ஆரோக்கிய உணவு

படிக்கத் தவறாதீர்கள்! 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகள்

ஊட்டச்சத்து மிக்க உணவுதான் ஆரோக்கியமான வாழ்விற்கு முதல்படி. பெற்றோர்களின் முதல் வேலையே குழந்தைகளுக்கு உணவு மீது ஆர்வத்தை வர வைப்பதுதான். 1 முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு என்னென்ன கொடுக்க வேண்டும், எப்படிக் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் வினிதா.

“ஒரு வயதானதும் குழந்தைகளுக்கு அனைத்து வகை உணவுகளையும் கொடுக்கலாம். குழந்தைகளுக்கென பிரத்யேகமாக செய்யவேண்டியதில்லை. வீட்டில் அனைவரும் சாப்பிடும் உணவுகளையே குழந்தைகளும் சாப்பிடப் பழக்கவேண்டும். அசைவ உணவாக இருந்தாலும் ஒரு வயதிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்துப் பழக்குவது நல்லது.

பெரியவர்களைப் போலவே குழந்தைகளுக்கும் 3 வேளை திட உணவும் 2 வேளை ஸ்நாக்ஸும் கொடுத்துத் பழக்கவேண்டும். 6 மாதக் குழந்தைக்கு கொடுப்பது போல் நன்றாக மசித்துக் கொடுக்க வேண்டியதில்லை. ஒரு வயதானதும் குழந்தைகளுக்கு உணவின் தன்மையும் ருசியும் அறிய முடியும். அதனால், மசித்துக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. குழந்தைகளுக்கென தனியாக தட்டு வைத்து சாப்பிடப் பழக்கவேண்டும்.

குழந்தைகள் மெதுவாகத்தான் சாப்பிடப் பழகுவார்கள். உணவுகளைச் சிந்துவதால் குழந்தைகளை மிரட்ட வேண்டாம். குழந்தைகள் ஸ்பூன் பிடிப்பதை, சாப்பிடுவதை கொஞ்சி, பாராட்டி, ஊக்கப்படுத்த வேண்டும்.

விதவிதமான கப்கள், தட்டு மற்றும் ஸ்பூன்களை கொடுத்துச் சாப்பிடும் முறையை தினமும் புதுப்பித்துக் கொண்டே இருங்கள். குழந்தைக்கென்று தனியாக சாப்பாடு வைக்காமல் பெற்றோர்கள் சாப்பிடும் நேரத்திலே தனியாக தட்டு வைத்து சாப்பிடப் பழக்கவேண்டும். குழந்தைகளுக்கு ஒரு சுவை பிடிக்கவில்லையென்றால் வலிந்து அவர்களுக்கு திணிக்காதீர்கள். அவர்களைப் பொறுமையாக கையாளுங்கள்.

எல்லா வகையான பழங்களும், கீரை, முட்டை, பருப்பு வகைகள், மீன், மட்டன், சிக்கன், போன்ற அனைத்தையும் கொஞ்ச கொஞ்சமாக கொடுத்துப் பழக்கவேண்டும். வளரும் குழந்தைகளுக்கு கால்சியம் அதிகமாகத் தேவைப்படும் என்பதால் பால் தினமும் கொடுக்க வேண்டும். குழந்தைகள் சரியாக சாப்பிடவில்லையென்றால் அடித்து வற்புறுத்தக்கூடாது என்று கூறுகிறார். சாப்பிடவில்லையென்றால், அதற்கான காரணம் என்ன என்பதை பெற்றோர் கண்டு பிடிக்கவேண்டும். 6 மாதத்திற்கு ஒருமுறை குழந்தைகளுக்கு டி- வார்ம் செய்யவேண்டும். ஸ்நாக்ஸாக பிஸ்கட்கள் கொடுப்பதை தவிர்க்க வேண்டுமென்கிறார்.

குழந்தைகளுக்கு முதலில் பசும்பால் கொடுக்கும்போது அதன் சுவை பிடிக்காமல் போகலாம், பசும்பாலுடன் ஃபார்முலா மில்கை சேர்த்து ஆரம்பத்தில் கொடுத்து, பின்னர் படிப்படியாக ஃபார்முலா பாலை நிறுத்தவிடலாம். அனைத்து வகையான பழச்சாறுகளும் கொடுக்கலாம். ஆனால் சளி காய்ச்சல் இருந்தால் மட்டும் சிட்ரிக் நிறைந்த ஆரஞ்சு மற்றும் லெமன் ஆகிய பழச்சாறினை கொடுப்பதை முற்றிலுமாக தவிர்த்துவிட வேண்டும். குழந்தைகள் விழுங்குவதற்கு சிரமமாக இருக்கும் நட்ஸ்கள், உலர் திராட்சை, திராட்சை பழங்கள் ஆகியவற்றை தவிர்த்துவிடுவது நல்லது. குழந்தைகளுக்கு நன்றாக கடித்து மென்று சாப்பிடும் பழக்கம் வந்ததும் நட்ஸ்களை கொடுத்துப் பழக்கலாம்.

எந்தவொரு புதிய உணவு கொடுத்தாலும் குழந்தைகளின் உடல் ஏற்றுக்கொள்ள சிறிது காலமெடுக்கும். லூஸ் மோஷன் போகவும் வாய்ப்புள்ளது என்பதால், எந்த உணவு குழந்தைகளின் உடலுக்கு சேரும் என்பதை கண்காணித்து வர வேண்டும்.

சாப்பாட்டை கண்டாலே குழந்தைகள் ஓடுவதைப் பார்க்கலாம். பெற்றோர்களின் நடைமுறைதான் குழந்தைகளுக்கு உணவின் மீதான வெறுப்பு உண்டாக்கக் காரணம். சாப்பிடும் நேரத்தை மகிழ்ச்சியான தருணமாக மாற்றவது மிக முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்’’ low cal diet

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button