ளது.

பிரட் தோசை: தோசை மாவு இரண்டு கப் எடுத்துக்கொள்ளவும். அதில் பச்சை மிளகாய் 2, வெங்காயம் 1, கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி மாவில் கலந்து கொள்ளவும். பிரட் துண்டுகளை மாவில் போட்டு தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும். இதில் தேவையான அளவு கார்போஹைட்ரேட் கிடைக்கிறது.

டயட்

பழங்கள், மற்றும் பச்சைக் காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரை, தானியங்கள், ஓட்ஸ், கொண்டைக்கடலை, கொள்ளு, பருப்பு, கேழ்வரகு ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணக் காய்கறிகள் மற்றும் பழங்களும், மக்காச்சோளம் ஆகியவற்றையும் உணவில் சேர்க்கவும். அசைவ உணவுகள் வாரம் ஒரு முறை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். தினமும் ஒரு முட்டை வேகவைத்து சாப்பிட வேண்டும்.

சுண்ட காய்ச்சிய பால் ஒரு நாளைக்கு நான்கு டம்ளர்கள் அருந்த வேண்டும். காய்கறிகளை அரை வேக்காட்டில் சாப்பிடுவதன் மூலம் கால்சியம் சத்து முழுமையாக கிடைக்கும். உலர்ந்த திராட்சை, பாதாம், காலிபிளவர், முட்டைக்கோஸ், வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழைப்பழம், மாதுளை மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவு வகைகளையும் தினமும் உணவில் சேர்க்கவும். சின்ன வெங்காயம் குழம்பில் சேர்க்கலாம். என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

பாட்டி வைத்தியம்

அத்திக்காயை வேக வைத்து சிறுபருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் கை, கால் வலிகள் நீங்கும்.

அதிவிடயம், எள், வெள்ளரி விதை மூன்றும் தலா 100 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து கொள்ளவும். காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதிப்படும்.

அமுக்காரா, ஏலக்காய், சுக்கு, சித்திரத்தை ஆகியவற்றில் தலா 100 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும் இதில் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகும்.

மூட்டு வலிக்கு அவுரி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.

ஆடாதொடா இலையை கஷாயம் வைத்து குடித்தால் உடல் குடைச்சல் குணமாகும்.

ஆளி விதை 100 கிராம் பொடி செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

இலுப்பைக் கொட்டையில் இருந்து எண்ணெய் எடுத்து இடுப்பில் தேய்த்தால் நிவாரணம் பெறலாம்.

உளுந்து, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து அதில் வெந்நீரில் கலந்து பற்று போட்டால் மூட்டு வாதம், மூட்டு வலி குணமாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button